டோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய வீரர்கள் அமர்க்களம்

Tokyo Olympics - 2020

107
 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா கோலகலமாக நேற்று ஆரம்பமாகியது. 

கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டிகள் இன்று வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தன

டோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் இலங்கை வீரர்கள் பின்னடைவு

பதினொரு தங்கப் பதக்கங்களுக்காக நடைபெற்ற இன்றைய போட்டிகளில் 3 தங்கப் தக்கங்களை வென்று சீனா முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கப்பதக்கம் வென்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சீனாவுக்கு முதல் தங்கம்

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முதலாவது தங்கப் பதக்கத்தை சீனாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை யாங் கியான் வென்றெடுத்தார்

அசாக்கா துப்பாக்கி சுடுதல் அரங்கில் இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் எயார் ரைபல் இறுதிப் போட்டியில் யாங் கியான் 251.8 புள்ளிகளை எடுத்து புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்

இந்தப் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்டாஷியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும், சுவிட்ஸர்லாந்தின் நினா கிறிஸ்டென் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

ஒலிம்பிக் பாரம்பரியங்களின் பிரகாரம் முதலாவது தங்கப் பதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தோமஸ் பெச் வழங்கினார்

ஜப்பானின் முதலாவது பதக்கம்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முன்னின்று நடத்தம் வரவேற்பு நாடான ஜப்பானுக்கு முதலாவது தங்கப் பதக்கம் ஆண்களுக்கான ஜூடோ போட்டியில் கிடைத்தது.

நிப்பொன் புடோகான் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட நாஓஹிசா டக்காட்டோ, ஜப்பானுக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தார்.

இறுதியாக, 2016 ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த டக்காட்டோ, இன்றைய போட்டியில் சைனீஸ் தாய்ப்பே வீரர் யுங் வெய் யங்கை வெற்றிகொண்டு தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இந்தியாவுக்கு முதல் பதக்கம்

பெண்களுக்கான பளுதூக்குதல் பிரிவில் 21 ஆண்டுகளுக்குப் பின், கர்னம் மல்லேஸ்வரிக்கு பின்னர் ஷாய்கோம் மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார்.  

2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் கர்னம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். அதன்பின் 21 ஆண்டுகள் இடைவெளியில் தற்போது மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

49 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ (87 கிலோ ஸ்னெட்ச், 115 கிலோ க்ளீன் அண்ட் ஜேர்க்) தூக்கி 4 விதமான முற்சிகளிலும் அசத்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்

Photos : Opening Ceremony- 2020 Tokyo Olympic Games

சீனாவின் ஹிஹு ஹோ 210 கிலோ எடை தூக்கி தங்கம் வென்று ஒலிம்பிக்கில் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தோனேஷிய வீராங்கனை கேன்டிகா ஆயிஷா 194 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனிடையே, ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீர்ர டெனிஸ் இஸ்டோமினை வீழ்த்தி இந்திய வீரர் சுமித் நகல் வெற்றிபெற்றார்.

இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் 25 ஆண்டுகளுக்குப்பின் ஆண்கள் டென்னிஸ் பிரிவில் முதல் வெற்றியை இந்தியா பதிவுசெய்தது.

ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி   

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நொவாக் ஜோகோவிச், ஒலிம்பிக் போட்டியின் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.

ஜோகோவிச் முதல் சுற்றில் பொலிவியா வீரர் ஹூகோ டெலியனுடன் மோதினார். இதில், 6-2, 6-2 என்ற நேர் செட்டில் பொலிவியா வீரரை ஜோகோவிச் வீழ்த்தினார்.

ஒலிம்பிக் கால்பந்து முதல் போட்டியில் பிரேசில், பிரான்ஸ் இலகு வெற்றி

இந்த ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ், பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ், விம்பிள்டன் பட்டங்களை தொடர்ச்சியாக வென்று இருக்கும் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது

அதேபோல, அடுத்துவரும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் பட்டத்தையும் வென்றால், ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைக்க முடியும்.

ஹங்கேரி வீரருக்கு ஹெட்ரிக் தங்கம்

வாள் சண்டைப் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஹங்கேரி வீரர் அரோன் சிசிலக்யி பெற்றுக்கொண்டார்.

இன்று நடைபெற்ற வாள் சண்டை சப்ரி பிரிவின் இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் லல்க்ல் சமிலியை 15க்கு 7 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி அவர் வெற்றி பெற்றார்

சீனா முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல்நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் சீனா 3 தங்கம், ஒரு வெண்கல பதக்கங்களை வென்று முதலிடத்தில் இருந்தது

முதலாம் நாளன்று 9 நாடுகள் குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தை வென்றிருந்தன. அத்துடன் 29 நாடுகள் குறைந்தது ஏதாவது ஒரு பதக்கத்தை வென்றிருந்தன.

மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…