கிளாஸ்ஸனின் சதத்தோடு முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி

111

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியினர் 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றனர். 

தென்னாபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் அங்கே மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய பின்னர், தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகின்றனர்.

இந்நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (29) தென்னாபிரிக்காவின் பார்ல் நகரில் ஆரம்பமானது. தொடர்ந்து, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியினர் 50 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்கள் குவித்தனர். 

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஒருநாள் போட்டிகளில் கன்னி சதம் விளாசிய ஹெயின்ரிச் கிளாஸ்ஸேன் 114 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 123 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம், அரைச்சதம் விளாசிய டேவிட் மில்லர் 64 ஓட்டங்கள் எடுத்தார். 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மிச்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 292 ஓட்டங்களை அடைய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தனர். 

தொடர்ந்து, வெற்றி இலக்கிற்கான பயணத்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 217 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினை தழுவினர். 

அவுஸ்திரேலிய கிரிக்ககெட் அணியின் துடுப்பாட்டம் சார்பாக போரட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் அரைச்சதம் தாண்டி 76 ஓட்டங்கள் பெற்றதோடு, மார்னஸ் லபசாக்னே 41 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் லுங்கி ன்கிடி 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், தப்ரைஸ் சம்ஷி மற்றும் என்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர். 

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை தென்னாபிரிக்க அணிக்காக சதம் விளாசிய ஹென்ரிச் கிளாஸ்ஸேன் பெற்றுக் கொண்டார். இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தென்னாபிரிக்க அணியினர் மூன்று போட்டிகள்  கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுக் கொள்கின்றனர். அதேநேரம், தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (4) ஆரம்பமாகின்றது. 

போட்டியின் சுருக்கம் 

தென்னாபிரிக்கா – 291/7 (50) ஹென்ரிச் கிளாஸ்ஸேன் 123, டேவிட் மில்லர் 64, பேட் கம்மின்ஸ் 45/3, மிச்செல் ஸ்டார்க் 59/2

அவுஸ்திரேலியா – 217 (45.1) ஸ்டீவ் ஸ்மித் 76, மார்னஸ் லபசாக்னே 41, லுங்கி ன்கிடி 30/3, என்ட்ரிஜ் நோர்ட்ஜே 39/2, தப்ரைஸ் சம்ஷி 45/2

முடிவு – தென்னாபிரிக்கா 74 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<