ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆசைப்படும் திசர பெரேரா

1
Thisara Perera

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 2009ம் ஆண்டு அறிமுகமாகியிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் திசர பெரேரா, தன்னுடைய கன்னி ஒருநாள் போட்டியிலேயே அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தார். 

அஞ்செலோ மெதிவ்ஸிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அணிக்குள் நுழைந்த இவர்,  ஷாஹிர் கான் மற்றும் அஷிஷ் நெஹ்ரா ஆகிய முன்னணி பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு 14 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தடைக்கு உள்ளாகியுள்ள உமர் அக்மல் மீது புதிய குற்றச்சாட்டு

சூதாட்டத் தரகர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை இரண்டு முறை சந்தித்துப் …

இவர், தன்னுடைய 11 வருட கிரிக்கெட் வாழ்க்கையில், இலங்கை அணியின் ஒருநாள் குழாத்தில் சகலதுறை வீரராக முக்கிய பங்கு வகித்து வருகின்றார். ஒருநாள் போட்டிகளில் 2000 ஓட்டங்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளதுடன், 150 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன், போட்டிகளின் முக்கியமான தருணங்களில் பந்துவீச்சு மற்றும் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் அணிக்கு மிகச்சிறந்த வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.  

திசர பெரேரா இலங்கை அணியில் 3ஆம் இலக்க வீரர் தொடக்கம் 9ஆம் இலக்க வீரர் வரை துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கியுள்ளார். இதில், அதிகமாக 6ஆம், 7ஆம்  இடங்களில் துடுப்பெடுத்தாடியுள்ளார். 6ஆம்  இலக்க வீரராக களமிறங்கிய இவரின் ஓட்ட சராசரி 34.4 ஆகவும், 7ஆம் இலக்க வீரராக ஓட்ட சராசரி 20.87ஆகவும் காணப்படுகின்றது. 

எனினும், அண்மையில் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியொன்றில், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இன்றுவரை களமிறங்காத ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி துடுப்பெடுத்தாட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

“பாடசாலை கிரிக்கெட்டின் 15 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் நான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டுள்ளேன். காரணம், என்னால் களத்தடுப்பு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நேரங்களில் பந்துகளை களத்தடுப்பாளர்களுக்கு வெளியில் அடிக்க முடியும். அதன் மூலம் பௌண்டரிகளை பெற்றுக்கொள்ள முடியும்” என திசர பெரேரா தெரிவித்துள்ளார்.  

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் 2008ம் ஆண்டு திசர பெரேரா விளையாடுவதற்கு முன்னர், பாடசாலை காலத்தில் சென்.ஜோசப் கல்லூரிக்காக பல சாதனைகளை படைத்திருக்கிறார். இதில், 74வது புனிதர்களின் சமரில் இவரின் பிரகாசிப்பு அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்ததுடன், ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆரம்ப காலத்தில் முதல் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் களமிறங்கியிருந்தாலும், திசர பெரேரா அணிக்காக துடுப்பாட்ட வரிசையை மாற்றிக்கொண்டுள்ளார். “15 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடும் போது, எனது பயிற்றுவிப்பாளர் ஹர்ஷ டி சில்வா என்னை மத்தியவரிசையை பலப்படுத்துவதற்கு, மத்தியவரிசையில் களமிறங்குமாறு கூறினார். அன்றிலிருந்து U17, U19, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் என மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாடி வருகின்றேன்”

எனினும், இனிவரும் காலங்களிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்க விரும்புகிறேன். ஆனால், தேசிய அணியில் பின்வரிசை வீரராக களமிறங்கி விளையாட வேண்டிய தேவை உள்ளது. களத்தடுப்பாளர்கள் பௌண்டரி எல்லையில் இருந்தாலும் என்னால், அதனை கடந்து துடுப்பெடுத்தாட முடியும்”  என திசர பெரேரா தெரிவித்தார். 

திசர பெரேரா தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இலங்கை அணிக்காக பல சிறந்த வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அவர் அணியின் தலைவராக செயற்பட்டுள்ளதுடன், உலகக் கிண்ணம் வெல்லும் அணியில், கடைசி பந்தில் சிக்ஸருடன் போட்டியின் வெற்றியை உறுதிசெய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவரது வாழ்க்கையின் அடுத்த நோக்கம், ஓய்வுபெறுவதற்கு முன்னர் மற்றுமொரு உலகக் கிண்ணத்தை இலங்கை  அணிக்காக வென்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<