கண்டி ஹொக்கி சிக்ஸர்ஸ் போட்டிகள் சனிக்கிழமை (28) பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் ஆரம்பமாகியது. 50 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில், சூப்பர் 10 பிரிவில் விமானப்படை அணியானது இராணுவ அணியை வென்று கிண்ணத்தை சுவீகரித்தது.

முதல் நாளில் 65 போட்டிகள் விளையாட திட்டமிடப்பட்டிருந்த பொழுதும், கடும் மழை  காரணமாக திட்டமிட்டபடி நடாத்த முடியாமல் போனது. எனினும் 2ஆம் நாளில் அனைத்து போட்டிகளும் தடைகளின்றி திட்டமிட்டபடி நடைபெற்றது.

அதிக எண்ணிக்கையான அணிகள் கலந்து கொண்டமையால்  இப்போட்டியானது மொத்தமாக 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. சிரேஷ்ட ஆண்கள் பிரிவானது, சூப்பர் 10 மற்றும் டொப் 20 என இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் முப்படைகள் மற்றும் ஏனைய கழகங்கள் உள்ளடங்கலாக 9 அணிகள் பங்குபற்றின. மேலும் 15 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கண்டியை சார்ந்த பாடசாலை அணிகள் பங்குபற்றின.

இவ்வருடத்தின் சிறப்பம்சமாக மூத்த வீரர்களுக்கான பிரிவில், இந்தியாவில் இருந்து பெங்களூரை சேர்ந்த ரேஞ்சர்ஸ் அணி பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் இராணுவ அணி மற்றும் விமானப்படை அணிகள் ஆண்கள் சூப்பர் 10 பிரிவில் அனைத்து போட்டிகளையும் வென்று ஆதிக்கம் செலுத்த, பெண்கள் பிரிவில்  விமானப்படை அணி அனைத்து போட்டிகளையும்  வென்று ஆதிக்கம் செலுத்தியது.

முதல் நாளன்று மழை குறுக்கிட்டதன் காரணமாக குழு மட்டத்திலான அனைத்து போட்டிகளும் முழுமையாக முடிவடையவில்லை.

2ஆம் நாளான 29ஆம் திகதி மழையின் குறுக்கீடு காணப்படாமையால், முதல் நாளில் திட்டமிட்ட போட்டிகள் உட்பட அனைத்து போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றது. ஹொக்கி ரசிகர்களின் உற்சாகத்தின் மத்தியில் அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாகவே அமைந்தது.

பெண்களுக்கான 15 வயதிற்கு உட்பட்ட பிரிவு

பெண்களுக்கான 15 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சீதாதேவி கல்லூரியானது, சுவர்ணமாலி பெண்கள் கல்லூரியை 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. இப்பிரிவில் சிறந்த வீராங்கனையாக சீதாதேவி கல்லூரியை சேர்ந்த டில்ஹானி ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக அதே கல்லூரியை சார்ந்த கேஷிகா குணரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

ஆண்களுக்கான 15 வயதிற்கு உட்பட்ட பிரிவு

இப்பிரிவில் விறுவிறுப்பான இறுதி போட்டியின் பின்னர் தர்மராஜ கல்லூரியானது, புனித சில்வெஸ்டர் கல்லூரியை பெனால்டி அடிப்படையில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியது. பிரிவின் சிறந்த வீரராக ரந்துண் தர்மரத்ன தெரிவுசெய்யப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக தர்மராஜ கல்லூரியின் ஹர்ஷ வீரகோன் தெரிவு செய்யப்பட்டார்.

