சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் பிரையன் லாரா

Lanka Premier League 2022

141

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

IPL தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டொம் மூடி 2013 முதல் 2019 வரை முதலில் பணியாற்றினார்.

அந்தக் காலக்கட்டங்களில் 5 முறை பிளே-ஓப்புக்குத் தகுதி பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2016இல் IPL சம்பியனாக மகுடம் சூடியது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த அணியின் இயக்குநராக மூடி நியமிக்கப்பட்டதுடன், இந்த ஆண்டு மீண்டும் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதாபாத் அணி IPL தொடரில் மிக மோசமாக விளையாடியது. 2021 இல் 3 வெற்றிகளை மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, இந்த ஆண்டு 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8ஆவது இடத்தையே பிடித்தது.

அத்துமாத்திரமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 28 போட்டிகளில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு சமநிலை என IPL தொடரில் மிகவும் பலவீனமான அணியாகவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளங்கியது.

இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் – டொம் மூடி என இரு தரப்பும் பிரிந்து செல்ல முடிவெடுத்தன. இது இவ்வாறிருக்க, 2023 ஜனவரியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ILT20 போட்டியில் டெசர்ட் வைபர்ஸ் அணியின் இயக்குநராக டொம் மூடி நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா, 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த டொம் மூடியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது என்றும் டொம் மூடி வழங்கிய பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் எனவும் அறிவித்திருந்தது.

இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராகவும், துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் பிரையன் லாரா பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, T20 Franchise அணியொன்றின் தலைமைப் பயிற்சியாளராக பிரையன் லாரா முதல்தடவையாக செயல்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<