ஜப்னா சுப்பர் லீக் கிண்ணத்தை தமதாக்கிய வேலணை வேங்கைகள்

677

யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட்டினை மக்கள் மயப்படுத்தும் நோக்கத்துடன் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜப்னா சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது பருவகால தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் (9) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி வரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்ற வேலணை வேங்கைகள் ஜப்னா பந்தேர்ஸின் தொடர் வெற்றியினை முடிவிற்கு கொண்டுவந்ததுடன் ஜப்னா சுப்பர் லீக் வெற்றிக் கிண்ணத்தினையும் தம்வசப்படுத்தியிருந்தனர்.

முதலாவது ஜப்னா சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் தொடரில் தோல்விகள் ஏதுமின்றி முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த  ஜப்னா பந்தேர்ஸ் அணியும், ஜப்னா பந்தேர்ஸிற்கெதிரான முதலாவது தகுதிப்போட்டியில் மாத்திரம் தோல்வியடைந்து இரண்டாவது தகுதிப்போட்டியில் அரியாலை வோரியர்ஸ் அணியினை 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த வேலணை வேங்கைகள் அணியினரும் மோதியிருந்தனர்.

ஜெப்னா சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஜெப்னா பந்தேர்ஸ்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பந்தேர்ஸ் அணியின் தலைவர் அருண்குமார் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்திருந்தார். தீர்மானம் மிக்க இறுதிப்போட்டிக்காக வேங்கைகளிற்காக அணியின் தலைவர் மணிவண்ணன் நந்தகுமாரின் இடத்திற்காக பிரதியீடுசெய்யப்பட்டிருந்தார். பந்தேர்ஸ் தமது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கல்கோகனிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் பிரதிசினை உள்வாங்கியிருந்தனர்.

வேலணை வேங்கைகளது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 25 ஓட்டங்களை பெற்றிருக்கையில் ஆடுகளம் விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர்.  நான்காவது இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்திருந்த சத்தியன் ஒரு முனையில் நிதானித்திருக்க, வேலணை வேங்கைகள் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஆறாவது இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு களத்திற்கு விரைந்த உத்தமகுமரன் 20 பந்துகளில் அதிரடியாக அரைச்சதம் கடந்து வேங்கைகளை பலமான ஓட்ட எண்ணிக்கையினை நோக்கி நகர்த்தினார்.  

அணி 151 ஓட்டங்களை பெற்றிருக்கையில் 18 ஆவது ஓவரின் முதலாவது பந்தில் சத்தியன் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, வேங்கைகள் 200 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெறும் சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டது.  உத்தமகுமரன் 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 73 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

உத்தமகுமரனின் அதிரடி ஆட்டத்தின் துணையுடன் வேங்கைகள் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 என்ற பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டனர்.

பந்தேர்ஸ் சார்பில் கதியோன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

172 என்ற பலமான வெற்றி இலக்கினை எட்டுவதற்கு பந்தேர்ஸ்சின்  சந்தோஸ் தனது புதிய ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி சுரேந்திரன் சகிதம் களம் விரைந்திருந்தார்.

16 ஓட்டங்களை பெற்றிருக்கையில் சுரேந்திரனின் விக்கெட்டினை சத்தியன் வீழ்த்த, லிங்கநாதன் மேலும் 2 விக்கெட்டுக்களை சாய்க்க 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து ஜப்னா பந்தேர்ஸ் தடுமாறியது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சகிப் அல் ஹசன் நீக்கம்

அதிரடியாக துடுப்பாடிய மோகன்ராஜ்ஜின் விக்கெட்டினையும் சத்தியன் வீழ்த்த போட்டி வேங்கைகளின் கைகளினுள் நகர்ந்தது.

அணி 75 ஓட்டங்களை பெற்றிருக்கையில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட ஜப்னா பந்தேர்ஸ் 11 ஆவது ஓவரில் 6 ஆவது விக்கெட்டினையும் பறிகொடுத்தனர் .

எட்டாவது இலக்கத்தில் களத்திற்கு வந்த பிரசன்னா, அனுரதனுடன் இணைந்து 41 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து 16 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்தேர்ஸ் அணி 138 ஓட்டங்களை பெற்றிருக்கையில் அருரதன் ரண் அவுட் மூலம் ஆட்டமிழந்தார் எனினும், விக்கெட்டினை களத்தடுப்பாட்ட வீரர் கைகளால் பந்தின்றி தட்டியாதாக நடுவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. எனினும் நடுவர் அதனை மறுத்திருந்தார்.

18 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து பந்தேர்ஸ் அணி 150 ஓட்டங்களை பெற்றிருந்தது. இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 21 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற நிலைக்கு போட்டி நகர்ந்தது.

சத்தியன் 19 ஆவது ஓவரில் 10 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து சாம்பவனின் விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இறுதி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 10 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்த உத்தமகுமரன் வேலணை வேங்கைகளுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

பரபரப்பிற்கு பஞ்சமில்லாத இறுதிப்போட்டியில் ஜப்னா பந்தேர்ஸினை  4 ஓட்டங்களால் வெற்றி பெற்ற வேலணை வேங்கைகள் அணி முதலாவது ஜப்னா சுப்பர் லீக்கின் சம்பியன்களாக முடி சூடிக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

வேலணை வேங்கைகள் 171/7 (20) – உத்தமகுமரன் 73, சத்தியன் 26, சுரேந்திரன் 2/33, டர்வின் 2/35

ஜப்னா பந்தேர்ஸ் – 167/9 (20) – பிரசன்னா 36, அனுரதன் 22, மோகன்ராஜ் 20, சத்தியன் 4/26, லிங்கநாதன் 2/28

போட்டி முடிவு 04 ஓட்டங்களால் வேலணை வேங்கைகள் வெற்றி.

அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ரிக்கி பொன்டிங்

இறுதிப்போட்டி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக உலகக் கிண்ண வெற்றியாளர் பிரமோதய விக்ரமசிங்க அவர்களும், கௌரவ விருந்தினராக வட மாகாண கிரிக்கெட் சங்க தலைவர் மதிவாணணும் கலந்து கொண்டிருந்தனர்.

விருதுகள்

ஆட்ட நாயகன் – உத்ததமகுமரன்  (வேலணை வேங்கைகள்)

சிறந்த பந்துவீச்சாளர் – சத்தியன்  (வேலணை வேங்கைகள்)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – உத்தமகுமரன்  (வேலணை வேங்கைகள்)

சிறந்த களத்தடுப்பாளர் – கதியோன் (ஜப்னா பந்தேர்ஸ்)

தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – சத்தியன் (வேலணை வேங்கைகள்)

தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் – ஜெரிக் துசாந் (அரியாலை வோறியேர்ஸ்)

தொடர் ஆட்ட நாயகன் – ஜெரிக் துசாந் (அரியாலை வோறியேர்ஸ்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<