அரையிறுதிக்கு தகுதிபெற முடியுமென ஜீவன் மெண்டிஸ் நம்பிக்கை

789

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களுடைய மன உறுதியை அதிகரித்துக்கொள்ளும் பட்சத்தில், எதிரணிகளுக்கு சிறப்பான போட்டியை கொடுக்க முடியும் என சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை அணி, துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியதால் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், நான்கு வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் அணியில் இணைந்த ஜீவன் மெண்டிஸ், திமுத் கருணாரத்னவின் தலைமையிலான இலங்கை அணியால் அரையிறுதிக்கு முன்னேர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தில் சிறந்த ஆரம்பத்தை பெறத் தவறியிருக்கும் இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இம்முறைக்கான………….

“உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகள் மிக முக்கியம். இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் அணி வீரர்களிடம் மன உறுதி ஏற்படும். அடுத்த போட்டிகளில் எம்மால் சாதிக்க முடியும் என நம்புகிறோம். இம்முறை உலகக் கிண்ணத் தொடர் சிறந்த போட்டித் தன்மையாக அமைந்துள்ளது. குறிப்பாக, இன்னும் 8 போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில், அதில் 5 போட்டிகளில் வெற்றிபெற்றால் எம்மால் அரையிறுதிக்கு தகுதிபெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

அதேநேரம், இலங்கை அணியின் துடுப்பாட்டம் கடந்த போட்டியில் சறுக்கியிருந்தது. இந்த உலகக் கிண்ணத் தொடரை பொருத்தவரை துடுப்பாட்ட வீரர்கள் கட்டாயம் பிரகாசிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இப்படி இருக்கையில் அடுத்த போட்டிகளில் இலங்கை அணியால் சவால் மிக்க ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

“துடுப்பாட்ட வீரர்கள் என்ற ரீதியில் 270 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவிக்க வேண்டும். அவ்வாறு ஓட்டங்கள் பெறப்பட்டால் மாத்திரமே எமது சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என்பவற்றை கொண்டு எதிரணிக்கு சவால் கொடுக்க முடியும். எமது அணியில் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடக்கூடிய வீரர்கள் உள்ளனர். அவர்கள் முன்வந்து ஓட்டங்களை குவிக்கும் போது, ஏனைய துடுப்பாட்ட வீரர்களால் அவர்களுடன் இணைந்து ஓட்டங்களை குவிக்க முடியும்”

இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் முக்கியமான விக்கெட்டுகளை விட்டுக்கொடுப்பதை வழமையாக கொண்டுள்ளது. முதல் 10 ஓவர்களில் விக்கட்டுகளை விட்டுக்கொடுக்காமல் விளையாடும் பட்சத்தில் இலங்கை அணியால் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்ல முடியும் என்பதை மெண்டிஸ் சுட்டிக்காட்டினார்.

“நாம் ஒவ்வொரு முறையும் முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்ககூடாது என்பது தொடர்பில் கலந்துரையாடுகின்றோம். ஆனால் முதல் போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசி எம்மை கட்டுப்படுத்தியிருந்தனர்.

Photos: CWC19 – Sri Lanka training session ahead of Afghanistan match

முதல் பத்து ஓவர்களுக்கு விக்கெட்டிழப்பின்றி 30 அல்லது 40 ஓட்டங்கள் பெற்றால் போதுமானது. பின்னர், முதல் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான இணைப்பாட்டத்தை பெறும் பட்சத்தில் பின்வரிசையில் உள்ள வீரர்களுக்கு வேகமாக ஓட்டங்களை குவிக்க முடியும்” என்றார்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டி நாளைய தினம் (04) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு கார்டிப்பில் உள்ள ஷோபியா கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<