இனவெறி துஷ்பிரயோகம் தொடர்பில் முறையிட்டுள்ள ஜொப்ரா ஆர்ச்சர்

241
Image Courtesy - ICC Twitter

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் சமூகவலைத்தளங்கள் ஊடாக இனவெறி துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரது இன்ஸ்ராகிராம் (Instagram) பக்கத்தில் பதவிடப்பட்ட இனவெறி துஷ்பிரோயகம் தொடர்பிலான வார்த்தைகளை இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் கையளித்து, அதுதொடர்பில் சரியான முடிவினை எடுக்குமாறு ஜொப்ரா ஆர்ச்சர் கோரியுள்ளார்.

>>இங்கிலாந்து அணியின் உப தலைவராக மொயீன் அலி நியமனம்<<

அதேநேரம், இவ்வாறான இனவெறி துஷ்பிரயோகம் மூலம் அவர் கடினமான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், அதனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்னர் உளவியல் ரீதியிலான தாக்கத்தை எதிர்கொண்டுவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த இனவெறி கருத்துகள் தொடர்பில் குறிப்பிட்ட ஜொப்ரா ஆர்ச்சர், 

“கடந்த நான்கு நாட்களாக இனவெறி துஷ்பிரயோகம் உட்பட சில துஷ்பிரயோகங்களுக்கு இன்ஸ்ராகிரம் மூலமாக நான் முகங்கொடுத்து வருகின்றேன். இத்துடன், அதனை நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

க்ரிஸ்டல் பெலஸ் கால்பந்து வீரர் லிர்ப்ரைட் ஷாஹா கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுவன் ஒருவனால், இணையம் மூலம் இனவெறி துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியிருந்தார். நான் முகங்கொடுத்த கருத்தினை பதிவுசெய்து, இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் முறையிட்டுள்ளேன். இதுதொடர்பில் நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என நினைக்கிறேன்”

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிய இவர், தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இரண்டாவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதேநேரம், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், இவருக்கு எதிராக எச்சரிக்கையுடன் கூடிய அபராதம் விதிக்கப்பட்டது. அதனையடுத்து, இவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“நான் எனது கவனயீனத்தால் தவறொன்றை செய்துவிட்டேன். அதற்கான விளைவுகளுக்கு நான் முகங்கொடுத்திருக்கிறேன். நான் பெரிய குற்றத்தை புரியவில்லை என்பதுடன், அதற்காக நான் மீண்டும் வருத்தமடைந்து வருகிறேன்.

நான் இந்த வாரம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கவனம் செலுத்துகிறேன். எனக்கு பெரிதாக தும்மல் எடுத்தாலும் அது தலைப்பு செய்தியாக மாறிவிடுகிறது. நேரடியாக கூறினால், நான் 90 மைல் வேகத்துக்கு குறைவாக வீசினால் அது செய்தி. 90 மைல் வேகத்துக்கு நீண்ட நேரம் பந்துவீசாவிட்டாலும் செய்தி. முதல் தர கிரிக்கெட் மட்டத்தில் ஒருவர் மீது தனிக்கவனம் எழுந்தால்,  அவரை அதிகமாக கண்காணிப்பார்கள் என்பதை நான் உணருகிறேன்”

குறிப்பாக தனிமைப்படுத்தலுக்கு பின்னர், நான் வலைப்பயிற்சிக்கு வரும் போது, எனக்கான தன்னம்பிக்கையை கொண்டுவருவதற்கு தடுமாறினேன். காரணம், பயிற்சிக்காக அறையிலிருந்து வெளியில் வரும் போது நான் வைக்கும் ஒவ்வொரு அடியும் கமராக்களால் படம்பிடிக்கப்படுகின்றன. இதுபோன்ற காட்சிகள் என்னை சங்கடமாக்குகின்றன” என ஜொப்ரா ஆர்ச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<