இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவரான காஞ்சன ஜயரட்ன

169
 

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் 17ஆவது தலைவராக அதன் உப தலைவரும், சப்ரகமுவ மாகாண கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தவைவருமான காஞ்சன ஜயரட்ன போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று (04) காலை விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு பிரதேச செயலாளர் பிரிவு, கரப்பந்தட்ட யாப்பு மற்றும் அதி விசேட பிரிவுகள் உள்ளடங்கலாக 98 சங்கங்கள் தகுதிபெற்றிருந்ததுடன், 196 ஒட்டுமொத்த வாக்குகள் இதன்போது பதிவு செய்யப்பட்டன

>> இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள கரப்பந்தாட்ட நட்சத்திரங்கள்

அதுமாத்திரமின்றி, இம்முறை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய மூன்று பதவிகளுக்குமான உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இதன்படி, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக, கான்ஞன ஜயரட்ன தெரிவு செய்யப்பட்டார்.

முன்னதாக, இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரும், கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த போதிலும், தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன் தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்தார்

இதன்படி, எந்தவொரு போட்டியுமின்றி கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், சப்ரகமுவ மாகாண கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தவைவருமான காஞ்சன ஜயரட்ன, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்

>> தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் Bitu Link, CEB

காஞ்சன ஜயரட்ன கரப்பந்தாட்டம், கிரிக்கெட், கால்பந்து, மெய்வல்லுனர் மற்றும் பேஸ்போல் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி கரப்பந்தாட்ட அணிக்காக விளையாடியுள்ள அவர், 2009இல் முதல்தடவையாக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராகத் தெரிவானார். அதன்பிறகு தொடர்ச்சியாக 12 வருடங்கள் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராகவும், போட்டி ஏற்பாட்டுக் குழு உறுப்பினராகவும், பயிற்சியாளராகவும், தேர்வுக் குழுவின் தலைவராகவும் அவர் செயற்பட்டுள்ளார்

அத்துடன், இலங்கை டைகொண்டோ சம்மேளனத்தின் தலைவராகவும், இரத்தினபுரி மாவட்ட கால்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும், இரத்தினபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் அவர் கடமையாற்றியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

>> இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள கரப்பந்தாட்ட நட்சத்திரங்கள்

இதனிடையே, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளராக வர்த்தக சேவை சங்கத்தின் நாலக ஷான்த சிறி தெரிவாக, பொருளாளராக இரத்தினபுரியைச் சேர்ந்த துஷா சம்பத் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.  

அத்துடன், உப செயலாளர்களாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சமன் அபேரட்னவும், இலங்கை பாடசாலைகள் கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் சாந்த சிறி மீகமுவகே ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டார்கள்

இதேநேரம், உப தலைவர் பதவிக்கு எட்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பிரிகேடியர் மஹேஷ் அபேரட்ன (141 வாக்குகள்), கே.ஆர் ரத்னமுதலி (136 வாக்குகள்), சந்தன விஜேசிங்க (131 வாக்குகள்), நிமல் பெரேரா (128 வாக்குகள்), விமானப்படை கொமடார் சொய்ஸா (127 வாக்குகள்), எஸ் சில்வா (101 வாக்குகள்), ஆகிய ஆறு பேரும் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று உப தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்

>> கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்பட்ட ஜப்னா வொலிபோல் லீக்

அத்துடன், தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இருவர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், 135 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தனபால ஜயபத்ம இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் சுயாதீன உறுப்பினர்களாக 11 பேர் தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Kanchana Jayarathne elected presidentஇதில் யாழ் கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரவி வர்மன் 77 வாக்குகளைப் பெற்று இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் சுயாதீன உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அத்துடன், இம்முறை இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன நிர்வாகிகளுக்கான தேர்தல் மூலம் தெரிவாகிய ஒரேயொரு தமிழ் பேசுகின்ற உறுப்பினர் இவர் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதேவேளை, சுயாதீன உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்ட யாழ் கரப்பந்தாட்ட சம்மேளனத்தைச் சேர்ந்த கே, யோகரத்னம் 28 வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<