லா லிகாவில் என்ன நடந்தது?

261
Images Courtesy : Getty

நிதானமாக ஆரம்பித்து இடையே வந்த கொரோனா வைரஸ் தொற்றினால் அவசர அவசரமாக முடிவுற்ற ஸ்பெயின் முன்னணி கால்பந்து தொடரான லா லிகாவில் ரியல் மெட்ரிட் சம்பியனானதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கின்றன. 

என்றாலும் உலகின் மிகப்பெரிய கால்பந்து லீக் தொடர்களில் ஒன்றான லா லிகாவில் பார்சிலோனா அல்லது ரியல் மெட்ரிட் சம்பியனாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. அதாவது, இரு அணிகள் தவிர்த்து சம்பியன் பட்டத்தை வேறு அணி ஒன்று வென்றே இன்றைக்கு ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. 2013/14 பருவத்தில் அட்லடிகோ மெட்ரிட் அந்த அரிதான சாதனையை நிகழ்த்திக் காட்டியது.

மீண்டும் உயிர் பெற்ற ரியல் மெட்ரிட்

அது தவிர்த்து பார்த்தோம் என்றால் கடந்த 16 பருவங்களில் 15 இல் பார்சிலோனா, ரியல் மெட்ரிட் இரண்டும் மாறி மாறி கிண்ணத்தை வென்றது வழக்கமாகிவிட்டது.

இதில் சினேடின் சிடேனின் பயிற்சியின் கீழ் 2016-17 இல் லா லிகாவை வென்ற ரியல் மெட்ரிட், சிடேன் வெளியேறிய பின் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதனை பார்சிலோனாவிடம் பறிகொடுத்தது. இவ்வாறான ஒரு நிலையில் சிடேன் மீண்டும் வந்த பின் கிண்ணத்தை மீண்டும் வென்றிருக்கிறது. எனவே, இந்த வெற்றியின் முக்கிய பங்கு சிடேனைச் சேர வேண்டும் என்பது பொதுவான கணிப்பு.

எவ்வாறாயினும் ரியல் மெட்ரிட் சர்வ சாதாரணமாக சம்பியனானது என்று குறிப்பிட முடியாது. இந்தப் பருவம் ஆரம்பித்தது தொடக்கம் யார் இம்முறை சம்பியனாகும் என்ற நிச்சயம் இன்மை கடைசி வரை இருந்தது. அதிலும் கொரோனா வைரஸ் காரணமாக தொடர் பாதியில் தடைப்பட்டது கூடுதலாகவோ அல்லது குறைச்சலாகவோ முடிவுகளில் தாக்கம் செலுத்தியது.

Images Courtesy : Getty

கடந்த 2019 ஓகஸ்ட் 16 ஆம் திகதி ஆரம்பமான தொடரில் பார்சிலோனா முதல் போட்டியில் அட்லடிக் கழகத்திடம் தோற்றதால் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 16 ஆவது இடத்தில் இருந்தே லா லிகாவை ஆரம்பித்தது. ஆனால் ரியல் மெட்ரிட் அணி செல்டா கழகத்தை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று முதலிடத்தில் இருந்தே தொடரை ஆரம்பித்தது.

ஆனால் ஒன்பதாவது வாரமாகும் போது பார்சிலோனா முதலிடத்தை பிடித்து அடுத்து 12 போட்டிகள் வரை முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. மறுபுறம் ரியல் மெட்ரிட் ஒருசில புள்ளி வித்தியாசத்தில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. இதனால் தொடரின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே சம்பியனாகப் போவது பாரிசிலோனா அல்லது ரியல் மெட்ரிட் என்பது உறுதியாகவே இருந்தது.

Video – 1933 இன் சாதனையை சமன் செய்த RONLADO ! | FOOTBALL ULLAGAM

என்றாலும் 2020 மார்ச் 12 கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இரண்டு வாரங்கள் ஒத்தி வைக்கப்பட்ட லா லிகா மார்ச் 23 ஆம் திகதி காலவரை இன்றி இடைநிறுத்தப்படும்போது பாரிசிலோனா 58 புள்ளிகளுடன் முதலித்திலும் இரண்டு புள்ளிகள் குறைவாக ரியல் மெட்ரிட் இரண்டாவது இடத்திலும் இருந்தது.

லா லிகா மட்டுமல்ல, இங்கிலாந்து ப்ரீமியர் லீக், புன்டஸ்லிகா என்று உலகெங்கும் எந்த கால்பந்து போட்டியும் நடக்கவில்லை. எப்போது ஆரம்பிக்கும் என்ற நிச்சமில்லாத சூழலும் நீடித்தது. இது இந்த வைரஸ் மைதானத்தில் மாத்திரம் அல்ல மைதானத்திற்கு வெளியிலும் தாக்கம் செலுத்தியது.

