பலோன் டீ ஓர் விருதை ஆறாவது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி

80
Lionel Messi Wins 2019 Ballon d'Or

கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (02) பிரான்சில் கோலாகலமாக நடந்தேறியது. 2019இன் மிகச்சிறந்த வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட 30 வீரர்களின் அர்ஜென்டீனா மற்றும் பார்சிலோனா அணிகளின் அணித்தலைவரும் இம்முறை அதிக கோல் அடித்தவருக்கான தங்கப்பாதணியை வென்ற லியோனல் மெஸ்ஸி குறித்த விருதை வென்றார். 

கடந்த பருவகாலத்தில் ரியல் மட்ரிட்டில் இருந்து பிரிந்து இத்தாலியின் ஜுவன்டஸ் அணிக்காக ஆடி Serie A கிண்ணத்தை வென்று கொடுத்தவரும் போர்த்துக்கல்லின் அணித் தலைவருமாகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, இம்முறை பிரமிக்கத்தக்க வகையில் பார்சிலோனா கழகத்தை அரையிறுதியில் வீழ்த்தி சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை தம்வசப்படுத்திய லிவர்பூல் அணியின் பின்கள வீரர் வான் டிஜிக், அவ்வணியின் கோல் காப்பாளர் அலிஸ்சன், முன்கள வீரர் மானே ஆகியோருக்கிடையில் இவ்விருதை பெற்றுக்கொள்வதில் கடும்போட்டி நிலவியது.

இறுதியில் பார்சிலோனா கழகத்திற்கு இம்முறை லாலிகா கிண்ணத்தை வென்று கொடுத்தவரும், இந்தப்பருவக்காலத்தில் 46 கோல்களும், 17 கோல் உதவிகளையும் செய்து கழக மற்றும் தேசிய அணிகளுக்காக மொத்தமாக 63 கோல்கள் பெற்றுக்கொள்ள காரணமாக இருந்தவருமான லியோனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாக பலோன்-டீ-ஆர் விருதை தனதாக்கினார். 

இது வரை எந்த வீரருமே ஆறு தடவைகள் இந்த விருதைப் பெற்றதில்லை. இதற்கு முதல் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோர் 5 தடவைகள் இவ் விருதை வென்றதே உலக சாதனையாக இருந்தது. மேலும் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையும் மெஸ்ஸிக்கு உண்டு. இவர் 2009, 2010, 2011, 2012, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இவ்விருதை பெற்றிருக்கிறார். 

”இவ் விருது தனக்கு மட்டும் உரியதல்ல வெற்றிக்காக உழைத்த தன் சக வீரர்கள் ஒவ்வொருவருக்கும் உரியது” என நன்றி தெரிவித்த மெஸ்ஸியை வாழ்த்துவதில் நாமும் பெருமை கொள்கிறோம். 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<