விறுவிறுப்பான மோதலில் வெற்றிபெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி!

20th One Day Encounter 2023

249
Jaffna Central College vs St. John’s College

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ். மத்தியக் கல்லூரி அணிக்கு எதிரான 20வது ஒருநாள் மோதலில் சென் ஜோன்ஸ் கல்லூரி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

>> 116வது வடக்கின் பெரும் சமரின் சம்பியனாக முடிசூடியது யாழ். மத்தி!

அதன்படி களமிறங்கிய சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு ஆரம்பம் கிடைக்கவில்லை. சச்சின் கணபதி 7 ஓட்டங்களுடனும், மகேந்திரன் கிந்துசன் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னரும் துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு தேவையான பங்களிப்பை வழங்க தவறியிருந்தனர். தனியாளாக அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸை நகர்த்திய அருள்சீலன் கவிசன் அரைச்சதம் கடந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளிக்க, மறுமுனையில் அண்டன் அபிசேக் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இறுதிவரை களத்திலிருந்து ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த கவிசன் 53 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் சதாகரன் சிமில்டன் 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக சாய்த்திருந்தார்.

ஐம்பது ஓவர்கள் கொண்ட போட்டிகளை பொருத்தவரை எட்டக்கூடிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ். மத்தியக் கல்லூி அணியானது, சென் ஜோன்ஸ் கல்லூரியை போன்று துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் காட்டியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜெகதீஷ்வரன் விதுசன், ரஞ்சித்குமார் நியூட்டன் மற்றும் மதீஷ்வரன் சன்சஜன் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றியிருந்தனர்.

எனினும் தடுமாற்றத்துக்கு முகங்கொடுத்திருந்த யாழ். மத்தியக் கல்லூரிக்கு பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்டிருந்த சிமில்டன் துடுப்பாட்டத்தில் போராட்டத்தை காண்பித்திருந்தார். மறுமுனையில் நிசாந்தன் அஜய் குறுகிய நேரத்துக்கு (19 ஓட்டங்கள்) நம்பிக்கை கொடுத்திருந்தாலும், டேனியல் போல் பரமதாயளன் சிமில்டனுடன் இணைந்து அபாரமான இன்னிங்ஸ் ஒன்றை பெற்றுக்கொடுக்க தொடங்கினார்.

இவர்களின் இணைப்பாட்டம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு சவாலை கொடுத்திருந்த போதும், சிமில்டன் அரைச்சதத்தை கடந்து ஆட்டமிக்க, டேனியல் போல் 40 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். இதன்காரணமாக மேலும் நெருக்கடிக்கு மத்தியக் கல்லூரி தள்ளப்பட்டது.

எவ்வாறாயினும் சகாதேவன் சயந்தன் மற்றும் சுதர்ஷன் அனுசாந்த் ஆகியோர் மீண்டும் ஒரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்ப போட்டி விறுவிறுப்பாக மாறியது. இவர்களின் இணைப்பாட்டம் மூலம் ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 30 பந்துகளுக்கு 27 ஓட்டங்கள் மாத்திரமே தேவையாக இருந்தது.

இரண்டு அணிகளின் பக்கமும் வெற்றி வாய்ப்பு காணப்பட்ட நிலையில், 24 பந்துகளுககு 25 ஓட்டங்கள் என போட்டி மாறியது. முக்கியமான தருணத்தில் சென் ஜோன்ஸ் அணியின் அண்டன் அபிசேக் பந்து ஓவரை வீச இரண்டாவது பந்தில் 27 ஓட்டங்களை பெற்றிருந்த சயந்தன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து அதே ஓவரின் நான்காவது பந்தில் அனுசாந்த்தை போல்ட் முறையில் வீழ்த்த மத்தியக் கல்லூரியானது 46.4 ஓவர்கள் நிறைவில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பந்துவீச்சில் அண்டன் அபிசேக் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

எனவே இந்த ஆண்டு நடைபெற்ற வடக்கின் பெரும் சமர் 3 நாட்கள் கொண்ட போட்டியில் யாழ். மத்தியக் கல்லுரி அணி வெற்றியை பதிவுசெய்திருந்ததுடன், ஒருநாள் போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றியை பதிவுசெய்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

சென் ஜோன்ஸ் கல்லூரி – 217/10 (49.3), கவிசன் 51, அபிசேக் 32, சிமில்டன் 3/34

மத்தியக் கல்லூரி – 194/10 (46.4), சிமில்டன் 50, டேனியல் போல் 40 அபிசேக் 4/21

முடிவு – சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<