கொரோனாவும் பார்சிலோனாவும் 

கொரோனாவால் போட்டிகள் நடக்காதது பொழுது போக்கிற்கு மாத்திரம் அல்ல அணிகள், வீரர்களின் வருவாய்க்கும் பிரச்சினையாகிப்போனது. வீரர்களின் சம்பள வெட்டு, நன்கொடை என்று ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. இதில் வேறு எந்த அணிகளை விடவும் பார்சிலோனா அதிகம் பாதிக்கப்பட்டது.

Images Courtesy : Getty

வருவாய் இழப்பினால் வீரர்களின் சம்பளத்தில் 70 வீதம் குறைப்பை மேற்கொள்ள பார்சிலோனா நிர்வாகம் தீர்மானிக்க லியோனல் மெஸ்ஸி உட்பட அந்த அணி வீரர்கள் தீர்மானத்தை விடவும் சம்பள வெட்டுக்கு இணங்கிய விவகாரத்தில் கழக நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்தது.

அதாவது சம்பள வெட்டுக்கு வீரர்கள் தயாராக இருக்கும்போதே அணி நிர்வாகம் அவர்கள் மீது தேவையில்லாமல் ஆழுத்தம் மேற்கொண்டது பற்றி மெஸ்ஸியே வெளிப்படையாக சாடிப் பேசினார்.

FFSL தலைவர் கிண்ண மோதல்கள் எவ்வாறு உள்ளன?

ஆரம்பத்தில் இருந்தே சம்பள வெட்டுக்கு நாம் விருப்பத்தை வெளியிட்டிருந்தோம் என்பதை நான் முதலில் கூற விரும்புகிறேன். ஏனென்றால் இது நெருக்கடியான சந்தர்ப்பம் என்பதை நாம் தெரிந்திருக்கிறோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நிர்வாகம் கேட்ட விடயங்களுக்கு நாமே முதலில் ஆதரவை வழங்கினோம். பல நேரங்களில் அவசியம் என்று எமக்குத் தெரிந்தால் நாம் எமது விருப்பில் பல விடயங்களை செய்த சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.  

அப்படி இருந்தும் நிர்வாகத்தில் இருக்கின்ற சில நபர்கள் நாம் ஆரம்பத்தில் இருந்தே இணங்கி இருந்த விடயம் ஒன்றை செய்வதற்கு அதிக அழுத்தம் கொடுத்தது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இதற்கு இணங்குவதற்காக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது இந்த நெருக்கடியான நேரத்தில் கழகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் உதவுவதற்கான முறையான கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்காகும் என்று மெஸ்ஸி கூறியது உள்ளுக்குள் இருக்கும் முரண்பாடுகளை வெளியே காட்டுவதாக இருந்தது.

பார்சிலோனா கழக நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் இடையிலான மோதல்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கமான ஒன்று என்றபோதும் தற்போதைய பிரச்சினையில் மெஸ்ஸி தொடர்ந்து அந்த அணியில் இருப்பாரா என்ற கேள்வி கூட பெரிதாக எழுப்பப்பட்டது.

2022 பிஃபா உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு

இந்த நிலையில் கடந்த ஜூன் 11 ஆம் திகதி லா லிகா போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது கூட பார்சிலோனா அணி பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீண்டிருக்கவில்லை. அது அணி வீரர்களிலும் பாதிப்புச் செலுத்தும் ஒன்றாகவே இருந்தது.

அதில் கொரோனாவுக்கு பின்னரான போட்டி என்பது சாதாரணமாக இருக்கவில்லை. நாள் விடாமல் போட்டிகள், வீரர்களுக்கு சுமை அதிகம்.

ரியல் மெட்ரிட்டின் மீட்சி 

மூன்று மாதங்களுக்கு பின்னர் மைதானம் திரும்பிய ரியல் மெட்ரிட் அணியால் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அதனை கடைசி வரை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. கொரோனாவுக்கு பின்னரான முதல் போட்டியில் எய்பர் அணியை 3-1 என வெற்றி பெற்ற ரியல் மெட்ரிட் வெலன்சியா அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என்றும் ரியல் சொசிடாட் உடனான போட்டியை 2-1 என்றும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றது. பார்சிலோன செவில்லா உடனான போட்டியை கோலின்றி சமநிலை செய்து செல்டா விகோ மற்றும் அட்லெடிகோ மெட்ரிட் அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களையும் தலா 2-2 என சமநிலை செய்ய, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Images Courtesy : Getty

இறுதியில் கடந்த ஜூலை 16ஆம் திகதி வெல்லரியல் அணிக்கு எதிரான ஆட்டத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று ஒரு போட்டியை மிச்சம் வைத்து ரியல் மெட்ரிட் சம்பியனானது.

பயிற்சியாளர் சினேடின் சிடேன் உடன் செர்ஜியோ ராமோஸ், கரிம் பென்சமா, திபவுட் கோர்டொயிஸ், கசிமிரோ என்று வீரர்களிடையேயும் தொடரின் பிற்பகுதியில் புதிய உற்சாகம் ஏற்பட்டது அந்த அணியின் வெற்றிக்கு முக்கிமாக இருந்தது.

