இலங்கை வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்? – மிக்கி ஆத்தர்

75
Kusal Mendis, Lahiru Kumara

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியைப் போல உலகின் ஏனைய கிரிக்கெட் அணிகளுக்கும் மீண்டும் எப்போது போட்டிகளை ஆரம்பிக்க முடியும் என்பது இதுவரை கேள்விக்குரியாகவே உள்ளது.

உண்மையில் இலங்கை அணி, இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயற்பட்டு வெற்றிப் பாதைக்கு வந்தாலும், கொரோனா வைரஸ் காரணமாக அதன் உத்வேகம் இடைநடுவில் நின்றுவிட்டது.  

>> முழு பலத்துடன் T20I உலகக் கிண்ணத்துக்கு தயாராகுமா இலங்கை?

இலங்கை அணி வீரர்கள் தத்தமது வீடுகளில் முடங்கிப் போக, கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கை அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மிக்கி ஆத்தர், கடந்த 8 வாரங்களாக கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சிக்கிக் கொண்டார்.  

ஆனால், அவர் தனது பொறுப்பை இணையத்தளம் மற்றும் தொலைபேசியின் வாயிலாக முன்னெடுத்து வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.

இந்த நிலையில், ThePapare.com இணையத்தளம் மிக்கி ஆத்தருடன், நேரலை  மூலம் பிரத்தியேக நேர்காணல் ஒன்றை கடந்த புதன்கிழமை (13) மேற்கொண்டிருந்தது.   

இந்த நேர்காணலில் மிக்கி ஆத்தரிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் உள்ளடங்களாக ThePapare.com குழுவினர் மூலமும் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன.   

இதன்போது, மிக்கி ஆத்தர் இலங்கை அணியில் தற்போதுள்ள இளம் வீரர்களான குசல் மெண்டிஸ், பானுக்க ராஜபக்ஷ, லஹிரு குமார, அகில தனஞ்சய, வனிந்து ஹஸரங்க, லக்ஷான் சந்தகென், லசித் எம்புல்தெனிய உள்ளிட்ட வீரர்களின் திறமைகள் மற்றும் எதிர்காலம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்

இதில் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் குறித்து மிக்கி ஆத்தர் கருத்து தெரிவிக்கையில்,  

”தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள சிறந்த வீரர்களில் ஒருவராக குசல் மெண்டிஸைக் கூறலாம். அவரது திறமையில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. மிகவும் உயர்ந்த அளவில் உள்ளது.   

அவருக்கு எந்தவொரு நெருக்கடியும் இன்றி அனைத்து பகுதிகளிலும் ஓட்டங்களைக் குவிப்பதற்கான திறமை உண்டு என நான் நினைக்கிறேன்

அதேபோல, அவருடைய துடுப்பாட்ட முறையானது மிகவும் வித்தியாசமானதாகவும், உறுதியானதாகவும் காணப்படுகின்றது. அவருடைய கடந்தகால அடைவுமட்டங்களை எடுத்துப்பார்க்கும் போது அவரது திறமைகளை இப்போதே கணிக்க முடியாது

>> இலங்கையில் கிரிக்கெட், றக்பி, கால்பந்து பயிற்சிகள் ஜூன் முதல்

எந்தவொரு வீரருக்கும் சிறந்த காலங்களைப் போல மோசமான காலங்களையும் முகங்கொடுக்க வேண்டிவரும். இது உலகத்தில் உள்ள பொதுவானதொரு நியதியாக உள்ளது.  

எனவே, குசல் மெண்டிஸ் குறித்து எமது துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேன்ட் ப்ளெவர் விசேட அவதானம் செலுத்தி வருகின்றார்” என தெரிவித்தார்

இந்த நிலையில், இலங்கை அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான லஹிரு குமாரவின் திறமை குறித்து பேசிய அவர்,  

”இலங்கை அணியில் தற்போதுள்ள மிகவும் வேகமாக பந்துவீசுகின்ற வீரர் தான் லஹிரு குமார. அவரால் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. ஆனால் அவரை நாங்கள் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும்

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தமட்டில் இசுரு உதான முன்னணி பந்துவீச்சாளராக உள்ளார். அவரது துடுப்பாட்டமும் எமக்கு பக்கபலமாக இருந்து வருகின்றது.  

