யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் தமது அங்கத்துவ கழகங்கள் இடையில் வருடா வருடம் ஒழுங்கு செய்து நடாத்துகின்ற கரப்பந்தாட்ட போட்டித்தொடர் ஞாயிற்றுக்கிழமை (18) முதல் ஆரம்பமாகின்றது.
தேசிய கரப்பந்து தெரிவுப் போட்டிக்கு அழைப்பு
முன்னதாக 2020ஆம் ஆண்டில் கொவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக ஆண்கள் பிரிவு போட்டிகள் மாத்திரமே இந்த கரப்பந்தாட்ட தொடரில் நடாத்தப்பட்டிருந்தது. இதில் A பிரிவில் ஆவரங்கால் மத்தி அணியினை வீழ்த்தி ஆவரங்கால் இந்து இளைஞர் அணியினர் சம்பியன் பட்டத்தினை தமதாக்கியிருந்தனர். அதேநேரம் B பிரிவில் வெற்றியாளராகிய சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணியினர் A பிரிவுக்கு தரமுயர்த்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை 2021ஆம் ஆண்டிற்கான போட்டித்தொடர் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக துரதிஷ்டவசமாக இடம்பெறாத நிலையில் இம்முறை போட்டித்தொடருக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மறுமுனையில் நடப்பு வருட போட்டித் தொடர், ஞாயிற்றுக்கிழமை பெண்கள் பிரிவிற்கான போட்டியுடன் ஆரம்பமாகின்றது. புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்ற இந்த போட்டியில் 12 அணிகள் பங்கெடுக்கின்றன.
இம்முறை போட்டித் தொடரின் விசேட அம்சமாக B பிரிவு ஆண்களுக்கான போட்டித் தொடருக்கு 6 பிராந்திய ரீதியிலான தகுதிகாண் தொடரின் அடிப்படையில் மாவட்ட சுற்றுப்போட்டிக்கு அணிகள் உள்வாங்கப்படவிருக்கின்றன.
இம்முறை வலிகாமம், தீவகம், கோப்பாய், யாழ்ப்பாணம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி என ஆறு பிராந்திய போட்டித் தொடர்களிலிருந்து 10 அணிகள் மாவட்ட சுற்றுப்போட்டிக்கு தகுதிபெறவிருக்கின்றன. இவ்வணிகளும் நாயன்மார்கட்டு பாரதி மற்றும் அச்சுவேலி விக்னேஸ்வரா அணிகள் உள்ளடங்கலாக 12 அணிகள் B பிரிவு வெற்றிக் கிண்ணத்திற்காக போட்டியிடுகின்றன.
பிரதான போட்டித் தொடரான A பிரிவு ஆண்களுக்கான போட்டித் தொடரில் மாவட்டத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள முதல் 10 அணிகள் போட்டியிடுகின்றன. Round Robin முறையில் இடம்பெறும் முதலாவது சுற்றில் தலா ஐந்து அணிகள் கொண்ட இரு குழுக்களாக மோதல்கள் நடைபெறும். குழு நிலை போட்டிகளின் நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை தமதாக்குகின்ற அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
முதலாவது சுற்றுக்காக குழு A இல் ஆவரங்கால் இந்து இளைஞர், உடுப்பிட்டி நவஜீவன்ஸ், புத்தூர் வளர்மதி, சண்டிலிப்பாய் இந்து இளைஞர், பன்னாலை கணேசன் ஆகிய அணிகளும் குழு B இல் ஆவரங்கால் மத்தி, தொண்டமானாறு கலையரசி, புத்தூர் கலைமதி, புத்தூர் சென்றல் ஸ்ரார் மற்றும் மட்டுவில் மோகனதாஸ் அணிகளும் போட்டியிடுகின்றன. A பிரிவு அணிகள் இடையிலான போட்டிகள் நாளை (18.09) முதல் அடுத்து வரும் சனிக்கிழமை (24.09) வரை புத்தூர் வளர்மதி, புத்தூர் கலைமதி, ஆவரங்கால் இந்து இளைஞர் மற்றும் ஆவரங்கால் மத்தி ஆகிய விளையாட்டுக் கழக மைதானங்களில் இரவு நேர போட்டிகளாக இடம்பெறவுள்ளன.
ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகியது இலங்கை
மேற்படி போட்டித்தொடர் குறித்து யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்க தலைவர் ரவிவர்மன் கருத்து தெரிவிக்கையில் “யாழ். மாவட்டமெங்கும் கரப்பந்தாட்டத்தினை பரவலாக்கும் மற்றும் அபிவிருத்தி செய்யும் எமது சங்கத்தின் நோக்கத்திற்கமைய இம்முறை இந்த போட்டித்தொடரில் விசேட அம்சமாக பிராந்திய ரீதியிலான தகுதிச் சுற்றுப்போட்டிகளினை அறிமுகம் செய்துள்ளோம். இரு வருடங்களின் பின்னர் இடம்பெறுகின்ற போட்டி என்கின்ற நிலையில் மிகவும் பரபரப்பான மற்றும் ஆரோக்கியமான போட்டித்தொடராக அமையும் என நம்புகின்றேன்.” என்றார்.
“நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியிலும் இந்த தொடரில் மிகுந்த ஆர்வத்தினையும், ஈடுபாட்டினையும் காட்டுகின்ற கழகத்தினருக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும். இந்த தொடரில் வீரர்களை போல மத்தியஸ்தர்களும், நிர்வாகிகளும் தமது முழுமையான பங்களிப்பினை வழங்குவதற்கு தயாராகவுள்ளனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். போட்டித்தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்திருக்கின்ற நல்லுள்ளங்களுக்கு நன்றி பாராட்டுவதுடன், போட்டித்தொடரினை சிறப்பாக நிறைவு செய்வதற்கு மேலதிக அனுசரணையினை எதிர்பார்க்கின்றோம்” என யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்க செயலாளர் நிதர்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனவே நாளை முதல் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் யாழ். கரப்பந்தாட்ட வீரர்களுக்கு மிக முக்கிய காலமாக அமையும் என எதிர்பார்க்க முடியும்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<