இங்கிலாந்து அணியின் உப தலைவராக மொயீன் அலி நியமனம்

202

அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியின்  உப தலைவராக மொயீன் அலி  நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மகளிர் உலகக் கிண்ணம் எப்போது? நேரடியாக தகுதிபெறுமா இலங்கை?

இந்த தொடருக்கான குழாத்தில் மேற்கிந்திய  தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் எந்த ஒரு இங்கிலாந்து வீரரும்  இணைக்கப்படவில்லை.

கொவிட்-19 வைரஸ்  தொற்று பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குழாம் மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடருக்கான குழாம் என இரு வெவ்வேறு குழாம்களை அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில், இங்கிலாந்து  அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான உப தலைவராக செயற்பட்டு வந்த ஜோஸ் பட்லர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால், அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

எனவே, இங்கிலாந்து அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவரான இயன் மோர்கனுக்கு உதவியாக, உப தலைவராக மொயீன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.  

மொயீன் அலி இங்கிலாந்து அணியின் வெற்றிப்பயணமான உலகக் கிண்ணத்தில், தன்னுடைய 100வது ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த போதும், மோசமான பிரகாசிப்பின் காரணமாக அணியிலிருந்து வெளியேறியிருந்தார்.

எவ்வாறாயினும், இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்த அலி, குறித்த தொடரை 1-1 என சமப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக மாறியிருந்தார். எனவே, இவர் மீண்டும் மட்டுப்படுத்த ஓவர்கள் கொண்ட அணிக்குழாத்தில் இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

மொயீன் அலி, இங்கிலாந்து அணியின் உப தலைவராக செயற்படுவதற்கு முன்னர், அந்த அணியின் உள்ள பயிற்சி ஆட்டத்தில் ஒரு அணியை வழிநடத்தியிருந்ததுடன், நாளை மறுதினம் நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியிலும் அணியை வழிநடத்தவுள்ளார். இந்த பயிற்சிப் போட்டியை தொடர்ந்து இங்கிலாந்து லையன்ஸ் அணி எதிர்வரும் 26ம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், உயரியல் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் நடத்தப்படவுள்ளதுடன், போட்டி ரசிகர்களின்றி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க