இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான விறுவிறுப்பான பல போட்டிகள் இன்று நிறைவடைந்தன.

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்று முன்தினம் கட்டுநாயக்கவில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அபாரமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட தரங்க பரணவிதான மற்றும் ஜீவன் மெண்டிஸ் முறையே 100 மற்றும் 115 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். மனோஜ் சரத்சந்திர 87 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அதன்படி தமிழ் யூனியன் கழகம் முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 450 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் அசத்திய மலிந்த புஷ்பகுமார 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில் ஷெஹான் ஜயசூரிய மற்றும் திக்ஷில டி சில்வா தவிர மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத நிலையில், அவ்வணி 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஜயசூரிய மற்றும் டி சில்வா தலா 59 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஜீவன் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி 231 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இம்முறை முன்னேற்றகரமான  ஆட்டத்தை வெளிப்படுத்திய சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் முதல் நான்கு வீரர்களும் அரைச்சதம் கடந்தனர்.

எனினும் மற்றைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சிலாபம் மேரியன்ஸ் அணி 297 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மீண்டும் சிறப்பாக பந்து வீசிய ஜீவன் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி தமிழ் யூனியன் கழகத்திற்கு 67 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இலகுவாக இலக்கைக் கடந்து வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 450 (91) – தரங்க பரணவிதான 100,  ஜீவன் மெண்டிஸ் 115, மனோஜ் சரத்சந்திர 87, மலிந்த புஷ்பகுமார 5/134

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 219 (42.1) – ஷெஹான் ஜயசூரிய 59, திக்ஷில டி சில்வா 59, ஜீவன் மெண்டிஸ் 4/79

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 297 (84.2) – ஷெஹான் ஜயசூரிய 67, அஷென் சில்வா 67, மஹேல உடவத்த 53, சச்சித்ர சேரசிங்க 50, ஜீவன் மெண்டிஸ் 4/56

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 69/4 (15.3)

முடிவு: தமிழ் யூனியன் கிரிக்கெட் 6 விக்கெட்டுகளினால் வெற்றி.


NCC எதிர் SSC

இப்போட்டி SSC மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற SSC முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய NCC ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதுரங்க டி சில்வா 95 ஓட்டங்களையும் ஜெஹான் முபாரக் 81 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, அவ்வணி 8 விக்கெட்டுகளை இழந்து 393 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணித்தலைவர் பர்வீஸ் மஹ்ரூப் அரைச்சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் SSC அணியின் கசுன் மதுஷங்க 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய SSC அணியின் தனுஷ்க குணதிலக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களை விளாசிய போதிலும், ஏனைய வீரர்கள் பிரகாசிக்க தவறியதால் அவ்வணி 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் அசத்திய NCC அணியின் சதுரங்க டி சில்வா 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய NCC அணி துரிதமாக ஓட்டங்கள் குவிப்பதில் கவனம் செலுத்தியது. நிரோஷான் திக்வெல்ல 79 ஓட்டங்களையும், சதுரங்க டி சில்வா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, அவ்வணி 4 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அதன்படி SSC அணிக்கு 407 என்ற பாரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றிருந்த அவ்வணி போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த தனுஷ்க குணதிலக 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், இளம் வீரர் சரித் அசலங்க ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்): 393 (107.3) – சதுரங்க டி சில்வா 95, ஜெஹான் முபாரக் 81, பர்வீஸ் மஹ்ரூப் 59, நிமேஷ குணசிங்க 47, கசுன் மதுஷங்க 3/65

SSC (முதல் இன்னிங்ஸ்): 219 (60) – தனுஷ்க குணதிலக 112*, சதுரங்க டி சில்வா 6/72

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்): 232 (44) – நிரோஷன் திக்வெல்ல 79, சதுரங்க டி சில்வா 52

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்): 172/4 (46.1) – தனுஷ்க குணதிலக 54, அசலன்க 50*

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியை வென்ற சோனகர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அசத்தலாக துடுப்பெடுத்தாடிய ஷானுக விதானவசம் 20 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 181 ஓட்டங்கள் விளாச, சோனகர் கழகம் 376 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல குணரத்ன தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய இராணுவ விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 242 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. தனித்து போராடிய மஞ்சுல டி சொய்சா 90 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். சிறப்பாக பந்து வீசிய நிலங்க சந்தகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. தொடக்க வீரர் ப்ரிமோஷ் பெரேரா 65 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், விரைவாக ஓட்டங்கள் குவித்த திலான் துஷார ஆட்டமிழக்கது 52 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

354 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இராணுவ விளையாட்டுக் கழகம், போட்டி நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றிருந்தது. துஷான் விமுக்தி ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 376 (97.5) – ஷானுக விதானவசம் 181*, ருவிந்து குணசேகர 45, பபசர வடுகே 40, அசேல குணரத்ன 3/50, சீக்குகே பிரசன்ன 3/124

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 242 (79) – மஞ்சுல டி சொய்சா 90, நிலங்க சந்தகன் 5/69

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 219/8 (51.4) –  ப்ரிமோஷ் பெரேரா 65, திலான் துஷார 52*, விராஜ் புஷ்பகுமார 3/48

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 169/3 (29) – விமுக்தி 54*, பிரான்சிஸ்கோ 37, பதிரன 2/40  

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

இப்போட்டி நேற்று முன்தினம் கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஹஷான் துமிந்து 105 ஓட்டங்கள் குவிக்க, அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கீழ்வரிசை வீரர் அகில தனஞ்சய ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் லஹிரு மதுஷங்க, லக்ஷன் சந்தகன் மற்றும் சச்சித் பதிரன ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இளம் வீரர் வனிது ஹசரங்க அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காது சதம் விளாச, கொழும்பு கிரிக்கெட் கழகம் 384 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவரை தவிர, அஷான் ப்ரியஞ்சன் 81 ஓட்டங்களையும் கீழ்வரிசை வீரர் லஹிரு மதுஷங்க 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் அகில தனஞ்சய 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, போட்டி நிறைவடையும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 316 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஹஷான் துமிந்த, பிரியாமல் பெரேரா மற்றும் அஞ்சலோ ஜெயசிங்க ஆகியோர் அரைச்சதங்களை பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து பந்து வீச்சில் பிரகாசித்து வரும் சச்சித் பதிரான 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 276 (81.4) – ஹஷான் துமிந்து 105, அகில தனஞ்சய 42*, சச்சித் பதிரன 3/37, லஹிரு மதுஷங்க 3/45, லக்ஷன் சந்தகன் 3/63

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 384 (79.4) – வனிது ஹசரங்க 116*, அஷான் ப்ரியஞ்சன் 81, லஹிரு மதுஷங்க 59, ரொன் சந்திரகுப்த 58, அகில தனஞ்சய 4/119

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 316/6 – ஹஷான் துமிந்த 69, பிரியாமல் பெரேரா 63, அஞ்சலோ ஜெயசிங்க 52, சச்சித் பதிரான 4/86

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.