ஓப்பீட்டளவில் பார்த்தால் இம்முறை லா லிகாவில் அதிக கோல்களை பார்சிலோனா பெற்றது. அந்த அணி மொத்தம் 86 கோல்களை பெறும்போது, இரண்டாவது இடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட் மொத்தம் 70 கோல்களையே பெற்றது. அதற்கு கோல் இயந்திரம் மெஸ்ஸி முக்கிய காரணமாக இருக்கலாம்.

மீண்டும் பார்வையாளர்களுடன் ஆரம்பித்த கிரிக்கெட் போட்டி

ஆனால் ரியல் மெட்ரிட்டின் தற்காப்பு பார்சிலோனாவை விடவும் சிறப்பாக இருந்தது அதற்கு சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது. ரியல் மெட்ரிட் அதிகபட்சம் 19 போட்டிகளில் எதிரணிக்கு எந்த கோலும் விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் இந்த வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் பார்சிலோனா 15 போட்டிகளிலே எதிரணிக்கு கோல் விட்டுக்கொடுக்கவில்லை.

அதிலும் ரியல் மெட்ரிட் எதிரணிக்கு 56 கோல்களையே விட்டுக்கொடுத்ததோடு பார்சிலோனா 77 கோல்களை விட்டுக்கொடுத்திருந்தது.

குறிப்பாக, இம்முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய எல் கிளாசிக்கோ போட்டிகள் இரண்டையும் பார்த்தோம் என்றால் முதல் ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தபோதும் தனது சொந்த மைதானமான சன்யாகோ பெர்னபுவில் நடந்த இரண்டாவது போட்டியில் ரியல் மெட்ரிட் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

மெஸ்ஸி சாகசங்கள்

மெஸ்ஸி (Images Courtesy : Getty)

தனது அணி சம்பியனாகாதபோதும் லியோனல் மெஸ்ஸியின் சாதனைகள் இந்த ஆண்டிலும் தொடர்ந்தது. என்றாலும் அவர் தோல்வியை முழுமையாக ஒப்புக்கொள்வதாக இல்லை.

மெட்டிரிட் தமது அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது பாராட்டத்தக்கது. என்றாலும் இந்த லீக்கில் நாமும் அவர்களுக்கு உதவி இருக்கிறோம். நாம் எப்படி விளையாடினோம், வீரர்கள் மற்றும் கழகத்துடன் எப்படி ஆரம்பித்தோம் என்பது பற்றி விமர்சனம் உள்ளது

எல்லோரும் கூறுவது போல் மெட்ரிட்டின் வெற்றி மாத்திரம் காரணம் அல்ல எமது தவறுகளும் நாம் தோற்பதற்கு காரணமானது என்கிறார் மெஸ்ஸி.

மெஸ்ஸி இம்முறை லா லீகா தொடரில் மொத்தம் 25 கோல்களை பெற்று தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் தங்கப் பாதணியை வென்றார். எனினும் லா லீகாவில் அவர் தங்கப் பாதணியை வெல்வது இது 7 ஆவது தடவையாகும். அதாவது லா லிகா வரலாற்றில் எவரும் இத்தனை தடவை தங்கப் பாதணி வென்றதில்லை.

மீண்டும் அணியுடன் இணைந்த சுஜான்; வெளியேறினார் தினேஷ்

ஆர்ஜன்டீன நட்சத்திரமான மெஸ்ஸி தொடர்ச்சியாக 12 தொடர்களில் 20க்கும் மேல் கோல்களை பெற்றிருக்கிறார். இப்படி ஒரு சாதனையை முறியடிப்பது அண்மைய வரலாற்றில் சாத்தியம் இல்லாத ஒன்று.

தவிர அவர் 21 கோல் உதவிகளையும் இம்முறை பெற்றுக்கொடுத்திருக்கிறார். இது லா லிகா வரலாற்றில் சாதனையாகும். இதற்கு முன்னர் முன்னாள் சக அணி வீரரான எக்சாவியின் சாதனையையே அவர் முறியடித்தார்.

அதாவது லா லிகா வரலாற்றில் ஒற்றைப் பருவத்தில் 20 கோல்கள் மற்றும் 20 கோல் உதவிகளை பெற்ற ஒரே வீரராக மெஸ்ஸி சாதனை படைத்தார். இதற்கு முன் ஐரோப்பிய முன்னணி கால்பந்து லீக்குகளில் இந்த நுற்றாண்டில் இவ்வாறான ஒரு சாதனையை படைத்த ஒரே வீரராக தியரி ஹென்ட்ரி இருந்து வந்தார்.

இந்தப் பருவத்தில் உபாதை காரணமாக மெஸ்ஸி ஐந்து போட்டிகளில் விளையாடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

எவ்வாறாயினும் லா லிகா வரலாற்றில் அதிக கோல்களாக 444 கோல்கள் பெற்ற மெஸ்ஸியின் சாதனை முறியடிப்பது இலகுவாக இருக்காது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<