பிரான்ஸின் உலகக் கிண்ண வெற்றியில் குடியேறிய சமூகத்தின் பங்களிப்பு

606

பிறந்து வளர்ந்த நாட்டுக்காக உலகக் கிண்ணத்தை வென்று கொடுக்க வேண்டும் எனும் வெறியை விட, அகதிகளான தங்களை அரவணைத்த நாட்டுக்கு மரியாதை செலுத்த வேண்டும் எனும் அன்புதான் பேரன்பு என்று சொல்வார்கள்.

ஆபிரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள், யுத்த சூழ்நிலைகள், பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பெருளாதாரத்துக்காகவும், நல்ல வாழ்வாதாரத்துக்காகவும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவது வழக்கம். ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரியா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான குடியேறிகளைக் காணமுடியும்.

உலகக்கிண்ணத்தின் மிகச்சிறந்த கோலுக்கான விருதை வென்ற பென்ஜமின் பவார்ட்

அதிலும் குறிப்பாக, இவ்வாறு குடியேறியவர்கள் அந்தந்த நாடுகளிலேயே பல வருடங்களாக வாழ்ந்து குடியுரிமையைப் பெற்றபிறகு அவர்களது குழந்தைகள் கால்பந்து விளையாட்டில் தேர்ச்சி பெற்று ஐரோப்பிய லீக் உள்ளிட்ட கழகங்களுடன் இணைந்து விளையாடி வருகின்றனர்.

எனவே இம்முறை உலகக் கிண்ண கால்பந்தில் அரையிறுக்கு தகுதிபெற்ற மூன்று அணிகளுக்கு புவியியல் அருகாமை ஒற்றுமை மட்டுமல்ல, வேறு ஒற்றுமைகளும் உள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளில் உள்ள நிறைய வீரர்கள், குடியேறிகளின் பிள்ளைகள்.

11 பெல்ஜியம் மற்றும் 6 இங்கிலாந்து வீரர்களின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் குடியேறி ஆவார். மேலும் நான்கு இங்கிலாந்து வீரர்கள் ஆபிரிக்க-கரீபியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவரான ரஹீம் ஸ்டெர்லிங், ஜமைக்காவில் பிறந்தவர்.

இதேநேரம், பிரான்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த 23 வீரர்களில் 16 வீரர்களின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே பிறந்தவர். மேலும் இருவர், பிரன்ஞ்ச் கரீபியன் தீவில் பிறந்தவர்கள். இது பிரான்ஸின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் கால்பந்து அணியில் பல பண்பாட்டு வீரர்களைக் கொண்டிருப்பது ஆச்சரியமான ஒன்று அல்ல.

இதுவரை நடைபெற்ற கால்பந்து உலகக் கிண்ணத்தில் 1998ஆம் ஆண்டில் மட்டுமே பிரான்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. பிரான்ஸின் இந்த வெற்றி, ஒருங்கிணைந்த பிரான்ஸ் சமூகத்தின் வெற்றிச் சின்னமாக கொண்டாடப்பட்டது. கலப்பின வீரர்களைக் கொண்ட இந்த அணிக்கு ”ரெயின்போ அணி” என்ற பெயரும் உள்ளது.

பிரான்ஸ் என்றதும் ஈபில் கோபுரமும், காதலும்தான் நினைவுக்கு வரும். பிரான்ஸின் மதம், கலாச்சாரம், பூர்வ குடிகள், விடுதலை இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இனி பிரான்ஸ் என்றால் உலகக் கிண்ணமும் நினைவுக்கு வரும். கூடவே, பிரான்ஸ் எப்படிப் பல தேசங்களை ஒருங்கிணைத்து இந்த உலகக் கிண்ணத்தை வென்றது என்பதும் நினைவுக்கு வரும்.

பிரான்ஸ் தற்போது வளர்ந்த நாடுகள் பட்டியலில் இருப்பதற்கு அங்கு குடியேறிய அகதிகளே காரணம். இந்தக் கதை இரண்டாம் உலகப்போரில் ஆரம்பமாகிறது. 1945இல் உலகப்போர் முடிவுக்கு வந்திருந்த சமயம் பிரான்ஸ் ஒட்டுமொத்தமாக அழிவைச் சந்தித்தது. தனது தேசத்தை மீண்டும் கட்டமைக்க மக்கள் தேவை என்பதால் அப்போதைய பிரான்ஸ் அரசு அண்டை நாடுகளான அல்ஜீரியா, ஜேர்மனி, போலந்து, போர்த்துக்கல், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்களை வேலைக்கு அமர்த்தியது.

