மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் விளையாடவில்லை – திமுத்

1755

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மத்திய வரிசை வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன் தெரிவித்துள்ளார். 

உலகக் கிண்ணப் போட்டியில் நேற்று (28) நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி ஆறுதல் வெற்றியை பெற்றது. 

மீண்டும் துடுப்பாட்டத்தில் ஏமாற்றம் தந்துள்ள இலங்கை

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of…

எனினும், இதுவரை வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தென்னாபிரிக்கா இந்தப் போட்டியில் மட்டும் மிகச்சிறப்பாக விளையாடி இலங்கை அணியை வீழ்த்தியது. இதனால் இலங்கை அணிக்கு அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இன்னும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

எனினும், இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தோல்வி பெறும் பட்சத்தில் இலங்கை அணிக்கு அரையிறுதிக்குத் தகுதி பெற இன்னும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், தென்னாபிரிக்காவுடனான தோல்வி குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திமுத் கருணாரத்ன கருத்து வெளியிடுகையில், 

எங்களுக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. குசல் ஜனித்தும், அவிஷ்க பெர்னாண்டோவும் சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடியிருந்தனர். அவர்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் பந்துவீச்சுக்கு முகங்கொடுத்து விளையாடினார்கள். இதனால் நாங்கள் ஓட்டங்களையும் குவித்தோம். 

எனினும், அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழந்ததன் பிறகு எமது தவறுகளை இனங்கண்டு களத்தடுப்பாளர்களை அருகாமையில் கொண்டு வந்து எமக்கு அழுத்தத்தைக் கொடுத்திருந்தனர். 

எனவே அந்த அழுத்தத்தை எம்மால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போனது. குறிப்பாக மத்திய வரிசையில் வந்து விளையாடுகின்ற வீரர்கள் அந்த அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மத்திய வரிசையில் விட்ட தவறனால் எம்மால் போதியளவு ஓட்டங்களை குவிக்க முடியாமல் போனது என கூறினார்.

இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்களை எடுத்திருந்தது. எனினும், மத்திய வரிசையில் விட்ட தவறினால் 96 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது. 

எனவே இந்த நிலைமை இதற்குமுன் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் காணமுடிந்தது. அதிலும் குறிப்பாக, அனுபவமிக்க வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமும் இதற்கான காரணமாக அமைந்திருந்தது. ஆகையால், ஒரு தலைவராக இதை இந்த நிலையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், 

எமக்கு மத்திய வரிசையில் ஒரு நிலையான சராசரியை முன்னெடுக்க முடியாமல் போனதுதான் இதற்கு முக்கிய காரணம். நிறைய ஓட்டமற்ற பந்துகளைக் பெற்றுக் கொண்டோம். அவ்வாறு ஓட்டங்களைக் குவிக்காது விடத்து அடுத்துவருகின்ற வீரர்களுக்கு நிறைய அழுத்தங்களை சந்திக்க வேண்டி ஏற்படும். என்னைப் பொறுத்த வரையில் நாங்கள் தேவையில்லாத அழுத்தமொன்றை உருவாக்கிக் கொண்டோம் என நான் நினைக்கிறேன். 

 உண்மையில் அவர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். ஹஷிம் அம்லா மற்றும் டு பிளெசிஸ் சிறந்து முறையில் துடுப்பெடுத்தடியிருந்தனர். அவர்கள் எந்தவொரு வேகமான துடுப்பாட்ட பிரயோகங்களையும் மேற்கொள்ளவில்லை. நிதானமாக துடுப்பெடுத்தாடியிருந்தனர்

ஆனாலும், நாங்களும் ஓரிரண்டு வேகமான துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களது கவனத்தையும் திசை திருப்பி இருக்க வேண்டும், ஆனால் நாங்கள் அந்த இடத்தில் கோட்டை விட்டோம். தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர்கள் விளையாடியதைப் போல துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும்.

மறுபுறத்தில் அவர்கள் வேகமாக துடுப்பெடுத்தாடியிருந்தனர். இதனால் எமது களத்தடுப்பாளர்களை பின்னால் நிறுத்துவதற்கு ஏற்பட்டது. எனவே எமது வீரர்கள் மத்திய வரிசையில் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து விளையாடாததால் தான் நாங்கள் தோல்வியைத் தழுவினோம். 

அதேபோன்று, எமது மத்திய வரிசையைப் பொறுத்தமட்டில் ஓட்டங்களை தொடர்ச்சியாக குவிக்காத வீரர்கள் தான் உள்ளனர். எனவே அவர்கள் ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்ததொரு ஆரம்பத்தைக் கொடுத்து அதிக ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தால் ஒருவேளை மத்திய வரிசை வீரர்களுக்கு அழுத்தங்கள் இல்லாமல் ஓட்டங்களைக் குவித்திருக்க முடியும். 

அதேபோன்று, எமக்கு போதியளவு ஓட்டங்கள் இல்லாத காரணத்தால் பொதுவாக மத்திய வரிசையில் களமிறங்குகின்ற வீரர்கள் ஓட்டங்களைப் பெற்றுகொள்ள முயற்சி செய்வார்கள். என்னைக் கொடுத்துக் கொண்டாலும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் களமிறங்கினால் நல்லதொரு இன்னிங்ஸொன்றை கட்டியெழுப்பி எனது பெயரின் கீழ் ஓட்டங்கனை எடுக்க கொஞ்சம் நேரங்களை எடுப்பேன். 

Photos : Sri Lanka vs South Africa | ICC Cricket World Cup 2019 – Match 35

எனினும், கட்டாயம் வெற்றிபெற வேண்டிய இவ்வாறான போட்டிகளில் அதுபோன்ற மனநிலையுடன் விளையாடாமல் நேர்மறையான சிந்தனையுடன் விளையாடியிருந்தால் நிச்சயம் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும். ஆனாலும், தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து இந்த ஆடுகளம் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இதனால் எங்களுக்கு பந்துகளை எதிர்கொள்வது சற்று கடினமாக இருந்தது. 

எனினும், நாங்கள் இதற்குமுன் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடியுள்ளதால் எவ்வாறு பந்துகளுக்கு முகங்கொடுத்து ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.  

இலங்கை அணியின் அரையிறுதிக்கான கனவு குறித்து கருத்து வெளியிட்ட திமுத் கருணாரத்ன, எஞ்சியுள்ள 2 போட்டிகளில் நாங்கள் கட்டாயம் வெற்றிபெற வேண்டும். இதற்கு நாங்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். 

ஐ.சி.சி இன் புதிய ஒருநாள் தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்ட இங்கிலாந்து அணியை…

இதேநேரம், நுவன் பிரதீப்பின் உடல்நிலை குறித்து திமுத் கருணாரத்ன கருத்து வெளியிடுகையில், நுவன் பிரதீப்புக்கு சின்னம்மை போட்டுள்ளது. அவர் குணமடைவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் செல்லும் என கூறமுடியாது. எனவே வைத்தியரின் அறிக்கையின்படி அவருக்கு அடுத்துவரும் போட்டிகளில் விளையாட முடியாது போனால் என்ன முடிவெடுப்போம் என்பதை தீர்மானிப்போம் என தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<