இங்கிலாந்து ஒருநாள் அணியில் மீண்டும் ஜோ ரூட்

England Tour of India 2024

74

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்திய சுற்றுப்பயணம் மற்றும் பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்திய சுற்றுப்பயணத்திற்கு பெயரிடப்பட்டுள்ள அதே இங்கிலாந்து ஒருநாள் அணி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் மற்றும் T20I குழாம்களில் தலா 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 

இங்கிலாந்து ஒருநாள் மற்றும் T20I அணிகளின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்திய சுற்றுப்பயணம் இங்கிலாந்தின் முதல் சுற்றுப்பயணமாகும். இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 5 T20I போட்டிகள் அடங்கும். 

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடது காலில் காயம் அடைந்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ஒருநாள் அணி மற்றும் T20I அணியில் நீக்கப்பட்டுள்ளார். அவர் அணித்தேர்வுக்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப் படவில்லை. இங்கிலாந்து அணியை T20I மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலுமே ஜோஸ் பட்லர் வழிநடத்தவுள்ளார். 

அதே சமயம் ஒருநாள் அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரேஷ்ட வீரரான ஜோ ரூட் பெயரிடப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. அதன் பின் ஜோ ரூட்டுக்கு இங்கிலாந்து ஒருநாள் அணியிலும், T20I அணியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு T20I அணியில் இடம் அளிக்கப்படவில்லை. 

இந்திய அணியுடனான T20I தொடரில் பங்கேற்க உள்ள அதே அணி தான் ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. ஆனால், ஒரே ஒரு மாற்றமாக T20I அணியில் ஜோ ரூட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ரெஹான் அஹ்மட் இணைக்கப்பட்டுள்ளார். இவர், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அறிமுகமானமை குறிப்பிடத்தக்கது 

இதனிடையே, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட ஹெரி ப்ரூக், இந்த முறை அணியில் இடம்பெற்றுள்ளார். 

இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ள அதே இங்கிலாந்து ஒருநாள் அணி தான் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலும் பங்கேற்க உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது 

இதேவேளை, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் முதலில் விளையாட உள்ளன. 

இந்த T20I தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த T20I தொடரின் இரண்டாவது T20I போட்டி ஜனவரி 25 ஆம் திகதி சென்னையிலும், மூன்றாவது T20I போட்டி ஜனவரி 28 ஆம் திகதி ராஜ்கோட்டிலும், நான்காவது T20I போட்டி ஜனவரி 31 ஆம் திகதி கா{ஹஞ்சேவிலும், ஐந்தாவது T20I போட்டி பெப்ரவரி 2 ஆம் திகதி மும்பையிலும் நடைபெற உள்ளன. அதன் பின் பெப்ரவரி 6, 9 மற்றும் 12 ஆகிய மூன்று திகதிகளில் இந்த இரண்டு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. 

சம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான

இங்கிலாந்துஅணிவிபரம்:

 

ஜோஸ் பட்லர் (தலைவர்), கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹெரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டன், ஜொப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், ஜோ ரூட், சகிப் மஹ்மூத், பில் சோல்ட், மார்க் வுட் 

 

இந்தியாவுக்கு எதிரான T20I தொடருக்கான இங்கிலாந்து அணி: 

 

ஜோஸ் பட்லர் (தலைவர்), ரெஹான் அஹ்மட், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹெரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டன், ஜொப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், சகிப் மஹ்மூத், பில் சோல்ட், மார்க் வுட்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<