மூத்த வீரர்களுக்கான பிரிவு

40 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொண்ட இப்பிரிவானது, இந்திய அணியின் வருகையுடன் முக்கியத்துவம் பெற்றது. எனினும் திறமைமிக்க இந்திய ரேஞ்சர்ஸ் அணியானது அரையிறுதி போட்டியுடன் வெளியேற, மாஸ்டர்ஸ் A  மற்றும் மாஸ்டர்ஸ் B அணிகள் முறையே முதலாம், இரண்டாம் இடங்களை பெற்றுக்கொண்டன. போட்டியின் சிறந்த வீரராக பிரசன்ன அபேரத்ன தெரிவு செய்யப்பட, சிறந்த கோல் காப்பாளராக லியனாராச்சி தெரிவு செய்யப்பட்டார்.

பெண்கள் பிரிவு

முப்படைகள் கலந்து கொண்ட இப்பிரிவில், இறுதிப்போட்டியில் கடற்படை அணியை பெனால்டியின் மூலம் வெற்றிப்பெற்று விமானப்படை அணியானது கிண்ணத்தை சுவீகரித்து. பிரிவின் சிறந்த வீராங்கனையாக விமானப்படை அணியை சேர்ந்த இரேஷா வீரபாகு தெரிவுசெய்யப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக விமானப்படை அணியின் ஜீவந்திகா கீர்திரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

ஆண்களுக்கான டொப் 20 பிரிவு

அதிக எண்ணிக்கையிலான அணிகள் கலந்துகொண்ட இப்பிரிவில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வித்தியார்த்த பழைய மாணவர்கள் கழகம் கிண்ணத்தை சுவீகரித்து. ஸாஹிரா பழைய மாணவர்கள் கழகத்துடனான இறுதிப்  போட்டியில் 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் வித்தியார்த்த பழைய மாணவர்கள் கழகம் வெற்றிபெற்றது. போட்டியின் சிறந்த வீரராக வித்தியார்த்த பழைய மாணவர்கள் கழகத்தின் கசுன் ஜயசிங்க தெரிவு செய்யப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக வித்தியார்த்த பழைய மாணவர்கள் கழகத்தின் ஜனித் சமரகோன் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆண்களுக்கான சூப்பர் 10 பிரிவு

அனைவராலும் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட இப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு இராணுவ அணி மற்றும் விமானப்படை அணிகள் தகுதிபெற்றன.  பெருந்திரளான ரசிகர்களின் மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில் இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. முதற் பாதி முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா 1 கோல்கள் அடித்து சமநிலையில் காணப்பட்டன.

இரண்டாம் பாதியில் முதல் கோலை விமானப்படை அடித்த பொழுதும், இராணுவ அணியானது இன்னொரு கோல் அடித்து போட்டியை சமநிலை செய்தது. போட்டியின் வெற்றியாளரை தெரிவு செய்ய பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்ட பொழுது, விமானப்படை  அணியானது இராணுவ அணியை 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்து.

போட்டியின் சிறந்த வீரராக இராணுவ அணியின் குசல் சந்திரசிறி தெரிவு செய்யப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக விமானப்படை அணியின் சமல்க பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டார்.

இந்திய ஹொக்கி அணியின் முன்னாள் வீரரும் , 1980ஆம் ஆண்டு மொஸ்கோ நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான அல்லன்ஸ் ஸ்கூபின் இப்போட்டிகளில் கலந்து சிறப்பித்தார். பதக்கம் வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார். “கண்டி ஒரு அற்புதமான நகரம், இலங்கை ஒரு அழகான நாடு இங்கே வந்தமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போட்டியின் ஒழுங்கமைப்பாளர்கள் இப்போட்டியை சிறப்பாக ஒழுங்கமைத்து இருந்தனர். மேலும் எம்மை சிறப்பாக வரவேற்று, கவனித்த அனைவருக்கும் நன்றி. இங்கு அற்புதமான ஹொக்கி ரசிகர்கள் இருக்கிறார்கள், பெண்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். இப்போட்டியில் கலந்துகொண்டது மகிழ்ச்சியை தருகிறது. அடுத்த வருடமும் நாங்கள் கட்டாயம் இப்போட்டியில் கலந்துகொள்வோம்” என தெரிவித்தார்.