தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்காத வீரர்களுக்கு 2 வருட போட்டித் தடை

125

விளையாட்டுத்துறை அமைச்சினால் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யப்படுகின்ற தேசிய விளையாட்டு பெரு விழாவில் பங்கேற்காத வீரர்களுக்கு இரண்டு வருட போட்டித்தடை விதிக்க விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதன்படி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவை தகுந்த காரணங்கள் இன்றி புறக்கணித்த சகல வீரர்களுக்கும் எதிர்வரும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாக்களில் பங்கேற்கத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தெரிவித்துள்ளார்.

அஷ்ரப் தலைமையிலான 4×100 அஞ்சலோட்ட அணிக்கு இரண்டாமிடம்

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக……

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 45 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 3 தினங்களாக பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இம்முறை போட்டித் தொடரில் பங்ககேற்பதற்கு பல தேசிய மட்ட வீரர்கள் தகுதிபெற்றிருந்தாலும், இறுதி நேரத்தில் போட்டிகளிலிருந்து விலகிக் கொண்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பேசிய விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல, 

இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பல வீரர்கள் பங்கேற்றிருந்தனர். எனினும், தேசிய குழாம்களில் இடம்பெற்ற பல முன்னணி வீரர்கள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கவில்லை என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

உண்மையில், இந்தப் போட்டிக்குப் பிறகு தேசிய குழாத்தில் உள்ள ஒருசில வீரர்கள் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். 

எனவே, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதால் அவர்களுக்கு உபாதைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்ற அச்சம் ஏற்படலாம். ஆகவே, அவ்வாறு இடையூறுகளுக்கு முகங்கொடுக்கலாம் என பயப்படுகின்ற ஒருசில வீரர்கள் எம்மிடம் விசேட அனுமதி பெற்றுக்கொண்டு இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவில்லை. 

ஆனாலும், ஒருசில வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பிய பிறகும் வேண்டுமென்றே இம்முறை தேசிய விளையாட்டு விழாவை புறக்கணித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

எனினும், இவ்வருடம் முதல் தேசிய விளையாட்டு விழாவை புறக்கணிக்கின்ற வீரர்களுக்கு இரண்டு வருட போட்டித்தடை விதிக்கப்படும் என நாங்கள் அனைத்து மாகாணங்களுக்கும் விசேட சுற்றுநிரூபம் மூலம் அறிவித்துள்ளோம். 

எனவே, இம்முறை தேசிய விளையாட்டு விழாவை எந்தவொரு முன்அறிவிப்பும் இல்லாமல் புறக்கணித்த வீரர்களுக்கு 2020 ஆம், 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெறுகின்ற தேசிய விளையாட்டு விழாக்களில் பங்கேற்பதற்கு தடை விதிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார். 

35 தங்கப் பதக்கங்களை குறிவைத்து நேபாளம் செல்லும் இலங்கை அணி

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் ஏற்பாடு…..

இதேநேரம், இலங்கை இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் கடமை புரிகின்ற வீரர்களும் இவ்வாறு தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்க விடுமுறை எடுத்துக் கொண்டு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளது. 

எனவே, இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<