கேப் டவுனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட 392 ஓட்டங்களைத் தொடர்ந்து களமிறங்கிய  இலங்கை அணி, 110 ஓட்டங்களுகே சகல விக்கெட்டுகளையும் இழந்து மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும், இப்போட்டியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த ஒரே ஒரு விடயமாக லஹிரு குமாரவின் பந்து வீச்சு இருந்தது.

19 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார தென்னாபிரிக்க அணியுடனான குறித்த போட்டியில் இலங்கை அணி சார்பாக தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இதன் முதல் இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சினை பதிவு செய்த அவர் 122 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவுற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லஹிரு, ஜிம்பாப்வேயுடனான டெஸ்ட் போட்டியில் நான் மணிக்கு 145.8 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியிருந்தேன். அதுவே இதுவரை நான் டெஸ்ட் போட்டிகளில் வீசிய அதிகூடிய வேகப் பந்தாகும். பந்து வீச்சின் வேகத்தை மேலும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

Photos: Sri Lanka v South Africa 2nd Test – Day 2

அதேநேரம், 19வருடங்கள் மற்றும் 325 நாட்களைக் கொண்ட இவர், இலங்கை அணி சார்பாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இளம் பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக 1994ஆம் ஆண்டு, 19 வருடங்கள் மற்றும் 97நாட்களே ஆன ரவீந்திர புஷ்பகுமார ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் ஏழு விக்கெட்டுக்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.    

அத்துடன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேல் பந்து வீசும் திறமையை உடைய துஷ்மன்த சமீரவும் இலங்கை அணிக்கு கிடைக்கப்பெற்றிருப்பது இவ்வருடத்தில் எதிர்வரவுள்ள போட்டிகளுக்கு மிகபெரிய வரப்பிரசாதம் ஆகும்.

‘’நான் ஐந்து முதல் தர போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியுள்ளேன். அதோடு, என்னுடைய ர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பத்திலேயே தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் சிக்ஸர் ஒன்றினை அடித்தது ஆச்சரியமாக இருந்தது. திறமைகளை வெளிப்படுத்திய விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்ற அதேநேரம், இங்குள்ள ஆடுகளம் என்னுடைய பந்து வீச்சுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. அத்தோடு என்னுடைய பந்து வீச்சில் பிடியெடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த உதவிய அணியின் அனைத்து சக வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறித்த ஆடுகளத்தை சரியாக கணிப்பதற்கு தற்போதைய நிலை கடினமாக உள்ளது. ஆனால் இன்னும் நன்றாக முயற்சி செய்தால் ஏதாவது செய்யலாம் என்று நினைகிறேன். அவர்களை 250 ஓட்டங்களுக்கும் குறைவாக வீழ்த்த முடிந்தால் இந்த போட்டியில் தோல்வியினை தவிர்த்துக் கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படலாம் என்று லஹிரு மேலும் தெரிவித்தார்.      

தென்னாபிரிக்காவில் வரலாற்றை மாற்றும் விதத்தில் இலங்கை அணி விளையாடுமா?

என்றாவது ஒருநாள் இலங்கை அணிக்கு விளையாடுவதே அனைத்து இளம் கிரிக்கெட் வீரர்களினதும் கனவாகும். எனினும் லஹிரு குமார வளர்ந்த பின் இலங்கை ஹொக்கி அணிக்காக விளையாடுவதற்கு கனவு கண்டார். அதற்கு மாறாக, கண்டி ஸ்ரீ சுமங்கள கல்லூரிக்காக 15 வயதுக்குட்பட்ட ஹொக்கி அணியில்  விளையாடிக்கொண்டிருந்த போதே கிரிக்கெட் விளையாடும் முடிவுக்கு அவர் வந்துள்ளார்.  

இதுகுறித்து அவர் விளக்கும்பொழுது, ஒருநாள் நான் பாடசாலையில் ஹொக்கி விளையாடிக்கொண்டிருந்தபோது ஹொக்கி மட்டை என்னுடைய கழுத்தில் பட்டு காயமடைந்தேன். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த நான் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது எனது தாயார் ஹொக்கி மட்டை மற்றும் ஹொக்கி காப்பு உபகரணங்களை தூக்கி வீசியிருந்தார். அதோடு எனது ஹொக்கி வாழ்க்கை முடிவடைந்தது.

அதன் பின்னர் எவ்விதமான நோக்கமுமின்றி சாதாரணமாகத்தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இறுதியில் கல்லூரி அணிக்கு தெரிவு செய்யப்பட்டேன். அதன் பின்னர் 15 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மலேசிய சுற்றுப்பயணத்தில் பங்குபற்றினேன். இதுதான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் உண்மையான ஆரம்பம் என்றார்.