1950இல் உலகப்போரின் துயரத்தில் இருந்து மீண்டுவந்தும் அகதிகளை அனுமதிப்பதை பிரான்ஸ் அரசு நிறுத்தவில்லை. போர் முடிந்த பிறகு, 1950இல் இருந்து 1965 வரை மொத்தம் 27 இலட்சம் அகதிகளை அனுமதித்திருந்தார்களாம். இக்காலகட்டத்தில் பிரான்ஸின் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொழிலாளர்கள் பற்றாக்குறை வந்தது. அதற்காக மீண்டும் அரபு நாடுகளிலும் மேற்கு ஆபிரிக்காவிலும் போரில் அகதிகளானவர்களை பிரான்ஸ் அனுமதித்தது. இவர்களில் பெரும்பாலானோர் பாரிஸ், மார்செல், லியான் போன்ற நகரங்களில் குடிபெயர ஆரம்பித்தனர்.

உலகக் கிண்ணத்தினால் உலகையே ஈர்த்த நாயகர்கள்

ஒரு வழியாகப் பிரான்ஸ் பொருளாதார ரீதியான வளர்ச்சியை அடைந்தது ஆனால், உலக அரங்கில் மரியாதையைப் பெற பிரான்ஸுக்கு விளையாட்டு சார்ந்த வளர்ச்சி தேவைப்பட்டது.

பிரான்ஸின் கால்பந்து வளர்ச்சி

1960இல் இருந்து 1974 வரை நடைபெற்ற 3 உலகக் கிண்ணப் போட்டித் தொடரிலும், 3 யூரோ கிண்ணத் போட்டியிலும் பிரான்ஸின் கால்பந்து அணி தகுதி பெறவில்லை. இந்தக் சிக்கலை தீர்க்க பிரான்ஸ் முதல் முறையாக தேசிய அளவிலான ஒரு கால்பந்து அகடமியை ஆரம்பித்தது. இதன் நோக்கம் இளைஞர்களுக்குள் மறைந்திருக்கும் கால்பந்து திறமைகளைக் கண்டுபிடிப்பதுதான். விசி எனும் இடத்தில் முதல் முறையாக கால்பந்தை பயிற்றுவிக்க கல்லூரி ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. 4 ஆண்டுகள் கழித்து பிரான்ஸின் அனைத்து பெரிய கால்பந்து அணிகளுடனும் கலந்துரையாடி, ஒவ்வொரு ஊரில் இருக்கும் திறமையான இளைஞர்களை வளர்த்தெடுக்க அந்ததந்தப் பகுதிகளில் கிளைக் கல்லூரிகளை பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் நிறுவியது.

இவ்வாறு முன்னேற்றம் கண்ட பிரான்ஸ் அணி 20 வருடங்களுக்கு முன்னதாக அதாவது 1998ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வைத்து பிரபல பிரேசில் அணியை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது.

அதன் பிறகு 2006 உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் இத்தாலியிடம் தோல்வியைத் தழுவியது. 2010 உலகக் கிண்ணத்தில் லீக் சுற்றோடு பிரான்ஸ் வெளியேறியது. 2014இல் காலிறுதி வரையில் விளையாடியது. 2016 யூரோ கிண்ணத்தில் பிரான்ஸ் அணி இறுதி ஆட்டத்தில் போர்த்துக்கல் அணியிடம் தோற்றது.

2018 உலகக் கிண்ண வெற்றிப் பாதை

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்கின்ற அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பிரான்ஸ் அணி, C பிரிவில் இடம்பெற்றிருந்தது. அப்பிரிவில் அவுஸ்திரேலியா மற்றும் பேரு அணிகளை வீழ்த்தியது. டென்மார்க் உடனான போட்டியை சமநிலை செய்தது. நொக்-அவுட் சுற்றில் முன்னாள் சம்பியனான ஆர்ஜென்டீனாவை 4-3 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்தது. காலிறுதியில் உருகுவே அணியை 2-0 கோல்கள் கணக்கில் வென்றது. அரை இறுதியில் பிரபல பெல்ஜியம் அணியை 1-0 என வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதன்படி, கடந்த 20 வருடங்களில் நடைபெற்ற ஆறு உலகக் கிண்ணப் போட்டியில் மூன்று முறை இறுதிபோட்டிக்குத் தகுதி பெற்ற ஒரே அணியாக பிரான்ஸ் மற்றுமொரு சாதனையும் படைத்தது.

