புதிய வீரர்களுடன் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கால்பந்து அணி

756

இலங்கை தேசிய கால்பந்து அணியின்18 பேர்கொண்ட வீரர்கள் குழாம், மூன்று மாதங்களுக்கு பின்னரான பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 

FIFA உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் திகதிகள் அறிவிப்பு

இலங்கை கால்பந்து அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமீர் அலர்ஜி, இந்த 18 பேர்கொண்ட வீரர்கள் குழாத்தை பெயரிட்டுள்ளார். இலங்கை கால்பந்து அணி எதிர்வரும் 22ம் திகதி வதிவிட பயிற்சிகளை, பெத்தகானவில் ஆரம்பிக்கவுள்ளது. இந்த பயிற்சி முகாம் மூன்று வாரங்களுக்கு நடைபெறவுள்ளது. 

நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாமில் வீரர்களின் உளவியல் மற்றும் உடற்தகுதி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமீர் அலர்ஜி தெரிவித்துள்ளார். எனினும், வெளிநாட்டில் தங்கியுள்ள வீரர்கள் இலங்கைக்கு வருகைத்தந்த பின்னர், குழாத்தில் மாற்றங்கள் இடம்பெறலாம் என இவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பெத்தகானவில் உள்ள பயிற்சி முகாமில், இலங்கை கால்பந்து சம்மேளனம் சுகாதார அமைச்சின் நிபந்தனைகளுடன் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. வீரர்களின் சுகாதாரத்தினை கருத்திற்கொண்டு பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ள குழாத்தில், பங்கபந்து கால்பந்து தொடர் மற்றும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய வீரர்களை தவிர, ஏனைய சில வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்.ஏ. கிண்ணத் தொடரில் பொலிஸ் கழகத்துக்காக சிறப்பாக விளையாடிவந்த இளம் கோல்காப்பாளர் மஹேந்திரன் தினேஷ் இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ளதுடன், அதே அணியின் சக வீரரான ரிப்கான் மொஹமட்டும் குழாத்தில் இடம்பெற்றுள்ளார். 

அதேநேரம் கொழும்பு கால்பந்து கழக அணியின் சிரேஷ்ட வீரர் நிரான் கனிஷ்கவும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், 19 வயதுக்குட்பட்டோர் அணியிலிருந்த அப்துல் பர்சித் தேசிய அணியின் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, கடந்த ஒன்றரை வருடங்களாக உபாதையினால் அவதிப்பட்டுவந்த தேசிய அணியின் முன்னாள் வீரர் அபீல் மொஹமட் தேசிய அணியுடனான பயிற்சிக்கு திரும்பியுள்ளதுடன், ஜாவா லேன் அணியின் ரிப்கான் பைசர் சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர், குழாத்துக்கு திரும்பியுள்ளார். 

அதேநேரம், டிபெண்டர்ஸ் கால்பந்து கழக அணியின் அசிகுர் ரஹ்மான் மற்றும் ரினௌன் அணியின் சிவகுமாரன் ரூபன்ராஜ் ஆகியோரும் 18 பேர்கொண்ட குழாத்தில் புதிய வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். ரூபன்ராஜ் யாழ்ப்பாண வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பயிற்சிக்கான இலங்கை குழாம் 

ருவான் அருணசிறி (Goalkeeper), மஹேந்திரன் தினேஷ் (Goalkeeper), ஷலன சமீர (Full Back), சிவகுமார் ரூபன்ராஜ் (Full Back), நிரான் கனிஷ்க (Full Back), டக்ஸன் ப்யூஸ்லஸ் (Center Defender), ஜூட் சுமன் (Center Defender), ஷரித ரத்நாயக்க (Center Defender), அசிகுர் ரஹ்மான் (Defensive Midfielder), அபீல் மொஹமட் (Defensive Midfielder), மொஹமட் பஸால் (Center Midfielder), சபீர் ரஷூனியா (Center Midfielder), ரிஸ்கான் பைசர் (Attacking Midfielder), சஜித் குமார (Right Wing), அப்துல் பாசித் (Right Wing), கவிந்து இஷான் (Left Wing), ரிப்கான் மொஹமட் (Center Forward), திலிப் பீரிஸ் (Center Forward)

  >> மேலும் கால்பந்து செய்திகளை படிக்க <<