திரிமான்ன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம்

979
Lahiru Thirimanne

இந்த வாரத்தின் முற்பகுதியில் வரலாற்றில் மிகவும் மோசமான டெஸ்ட் தோல்வியை இந்தியாவுடன் சந்தித்த இலங்கை அணி, நாளை (2) டெல்லி நகரில் ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமது அயல் நாட்டுடன்  நல்ல முடிவுகளை எதிர்பார்த்து தமது குழாமில் சில மாற்றங்களை செய்யவுள்ளது.

முன்னணி சுழல் வீரரான ரங்கன ஹேரத், தற்போது முதுகு உபாதை ஒன்றின் காரணமாக நாடு திரும்பியிருக்கின்ற இந்த நிலையில் விருந்தாளிகளாக இந்தியாவுக்கு சென்றிருக்கும் இலங்கை அணியினர் தமது பந்து வீச்சுத்துறையிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதோடு, துடுப்பாட்டத்திலும் சில மாற்றங்களை செய்ய எத்தனித்துள்ளனர். இந்த அடிப்படையில், இலங்கை டெஸ்ட் அணியின் உப தலைவரான லஹிரு திரிமான்ன இந்தியாவுடனான நாளைய டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகின்றது.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை டெஸ்ட் குழாமில் இணைந்த திரிமான்ன அதிலிருந்து இன்று வரை மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றார். ஒரு துடுப்பாட்ட வீரருக்குரிய மனநிலையைக் காட்டாத திரிமான்ன பற்றி அனைவரிடமும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளது.

இலங்கையை வீழ்த்தி சாதனை புத்தகத்தில் இடம்பெற காத்திருக்கும் இந்தியா

டெல்லி, பெரோஸ் ஷாஹ் கொட்லா மைதானத்தில் நாளை (02) ஆரம்பமாகவிருக்கும்..

ஏற்கனவே, மோசமான ஆட்டத்தைக் காட்டியிருந்த காரணத்தினால், கடந்த வருடத்தின் ஜூன் மாதத்தில்இலங்கை அணியில் இருந்து திரிமான்ன நீக்கம் செய்யப்பட்டிருந்தார். எனினும், முக்கிய சில வீரர்களின் உபாதைகள் அவருக்கு இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை ஒரு நாள் அணியில் இணைவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. அணியில் இணைந்த திரிமான்ன உள்ளூர் போட்டிகளிலும் அண்மைய நாட்களில் சிறந்த பதிவைக் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டிகளை அடுத்து 28 வயதான திரிமான்ன ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கையின் உப தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 0, 7ஆகிய  ஓட்டங்களையே குவித்த இவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. இத்தொடரினை அடுத்து இந்திய டெஸ்ட் அணியுடனான குழாமிலும் இலங்கை அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு திரிமான்னவுக்கு கிடைத்தது.

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அரைச்சதம் ஒன்றை திரிமான்ன கடந்திருந்த போதிலும் அடுத்தடுத்த இன்னிங்சுகளில் (துடுப்பாட்ட வீரர் போல் அல்லாது) மோசமான ஒரு ஆட்டத்தை வெளிக்காட்டி குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றிருந்தார். இலங்கை அணிக்காக மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கும், திரிமான்னவிடம் இப்படியான ஆட்டத்தை இலங்கை அணியின் முகாமைத்துவம் எதிர்பார்க்கவில்லை.

“மூன்றாம் இலக்கத்தில் ஒருவர் துடுப்பாடுவது அவருக்கு முக்கியமான பொறுப்பு ஒன்று, இப்படியாக இருக்கும் உங்களுக்கு போட்டியின் முதல் ஓவரிலேயே மைதானத்துக்குச் செல்ல வேண்டி ஏற்படும் அல்லது இரண்டு, மூன்று போட்டி இடைவெளிகளுக்கு ஓய்வறையிலேயே இருக்க வேண்டி ஏற்படும். இந்த இரண்டு நிலைகளிலும் உறுதியான மனப்பாங்கோடு நீங்கள் காணப்பட வேண்டும்“ என இலங்கை அணிக்காக சிறப்பான மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக ஒரு காலத்தில் செயற்பட்ட இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரமவின் விக்கெட்டினை அடுத்து திரிமான்னவும் விரைவாக ஆட்டமிழப்பது, இலங்கை அணியின் மத்திய வரிசையை (விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்து) பலவீனப்படுத்தும் ஒரு காரணியாக மாறுகின்றது எனவும் குருசிங்க பின்வருமாறு கூறினார்.