எனவே, விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கடந்த வாரம் நடைபெற்ற 21ஆவது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அண்டை நாடுகளான பிரான்ஸும், குரேஷியாவும் களத்தில் எதிர் எதிர் அணிகளாக களமிறங்கின.

பிரான்ஸின் அதிரடி ஆட்டம் குரேஷியாவை தடுமாறச்செய்தது. இருந்தபோதிலும் குரேஷியா தொடர்ந்து அதற்கு ஈடுகொடுத்தே வந்தது. ஆட்டத்தின் முடிவில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் அணி 2ஆவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

ரொனால்டோவின் வருகையால் டொலர்களை அள்ளும் ஜுவான்டஸ்

இதில் பிரான்ஸ் அணி பெற்றுக்கொண்ட 3 கோல்களில் கிரீஸ்மன், போல் போக்பா மற்றும் கிலியன் எம்பாப்பே ஆகிய வீரர்கள் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொண்டதுடன், இம்மூன்று வீரர்களும் குடியேறிகள் என்பது மற்றுமாரு சிறப்பம்சமாகும்.


அன்டோனியோ கிரீஸ்மன்

அன்டோனியோ கிரீஸ்மன் ஜேர்மனிய தந்தைக்கும், போர்த்துக்கல் தாய்க்கும் பிறந்தவர். வேகமாக அடித்தாடுகின்ற திறமையைக் கொண்ட கிரீஸ்மன், இம்முறை உலகக் கிண்ணத்தில் பிரான்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

 


கிலியன் எம்பாப்பே

இம்முறை உலகக் கிண்ணத்தில் வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை தட்டிச் சென்ற 19 வயதுடைய கிலியன் எம்பாப்பே கெமரூன் தந்தைக்கும், அல்ஜீரிய தாய்க்கும் பிறந்தவர். அதிலும் இம்முறை உலகக் கிண்ணத்தின் நொக்-அவுட் சுற்றில் பிரபல ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவதற்கு காரணமாகவும் எம்பாப்வே இருந்தார்.


போல் போக்பா

தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட மத்திய வரிசை வீரரான போல் போக்பா ஆபிரிக்காவின் கினி என்ற நாட்டைச் சேர்ந்தவர். இம்முறை உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணிக்காக கோலடித்து அசத்தியவர். இவருடைய சகோதரர் கினி தேசிய கால்பந்து அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சாமுவேல் உம்டிட்டி

பின்வரிசை வீரரான சாமுவேல் உம்டிட்டி கெமரூனில் பிறந்தவர். அரையிறுதிப் போட்டியில் பிரபல பெல்ஜியம் அணியை 1-0 என வீழ்த்தி பிரான்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற பெருமை இவரையே சாரும்.

இவர்கள் மட்டுமல்ல, நுகோலே கந்டே (N’Golo Kanté) மாலி நாட்டைச் சேர்ந்தவர். சினடின் சிடான் (Zinedine Zidane) அல்ஜீரிய தாய் தந்தைக்குப் பிறந்தவர். உஸ்மான் டெம்பெலே செனகலில் பிறந்தவர். கொரொன்டின் டொலிசோ டொன்கோ நாட்டைச் சேர்ந்தவர். பிளேஸ் மெடுயிட் அங்கோலாவையும், ஆதில் ரமீ மொரோக்கோவையும், ஸ்டீவன் என்சொன்ஸி கொங்கோ நாட்டையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.

இதன்படி, பிரான்ஸ் அணியின் உலகக் கிண்ண வெற்றியில் இந்த நட்சத்திரங்களின் பங்கு அளப்பெரியது. பல வருடங்களாக பிரான்ஸ் சமூகத்தில் உள்ளுர் மக்கள் குடியேறியவர்கள் என ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர். பிரான்ஸ் அணியில் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் குடியேறியவர்கள் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2 தசாப்தங்களுக்குப் பிறகு இம்முறை உலகக் கிண்ணத்தை அகதிகளாக அல்லது குடியேறிகளாக வந்து பிரான்ஸின் அரவணைப்பில் சாதித்த மக்களுக்குச் சொந்தமானது என்றே சொல்லாம்.

1998இல் பிரான்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உதவிய சினடின் சிடானின் பெற்றோரும் அல்ஜீரியாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பியன் பட்டம் வென்றதோடு பிரான்ஸ் அணியின் பயணம் நின்றுவிடாது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு கால்பந்து உலகில் அந்த அணி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிகளில் பயணிக்க விரும்பும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<