தனது இறுதி 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தோல்வியை சந்தித்த போல்ட்

744
 

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை அள்ளியவரும் உலகின் அதிவேக வீரர் என்று வர்ணிக்கப்படுபவருமான உசைன் போல்ட் தான் விடைபெறும் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் அமெரிக்காவின் ஜெஸ்டின் கெட்லிடம் தோல்வியை சந்தித்தார்.

இதனால் ஜெமைக்க வீரரான போல்ட் தான் பங்கேற்ற இறுதியான தனிநபர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் அவர் வெண்கலப் பதக்கத்தோடு ஆறுதல் அடையவேண்டி ஏற்பட்டது. 21 வயதான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மனும் போல்டை முந்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.    

லண்டனில் நடைபெறும் உலக மெய்வல்லுனர் தொடரின் ஆண்களுக்கான இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று ஞாயிறு அதிகாலை இடம்பெற்றது. இதில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக இரு முறை தடைக்கு உள்ளான 35 வயதான கெட்லின், கடுமையான சவாலுடன் எவராலும் அவதானிக்கப்படாத ஏழாவது ஓடுபாதையிலேயே ஓட்டத்தை ஆரம்பித்தார். போல்டுடன் ஒப்பிடுகையில் கோல்மனும் அவதானிக்கப்படாத வீரராகவே இருந்தார்.

உலக மெய்வல்லுனர் தொடருக்கு இலங்கையிலிருந்து 4 பேர் பங்கேற்பு

எனினும் உடல்தகுதி மோசமடைந்த நிலையில், போல்ட் தனது பலவீனமான பருவத்திலேயே தடகள போட்டிகளுக்கு விடைகொடுக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். எனினும் போட்டி ஆரம்பிக்கும்போது கூட போல்ட் தனது 20ஆவது சர்வதேச தங்கப்பதக்கத்தை வெல்வதற்கான சாத்தியமே இருந்தது.

எனினும் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் தனது ஓட்ட வேகம் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விறுவறுப்பாக நடைபெற்ற போட்டியில் கெட்லின் 9.92 வினாடிகளில் போட்டியை முடித்து தங்கம் வென்றார். 9.94 வினாடிகளில் வந்த கோல்மன் இரண்டாவது இடத்தை பிடித்தார். போல்ட் 9.95 வினாடிகளிலேயே போட்டி தூரத்தை முடித்தார்.

2012 ஆம் ஆண்டு இதே அரங்கில் 100 மீற்றரில் தங்கம் வென்ற போல்டினால் தனது இறுதியான 100 மீற்றர் போட்டியில் சோபிக்க முடியாமல் போனது.  

எனினும் போல்ட் போட்டியை மிக மந்தமாகவே ஆரம்பித்தார். அவர் 0.183 வினாடிகளில் போட்டியை ஆரம்பிக்கும்போது, அது கெட்லினை விடவும் 0.05 வினாடிகளில் தமதமாக காணப்பட்டது.

எனினும் கெட்லின் 2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக் 100 மீற்றம் சம்பியன், 2005இல் இரட்டை உலக சம்பியன் பட்டம் வென்றவராவார். அவர் கடந்த காலங்களில் ஊக்க மருந்து சர்ச்சையால் பெரும் சரிவை சந்தித்திருந்தார்.

எவ்வாறாயினும் போல்ட் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டிகளில் உலக சாதனையுடனேயே விடைபெறுகிறார். அவர் 100 மீற்றரை 9.58 வினாடிகளில் முடித்து உலக சாதனை படைத்ததோடு 200 மீற்றரில் 19.19 வினாடிகளில் முடித்ததே உலக சாதனையாக உள்ளது.

இதுவரை காலமும் வீழ்த்த முடியாத வீரராக பார்க்கப்பட்ட போல்ட் தனது தடகள வாழ்வின் கடைசி போட்டியில் தோற்றிருப்பது பலராலும் நம்ப முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

எவ்வாறாயினும் தனது ஓய்வு முடிவை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று போட்டிக்கு பின்னர் 30 வயதான போல்ட் குறிப்பிட்டார்.

ஓய்வுக்கு முன்னர் போல்ட் கடைசியாக வரும் சனிக்கிழமை 100 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியில் பங்கேற்கவுள்ளார்.