UAE அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் இந்திய வீரர்

106

ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அவர் பணியாற்றவுள்ளார்.

இதுவரை காலமும் அந்த அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக முதஸ்ஸர் நசார் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தன்னுடைய புதிய நியமனம் தொடர்பில் லால்சந்த் ராஜ்புத் கருத்து தெரிவிக்கையில், ‘ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கபட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். கடந்த சில வருடங்களாக ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் அணி திறமை மிக்க அணியாக செயல்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு இராச்சியம் அணியில் தற்போது உள்ள வீரர்கள் எல்லாம் அதிக உத்வேகத்துடனும், திறமை மிக்கவராகவும் இருந்து வருகின்றனர்.

கடந்த சில T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரபு இராச்சியம் கிரிக்கெட் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் எமது கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நான் பயிற்சியாளராக பணியாற்ற போகும் இந்த மூன்று வருடங்களில் ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் அணியை ஒரு நல்ல திறமை மிக்க அணியாக மாற்றுவேன். அதுவே எனது இலக்காக நான் பார்க்கிறேன். அதற்காக நான் முழு முனைப்போடு செயல்படுவேன்’, என்று லால்சந்த் ராஜ்புத் கூறி உள்ளார்.

இதனிடையே, ஸ்கொட்லாந்து மற்றும் கனடாவுக்கு எதிராக இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலகக் கிண்ண லீக் 2 முத்தரப்புத் தொடர் தான் லால்சந்த் ராஜ்புத் பயிற்சியாளராக செயல்படும் முதல் தொடராக அமையவுள்ளது.  அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் ஸ்கொட்லாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரிலும் ஐக்கிய அரபு இராச்சியம் அணி விளையாடவுள்ளது.

இந்திய அணிக்காக 1985 – 1987 வரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள லால்சந்த் ராஜ்புத், இந்தியாவுக்காக மிகக் குறைவான போட்டிகளில் மாத்திரம் விளையாடிய பிறகு ஓய்வு பெற்றார்.

அதன் பின் 2007ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். அதன்பிறகு 2016-17 காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார். அவர் பயிற்சியாளராக இருந்த காலப்பகுதியில் தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐசிசி இன் டெஸ்ட் அந்தஸ்த்து கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அவர், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக பணியாற்றி அந்த அணியை T20 உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற வைத்தார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<