மறுபுறத்தில் முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடைக்குள்ளாகியுள்ள அகில தனஞ்சயவின் மீள் வருகை குறித்து நாங்கள் எதிர்பார்ப்புடன் உள்ளோம்.

அதேபோல, டெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற இளம் வீரரான லசித் எம்புல்தெனியவும் எதிர்காலத்தில் இலங்கை அணியின் நட்சத்திர வீரராக ஜொலிப்பார். அதற்கான அனைத்து திறமைகளும் அவரிடம் உண்டு.  

>> இலங்கை வீரர்களின் தயார்நிலை குறித்து மிக்கி ஆத்தர்

லக்ஷான் சந்தகெனிடம் வித்தியாசமான பந்துவீச்சு பாணி உள்ளது. அதை நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மத்திய ஓவர்களில் அவருடைய பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை” என்றார்.  

இதேநேரம், அண்மைக்காலமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக சகலதுறைகளிலும் பிரகாசித்து வருகின்ற வனிந்து ஹஸரங்கவின் திறமை குறித்து அவர் பேசுகையில்

”வனிந்து மிகவும் மாறுபட்ட வீரராக உள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் நிச்சயமாக விக்கெட்டினை வீழ்த்துவதற்கான திறமை அவரிடம் உண்டு. அதேபோல, அவர் சிறந்த துடுப்பாட்ட வீரரும் ஆவார்“.   

இதுஇவ்வாறிருக்க, அண்மைக்காலமாக இலங்கை அணி மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர் தோல்விகள் மற்றும் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றது.  

எனவே, இனிவரும் காலங்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக தனித்தனி அணிகளை களமிறக்குவது குறித்து மிக்கி ஆத்தர் கருத்து வெளியிட்டார்.    

“தேசிய மட்டத்திலான தரத்தை முன்னெடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதற்காக ஜெரொம் ஜயரத்னவினால் மிகப் பெரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   

உண்மையில் நாங்கள் ஒவ்வொரு வீரர்களினதும் திறமைகளை முதலில் இனங்கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் தரவரிசைகளில் தற்போதுள்ள இடங்களில் இருந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறு எமது வீரர்கள் பின்னடைவை சந்திப்பதற்கு அவர்கள் மீது நம்பிக்கை வைக்காதது தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன்

>> ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆசைப்படும் திசர பெரேரா

வீரரொருவர் அணிக்குள் வந்து ஒரு போட்டியில் மோசமாக விளையாடியதன் காரணமாக அவருக்கு அடுத்த போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுப்பதில்லை.  

எனவே கடந்த 3 மாதங்களாக நிலையான அணியொன்றை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை நான் முன்னெடுத்து வருகிறேன்

தற்போது அணியில் உள்ள வீரர்களுக்கு தமது நிலை என்ன என்பது பற்றி தெரியும். ஆனால் ஒருமுறை மோசமாக விளையாடிய காரணத்தால் எந்தவொரு வீரரும் அணியில் இருந்து நீக்கப்படமாட்டார்கள்.  

அவ்வாறு செய்தால் வீரர்கள் அணிக்காக விளையாடாமல் தமக்காக விளையாடுவதை நோக்கமாக கொள்வார்கள். எனவே, அவர்களது மனநிலை மற்றும் கலாச்சாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு நான் முயற்சி செய்து வருகிறேன். உண்மையில் அது மிகப் பெரிய சவால்

எங்கள் அணியில் சுயநலமிக்க எந்தவொரு வீரரையும் நாங்கள் தக்கவைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அணியின் இலக்கை நோக்கி விளையாடுவதற்காக அவர்களுக்கு அணித் தேர்வில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் 

எனவே, எம்மிடம் திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் இலங்கை அணி சிறப்பாக செயற்படும் என தான் நம்புகிறேன்” அவர் தெரிவித்தார்.  

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அரசாங்கம் கடந்த 11ஆம் திகதி கொழும்பு உள்ளடங்கலாக நாடு பூராகவும் உள்ள அபாய பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியது.   

இந்த அறிவிப்பை அடுத்து சுகாதார அமைச்சின் அனுமதியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<