ரியல் மெட்ரிட்டுக்கு அடுத்தடுத்து சுப்பர் கிண்ணம்

180
Image courtesy - Skysports

ஐரோப்பாவின் இரு பிரதான கழக போட்டிகளின் சம்பியன்களுக்கு இடையிலான UEFA சுப்பர் கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்திய ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் கழக அணி சம்பியனானது.

மசிடோனிய தலைநகர் ஸ்கொப்ஜியில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற இந்தப் போட்டியில் கசெமிரோ மற்றும் இஸ்கோ ஆகியோர் கோல்போட்டு ஆதிக்கம் செலுத்த, ரியல் மெட்ரிட் அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றிகொண்டது.   

இதன்மூலம் சினேடின் சிடேனின் பயிற்றுவிப்பின் கீழான ரியல் மெட்ரிட் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் UEFA சுப்பர் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. அந்த அணி மொத்தம் நான்கு தடவைகள் இந்த கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. அது போன்றே, கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஸ்பெயின் அணி ஒன்று சுப்பர் கிண்ணத்தை வெல்வது இது எட்டாவது தடவையாகும்.   

இம்முறை UEFA சம்பியன் லீக் கிண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் மற்றும் UEFA யூரோபா லீக் சம்பியனான மன்செஸ்டர் யுனைடட் கழகங்களுக்கு இடையிலேயே 42ஆவது சுப்பர் கிண்ணப் போட்டி இடம்பெற்றது.

ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மாற்று வீரராக இருக்கையில் அமர்த்தப்பட்ட நிலையிலேயே அந்த அணி போட்டியில் களமிறங்கியது. எனினும் மன்செஸ்டர் யுனைடட் அணியால் போட்டியின் ஆரம்பம் தொட்டு ஆதிக்கம் செலுத்த முடியாமல்போனது.

போட்டியின் 16ஆவது நிமிடத்தில் பிரேஸிலின் மத்திய கள வீரர் கசெமிரோவால் ரியல் மெட்ரிட் அணிக்காக கோல் ஒன்றை போடுவதற்கான வாய்ப்பு நூலிழையில் தவறியது. டோனி க்ரூஸ் அடித்த கோனர் கிக்கை தலையால் தாக்கி கோலுக்கு செலுத்த முயன்றபோது அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

இதனைத் தொடர்ந்து பதில் தாக்குதல் ஒன்றை தொடுக்க பொக்பா பந்தை எதிர் திசையில் செலுத்தியபோதும் ரியல் மெட்ரிட் கோல்காப்பாளர் கெய்லோர் நாவாஸ் அதனை முறியடித்தார்.

எனினும் தொடர்ச்சியாக பந்தை தனது கால்களில் தக்கவைத்துக் கொண்ட ரியல் மெட்ரிட் 23 ஆவது நிமிடத்தில் அதனை கோலாக மாற்றியது.  டானியல் கர்வஜால் உயர அடித்த பந்தை லாவகமாக பெற்ற கசெமிரோ அதனை கோலாக மாற்றினார். இதன்மூலம் ரியல் மெட்ரிட் அணியினரால் 1-0 என முன்னிலை பெற முடிந்தது.

முதல் பாதியில் மன்செஸ்டர் யுனைடடின் பதில் கோல் போடும் முயற்சிகள் வீணானது. இதனால் முதல் பாதி முடியும்போது ரியல் மட்ரிட்டினால் 1-0 என முன்னிலை பெற முடிந்தது. முதல் பாதியின் 60 சதவீதமான நேரத்தில் ரியல் மெட்ரிட் அணியிடமே பந்து இருந்தது.  

முதல் பாதி: ரியல் மெட்ரிட் 1-0 மன்செஸ்டர் யுனைடட்

ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆரம்பிக்கும்போது மன்செஸ்டர் அணி அதிக நெருக்கடியை சந்தித்திருந்தது. அதற்கு ஏற்றாற்போல் ரியல் மெட்ரிட் மேலும் நெருக்கடி கொடுத்தது.

இரண்டாவது பாதி ஆரம்பத்திலேயே மன்செஸ்டர் முகாமையாளர் ஜோஸ் மொரின்ஹோ, ஜெஸ் லனிகார்டுக்கு பதில் மார்கஸ் ரஷ்போர்டை மைதானத்திற்கு அனுப்பி போட்டியை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.

எனினும் 52 ஆவது நிமிடத்தில் எதிரணி வீரர்களை முறியடித்து பந்தை கோல் கம்பத்தின் அருகாமை வரை கொண்டு சென்ற இஸ்கோ மன்செஸ்டர் கோல் காப்பாளர் டேவிட் டி கியை தடுமாறச் செய்து கோலொன்றை செலுத்தினார். இது ரியல் மெட்ரிட் அணியை மேலும் வலுப்பெறச் செய்தது.

குறிப்பாக ரொனால்டோ மைதனாதிற்கு வெளியில் இருந்து அணியை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்த நிலையிலேயே ரியல் மெட்ரிட் அணி இவ்வாறு வெற்றியை நோக்கி சென்றது.

எனினும் போட்டியின் 62 ஆவது நிமிடத்தில் லுகாகு மன்செஸ்டர் அணிக்காக கோல் ஒன்றை போட்டது. எனினும் அந்த அணியால் கடைசி வரை ஆட்டத்தை சமன் செய்யும் இரண்டாவது கோலை போட முடியாமல் போனது.

ரொனால்டோ இந்தப் போட்டியின் 83ஆவது நிமிடத்திலேயே பதில் வீரராக மைதானத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ரியல் மெட்ரிட் அணி 2-1 என ஆட்டத்தில் வெற்றியீட்டியது.

முழு நேரம்: ரியல் மெட்ரிட் 2-1 மன்செஸ்டர் யுனைடெட்

கோல் பெற்றவர்கள்

ரியல் மெட்ரிட் – கசெமிரோ 24’, இஸ்கோ 52’
மன்செஸ்டர் யுனைடட் – லுகாகு 62’

மஞ்சள் அட்டை

ரியல் மெட்ரிட் – டானி கர்வஜால் 84’, செர்கியோ ரமோஸ் 86’
மான்செஸ்டர் யுனைடெட் – ஜேஸ் லின்கார்ட் 42’, மார்கஸ் ரஷ்போர்ட் 90’