ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள முதலாவது திருநங்கை

Tokyo Olympics - 2020

243
REUTERS

நியூசிலாந்தின் பளுதூக்கல் நட்சத்திரமும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவருமான லோரெல் ஹபார்ட் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

இதன்மூலம், ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள முதலாவது மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த (திருநங்கை) வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

ஒலிம்பிக் வாய்ப்புக்காக காத்திருக்கும் இலங்கை மெய்வல்லுனர்கள்

உடலில் டெஸ்டோஸ்டிரொனின் மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக இருக்கும் திருநங்கை போட்டியாளர்கள் பெண்களாக போட்டியிடும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் குழு 2015இல் விதிகளை மாற்றியதன் பலனாக லோரெல் ஹபார்ட், முதலாவது திருநங்கையாக இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபெறுவதற்கு வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளார்.  

இதன்படி, இம்முறை ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 87 கிலோ கிராம் Super Heavy Weight எடைப்பிரிவில் அவர் போட்டியிட உள்ளார்

அதேபோல, 43 வயதான லோரெல் ஹபார்ட் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள அதிக வயதுடைய பளுதூக்கல் வீராங்கனையாவார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013இல் திருநங்கையாக மாறுவதற்கு முன்னர் அவர் ஆண்களுக்கான போட்டிகளிலேயே பங்குபற்றிவந்தார்.

அதுமாத்திரமின்றி, திருநங்கையாக மாறிய பிறகு கடந்த 2017இல் நடைபெற்ற உலக பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2019 சமோவாவில் நடைபெற்ற பசுபிக் விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றுள்ளார்

அதேபோல, 2020ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற பளுதூக்கல் உலகக் கிண்ணத்தில் 87 கிலோ எடைப் பிரிவில் அவர் தங்கம் வென்றார்.

அத்துடன், 2018 அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொநலவாய விளையாட்டு விழாவிலும் இவர் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், காயம் ஏற்பட்டதால் அவரால் குறித்த தொடரில் கலந்துகொள்ள முடியவில்லை

இப்படி பல சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தாலும், ஒலிம்பிக் என்பது அவருக்கு எட்டாக் கனவாகவே இருந்தது. ஆனால், தற்போது அது நிறைவேறப்போகிறது.

இதேவேளை, இது ஒலிம்பிக்கில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். இது நியூசிலாந்து நாட்டுக்கு பெருமையாகும் என நியூசிலாந்து ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது

சுவீடனில் வளர்ந்து இலங்கை சார்பாக ஒலிம்பிக் செல்லும் மெட்டில்டா கார்ல்சன்

அதேபோல, அநேகமான நியூசிலாந்தினர் என் மீது காட்டும் பரிவுக்கும் வழங்கும் ஆதரவுக்கும் நான் பணிவடக்கத்துடன் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என நியூசிலாந்து ஒலிம்பிக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் லோரெல் ஹபார்ட் குறிப்பிட்டுள்ளார்

எதுஎவ்வாறாயினும், லோரெல் ஹபார்ட்டை ஒலிம்பிக்கில் பங்குபற்றச் செய்வது தொடர்பான தீர்மானத்திற்கு பல தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

அதுமாத்திரமின்றி, நியூசிலாந்து பளுதூக்கல் வீராங்கனைகள் மத்தியில் இது சில எதிர்வினைகளையும் ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க …