“எங்களை அது (திரிமான்ன விரைவாக ஆட்டமிழப்பது) மிகவும் பாதிக்கின்றது. அது பொய் என்றால் நாங்கள் இல்லை என்று கூறியிருப்போம். திரிமான்ன மிகவும் பரிதாபமாக பந்துகளை கையாள்கின்றார். அது அவருக்கு இருக்க கூடாத ஒரு பண்பு. இதனை துடுப்பாட்ட மனநிலை என்னும் சொல் கொண்டு நீங்கள் அழைக்க முடியும். அது அவருக்கு குறைவாக இருக்கின்றது“

திரிமான்னவின் இடத்தினை இலங்கை அணியில், முன்வரிசை துடுப்பாட்ட வீரரான தனன்ஞய டி சில்வா எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்வா இலங்கை A அணியை மேற்கிந்திய தீவுகளில் வெற்றிகரமாக அண்மையில் வழிநடாத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹேரத்திற்கு பதிலாக புதிய சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கும் இலங்கை

இலங்கை அணியின் தற்போதைய பிரதான சுழற்பந்து வீச்சாளராக உள்ள சிரேஷ்ட வீரர் ரங்கன ஹேரத்…

அத்தோடு குருசிங்க தமது துடுப்பாட்ட வீரர்கள் நீண்ட நேரம் நின்று துடுப்பாட முடியாமல் இருக்கும் பிரச்சினையை இவ்வாறு சுட்டிக் காட்டியிருந்தார். “நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், எமது வீரர்கள் போட்டியில் மூன்று அல்லது நான்கு இடைவெளிகளுக்கு நின்று முழுமையாக துடுப்பாடாமல் போவதாகும். இந்த இடத்தில் நாங்கள் பெரிய சரிவு ஒன்றை எதிர் கொள்கின்றோம். ஒரு இன்னிங்சில் 400 ஓட்டங்களுக்கு கிட்டவாக நீங்கள் பெற வேண்டும் எனில், ஒரு வீரராவது குறைந்தது நீண்ட நேரத்துக்கு துடுப்பாட வேண்டும். இப்படியாக செயற்பட்டதனாலேயே எமக்கு பாகிஸ்தான் அணியுடனான தொடரில்150 ஓவர்கள் வரையில் நின்று 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து போட்டிகளில் வெற்றிபெற முடிந்தது.”

குருசிங்க மேலும் டெஸ்ட் வீரர்கள் எதிர்கொள்ளும் புதிய பிரச்சினையையும் விளக்கத் தவறவில்லை,T20 போட்டிகளில் அதிகம் விளையாடிய இளம் வீரர்கள் டெஸ்ட் குழாமில் நுழைகின்றனர்.  இப்போது பாடசாலைகளும் T20 போட்டிகளில் விளையாடுகின்றன. மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளில் கூட இப்படியாக (விரைவாக) விளையாடப்படுகின்றன. ஆனால், டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் போட்டிகள் போலவே விளையாடப்பட வேண்டும். அதன் பெயருக்கு அமைவாக (டெஸ்ட்) இவ்வகைப் போட்டிகள் உங்களது மனநிலையையும், திறமைகளையும் சோதிக்கின்றது. இச்சோதனையை எதிர்கொள்ளும் ஆற்றல் எம்மிடம் குறைவாகவே இருக்கின்றது“ எனக் கூறினார்.

எனினும், இந்திய அணியினர் இரண்டு மாதங்கள் விசேடமாக ஒதுக்கி ஐ.பி.எல் போன்ற T20 போட்டிகளில் ஆர்வம் காட்டி சிறப்பாக செயற்படுவது பற்றி குருசிங்க இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“நான் சில இந்திய பயிற்றுவிப்பாளர்கள் சிலரிடம் பிரபலமான முதல்தரத் தொடரான ரஞ்சி கிண்ணம் பற்றி பேசியிருந்தேன். நீங்கள் ரஞ்சி கிண்ணத்தினை எடுத்துப் பார்க்கும் போது அப்போட்டிகளில் ஒவ்வொரு வீரரும் பெரிய பெரிய ஓட்டங்களை குவித்திருக்கின்றனர். ஐ.பி.எல் போட்டிகளில் வீரர் ஒருவர் சிறப்பான ஆட்டத்தைக் காட்டினாலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவருக்கு ரஞ்சி கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது“

“இப்போது எல்லோரும் ஜஸ்பிரிட் பும்ரா பற்றி பேசுகின்றனர். T20 பந்துவீச்சாளரான அவரும் ரஞ்சி கிண்ண போட்டிகளில் விளையாடுகின்றார். நான் நினைக்கின்றேன் பும்ராவிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் உங்களை விளையாட வைக்க விரும்புகின்றோம். ஆக, அதற்குத் தகுதியான ஆள் என நீர் எங்களுக்க நிரூபித்துக் காட்ட வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும். ஐ.பி.எல் போட்டிகள் திறமை கொண்டவர்களை வெளிக்காட்ட இதுவரையில் எமக்கு உதவியிருக்கின்றன. எனினும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்காக அவர்கள் பல விடயங்களை வீரர்களிடம் கட்டியெழுப்ப பார்க்கின்றனர், அதனாலேயே இப்படியான செயற்பாடுகள். நானும் இலங்கை வீரர் ஒருவர் 50 இற்கு குறைவான ஓட்டங்களை டெஸ்ட் சராசரியாக காட்டும் போது அவரை அணியில் இருந்து விடுவிக்கவோ அல்லது ஓய்வளிக்கவோ கூடிய ஒரு சந்தர்பத்தை வருங்காலத்தில் கொண்டிருக்க எதிர்பார்க்கின்றேன்“ என்றார்.