யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை வெற்றி கொண்ட சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

இரு பாலாருக்குமான இந்த போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டி நான்கு குழுக்கலாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் இரண்டு அணிகள் அங்கம் வகித்து போட்டிகள் இடம்பெற்றன. அதில் வெற்றி பெறும் முறைக்கு ஏற்ப அனைத்து அணிகளும் அடுத்த சுற்றான காலிறுதியில் மோதின.

ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை வீழ்த்தி சம்பியனாகியது றெஜிமண்ட் அணி

யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற இந்த சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கு பற்றுவதாக இருந்தன. எனினும், பெண்கள் பிரிவில் இரண்டு அணிகளும், ஆண்கள் பிரிவில் ஒரு அணியும் பங்கெடுக்கவில்லை.

ஆண்கள் பிரிவு

குழு A குழு B குழு C குழு D
சென்றலைட்ஸ் KCCC பற்றீசியன்ஸ் ஸ்கந்தாஸ்ரார்
காங்கேசந்துறை யாழ் பல்கலைக்கழகம் ஜொலிஸ்ரார் றீபோர்க் (பங்குபற்றவில்லை)

முதல் சுற்று முடிவுகளுக்கு அமைய முதலாவது காலிறுதியில் பற்றீசியன்ஸ் மற்றும் சென்றலைட்ஸ் அணிகள் மோதின. இதில் சென்றலைட்ஸ் அணி 47:28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த காலிறுதியில் யாழ் பல்கலைக்கழக அணிக்கு ”வோக் ஓவர்” முறையில் போட்டி இன்றி வெற்றி கிடைத்தது.

அதற்கு அடுத்த காலிறுதியில் KCCC (கொக்குவில் மத்திய சனசமூக நிலையம்) அணியினர், ஸ்கந்தாஸ்ரார் அணியை 58:31 என வெற்றிகொண்ட அதேவேளை, ஜொலிஸ்ரார் அணி 55:51 என்ற புள்ளிகள் அடிப்படையில் காங்கேசந்துறை அணியினரை வீழ்த்தி அரையிறுதிக்குத் தெரிவாகியது.

காலிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, அச்சுற்றில் வெற்றி பெற்ற அணிகள் தீர்மானம்மிக்க அரையிறுதியில் மோதின. அரையிறுதிப் போட்டிகள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றன.

அதன்படி, முதலாவது அரையிறுதியில் சென்றலைற்ஸ் மற்றும் யாழ் பல்கலைக்கழக அணிகள் மோதின. அதில், முன்னைய போட்டிகளிலும் சிறந்த முறையில் விளையாடியிருந்த இவ்விரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன.

இதில், சென்றலைற்ஸ் வீரர்கள் முதல் மூன்று காற்பகுதி நேர ஆட்டங்களையும் முறையே 33-10, 23-14, 20-14 என வெற்றி கொண்டனர். எனினும், இறுதி காற்பகுதி நேர ஆட்டத்தை யாழ் பல்கலை வீரர்கள் 31-13 என அபாரமாக வெற்றி கொண்டனர். அவ்வாறிருந்த போதும் மொத்தப் புள்ளிகளின்படி 89:69 என சென்றலைற்ஸ் வீரர்கள் அரையிறுதியை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.

அதே போன்று, ஜொலிஸ்ரார் மற்றும் KCCC அணியினருக்கு இடையில் நடந்த மற்றைய அரையிறுதியின் முதல் காற்பகுதியை KCCC வீரர்கள் 20:13 எனக் கைப்பற்றினர். எனினும் அடுத்த காற்பகுதியில் சிறந்த முறையில் செயற்பட்ட ஜொலிஸ்ரார் வீரர்கள் 23 புள்ளிகளைப் பெற்ற அதேநேரம் எதிரணிக்கு 05 புள்ளிகளை மாத்திரமே விட்டுக்கொடுத்தனர்.

எனினும், அவர்கள் மூன்றாவது மற்றும் இறுதி காற்பகுதிகளை முறையே 21:23, 18:20 என இழந்தாலும், இரண்டாவது காற்பகுதியில் பெற்ற அதிகமான புள்ளிகளின் உதவியினால் 75:68 என்ற மொத்தப் புள்ளிகள் கணக்கில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.  

இறுதிப் போட்டி

இதன்படி கிண்ணத்திற்கான சொந்தக்காரர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி மின் ஒளியின் கீழ் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களது வருகைக்கு மத்தியில் இடம்பெற்றது.  

பலம் மிக்க இரு அணிகளான சென்றலைட்ஸ் மற்றும் ஜொலிஸ்ரார் அணிகள் மோதிக்கொண்ட இப்போட்டியின் முதல் கால் பகுதி ஆட்டத்தில் அபாரம் காட்டிய சென்றலைட்ஸ் வீரர்கள் 29:6 என்ற புள்ளிகள் கணக்கில் குறித்த பகுதியை தன்னகப்படுத்தினர்.

அதன் பின்னர் இடம்பெற்ற இரண்டு காற்பகுதிகளிலும் எதிரணி வீரர்களின் ஆட்டத்தை ஜொலிஸ்ரார் அணியினர் ஈடு கொடுத்து விளையாடினாலும், சென்றலைட்ஸ் வீரர்கள் 21:18 மற்றும் 28:23 என வெற்றி கொண்டனர்.

மீண்டும் அபாரம் காட்டிய சென்றலைட்ஸ் வீரர்கள் இறுதிக் காற்பகுதியையும் 22:08 என வெற்றிகொண்டு இறுதிப் போட்டியை 100:55 எனக் கைப்பற்றினர். இதனால், அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98வது ஆண்டு நிறைவு விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடைப்பந்தாட்டப் போட்டியில் சென்றலைட்ஸ் அணியினர் சம்பியன்களாகத் தெரிவாகினர்.

இலங்கைக்காக சர்வதேச மட்டத்தில் கால் பதிக்கும் அனித்தா