தேசிய மரதன் ஓட்ட சம்பியன்களாக சந்தனுவன், சுஜானி தெரிவு

160
44th NSF

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இவ்வருடத்துக்கான 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளின் சம்பியன்களாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த டி.ஜி.டி சந்தனுவன், சுஜானி பெரேரா ஆகியோர் தெரிவாகினர்.

இதேநேரம், இம்முறை தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டத்தில் ஆண்கள் குழு நிலைப் பிரிவில் முதல் மூன்று இடங்களையும் மேல் மாகாணமும், பெண்கள் பிரிவில் முதலிரு இடங்களை மேல் மாகாணமும், மூன்றாவது இடத்தை சப்ரகமுவ மாகாணமும் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நேற்று  காலை 5.30 மணியளவில் குருநாகல் – பாதனிய சந்தியில் இருந்து ஆரம்பமாகிய தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்படி, 42 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட இம்முறை மரதன் ஓட்டத்தின் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை மேல் மாகாண வீரர் டி.ஜி.டி சந்தனுவன் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியை 2 மணித்தியாலமும் 15 நிமி. 24 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியின் இரண்டாம் கட்டம் முடிவுகள்

அதே மாகாணத்தைச் சேர்ந்த சக வீரர்களான எஸ்.டி குணசேகர (2 மணி. 26 நிமி. 58செக்.) இரண்டாவது இடத்தையும், மஹேஷ் குணதிலக்க (2 மணி. 28 நிமி. 36செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், பெண்கள் பிரிவு மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலமும் 55 நிமி. 03 செக்கன்களில் நிறைவுசெய்த மேல் மாகாண வீராங்கனை சுஜானி பெரேரா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், மேல் மாகாணத்தைச் சேர்ந்த குமாரி பெர்னாண்டோ (3 மணி. 02நிமி. 06செக்.) இரண்டாவது இடத்தையும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த நிஸங்ஸலா பண்டார (3 மணி. 07 நிமி. 08செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

  • பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்கள்

மேலும், மரதன் ஓட்டத்தின் ஆண்கள் பிரிவு ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை மேல் மாகாணம் பெற்றுக்கொள்ள, 2ஆவது இடத்தை வட மத்திய மாகாணம் பெற்றுக்கொண்டது. எனினும், பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை எந்தவொரு மாகாணத்தாலும் பெற்றுக்கொள்ள முடியாது போனது.

ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்

இதேவேளை, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிவைக்கும் விசேட வைபவம் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளரும், ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளருமான ஜயந்த விஜேரத்ன சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.