பங்களாதேஷ் அணியிடம் போராடி தோற்ற இலங்கை U19 மகளிர் அணி!

ICC U19 Women’s T20 World Cup 2023

329

ஐசிசி 19 வயதின் கீழ் மகளிருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தப்போட்டித்தொடரில் முதல் போட்டியில் அமெரிக்க அணியை இலங்கை அணி வீழ்த்தியிருந்தது. தொடர்ந்து தங்களுடைய இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.

தோல்வி குறித்து விளக்கம் கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானிக்க, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் மகளிர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை அபிபா பிரொட்டசா 53 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பின்னர் களமிறங்கி வேகமாக ஓட்டங்களை குவித்த சொர்னா அக்டெர் அதிரடியாக ஓட்டங்களை குவித்து 28 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ரஷ்மி நெத்ரஞ்சலி 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

தொடர்ந்து 166 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கி    களமிறங்கிய இலங்கை மகளிர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினாலும் அணித்தலைவி விஷ்மி குணரத்ன மற்றும்  தெவ்மி விஹாங்கா  ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுக்கொடுத்தனர்.

விஷ்மி குணரத்ன 54 பந்துகளுக்கு 60 ஓட்டங்களையும்,  தெவ்மி விஹாங்கா  44 பந்துகளுக்கு 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்த போதும், இவர்களுடைய ஓட்டவேகம் அணியின் வெற்றியிலக்குக்கு ஏதுவாக அமையவில்லை. இறுதியாக துலாங்கா திசாநாயக்க 3 பந்துகளுக்கு 3 பௌண்டரிகளுடன் 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்த போதும், இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை மரூபா அக்டெர் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், டிசா பிஸ்வாஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். பங்களாதேஷ் அணி தங்களுடைய 2 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளை வெற்றிக்கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணி தங்களுடைய இறுதி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை புதன்கிழமை (18) எதிர்கொள்ளவுள்ளது.

சுருக்கம்

பங்களாதேஷ் – 165/4 (20), அபிபா பிரொட்டசா 53, சொர்னா அக்டெர் 50, ரஷ்மி நெத்ரஞ்சலி 30/1

இலங்கை – 155/4 (20),  விஷ்மி குணரத்ன 60, தெவ்மி விஹாங்கா  55, மரூபா அக்டெர் 19/2

முடிவு – பங்களாதேஷ் அணி 10 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<