முரளி-வோர்ன் கிண்ணத்தை தம்வசப்படுத்துமா இலங்கை?

Australia tour of Sri Lanka 2022

104
 

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் நிறைவுக்குவந்துள்ள நிலையில், அனைவரது கவனமும் டெஸ்ட் தொடர் பக்கம் திரும்பியுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமடைந்துவரும் நிலையிலும், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரேயொரு மகிழ்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணியின் பிரகாசிப்புகள்  மாறியுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், ஸ்டார்க் ஆடுவார்களா??

T20I தொடரில் ஆரம்பித்து ஒருநாள் தொடர் நிறைவில் இலங்கை ரசிகர்கள் மத்தியில் இலங்கை அணி நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சுற்றி கடந்த 20 நாட்களுக்கு மேல் எரிவாயு கொள்கலன்கள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் மத்தியில் அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் டெஸ்ட் வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்த தயாராகின்றன.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இந்த தொடரில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியானது மறைந்த அவுஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேர்ன் வோர்னை நினைவுகூறும் வகையில் நடைபெறவுள்ளது. குறிப்பாக கடந்த 5 டெஸ்ட் தொடர்களை இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் முரளி-வோர்ன் கிண்ணமாகவே விளையாடி வருகின்றன.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரை பொருத்தவரை இரண்டு அணிகளும் பலமான ஆட்டங்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவுஸ்திரேலிய அணியானது டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த காலங்களில் வெற்றிகளை குவித்துவருகின்றது. இறுதியாக நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணியை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியிருந்த அவுஸ்திரேலிய அணி, இலங்கையை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.

துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசேங் மற்றும் டேவிட் வோர்னர் போன்ற வீரர்கள் சிறப்பாக ஓட்டங்களை குவித்துவருவதுடன், நெதன் லையோன் சுழல் பந்துவீச்சில் இலங்கை அணிக்கு சவால் கொடுக்கக்கூடிய வீரராக மாறியுள்ளார். லையோனுடன் மிச்சல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோரும் பந்துவீச்சில் இலங்கைக்கு எச்சரிக்கை கொடுக்கக்கூடிய வீரர்களாக மாறியுள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவுஸ்திரேலிய அணி தோல்வியை சந்திக்காமல் 5 வெற்றிகளுடன் இந்த தொடரில் களமிறங்கவுள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது.

மறுபக்கம் இலங்கை அணியானது இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் தொடரை 1-0 என வெற்றிக்கொண்டு முழு நம்பிக்கையுடன் இந்த தொடருக்காக தயாராகியுள்ளது. ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.

திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் போன்ற அனுபவ துடுப்பாட்ட வீரர்களுடன் களமிறங்கவுள்ள இலங்கை அணிக்கு சுழல் பந்துவீச்சு சற்று நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் தொடரில் சுழல் பந்துவீச்சாளர்களால் அதிகமான அழுத்தங்களை எதிரணியின் மீது பிரயோகிக்க முடியவில்லை.

எனினும் ரமேஷ் மெண்டிஸ், லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜயவிக்ரம மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோருடன் களமிறங்கும் இலங்கை அணி சொந்த மண்ணின் பலத்தை பயன்படுத்திக்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலி மைதானத்தின் ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் சாதகம் கொண்டதாக அமையும் என்பதால், முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றிபெற அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனினும், பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை இலகுவாக வீழ்த்திவிட முடியாது என்பதை இலங்கை அணியும் நினைவில் கொண்டுள்ளது.

கடந்தகால மோதல்கள்

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளின் கடந்தகால மோதல்களை பொருத்தவரை அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாகும்.

இரண்டு அணிகளும் விளையாடியுள்ள 13 தொடர்களில் 2 தொடர்களில் மாத்திரமே இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. 1999ம் ஆண்டு மற்றும் இறுதியாக நடைபெற்ற 2016ம் ஆண்டுகளில் இலங்கை அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. ஏனைய 11 தொடர்களையும் அவுஸ்திரேலிய அணி ஒரு போட்டித்தோல்வியுமின்றி வெற்றிவாகை சூடியுள்ளது.

மேற்குறிப்பிட்டது போன்று இறுதியாக அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு 2016ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, 3-0 என தொடரை இழந்திருந்தது. ரங்கன ஹேரத் மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோரின் பந்துவீச்சு மற்றும் குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, அஞ்செலொ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் துடுப்பாட்ட பிரகாசிப்புகளின் உதவியுடன் இலங்கை வெற்றியை பதிவுசெய்திருந்தது.

குறித்த தொடரில் உஸ்மான் கவாஜா இலங்கை அணியின் சுழலுக்கு தடுமாறியிருந்த போதும், தற்போது அவர் மிக முக்கியமான துடுப்பாட்ட வீரராக மாறியுள்ளார். குறிப்பாக இவர் கடைசி 6 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் அடங்கலாக 496 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி ரங்கன ஹேரத் மற்றும் டில்ருவான் பெரேராவை போன்று தற்போதுள்ள சுழல் பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு கடுமையான சவாலை கொடுப்பார்களா என்பதிலும் கேள்விகள் இருக்கின்றன.

எதிர்பார்ப்பு வீரர்கள்

அஞ்செலோ மெதிவ்ஸ்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போதுள்ள இலங்கை அணியில் சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்பை வைத்திருப்பவர் அஞ்செலோ மெதிவ்ஸ். ஆஸி. அணிக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு சதம் மற்றும் 4 அரைச்சதங்களுடன் 40.06 என்ற சராசரியில் 601 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அதுமாத்திமின்றி இறுதியாக மெதிவ்ஸ் விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 சதங்கள் (199 அதிகூடிய ஓட்டம்) அடங்கலாக அற்புதமாக ஓட்டங்களை குவித்துள்ளார்.

எனவே, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஓட்டங்களை குவிக்கக்கூடிய வீரராக எதிர்பார்க்கப்படுகின்றார். அஞ்செலோ மெதிவ்ஸின் துடுப்பாட்ட பிரகாசிப்பு இந்த தொடரில் இலங்கை அணிக்காக பார்க்கப்படும் முக்கிய விடயமாக உள்ளது.

உஸ்மான் கவாஜா

இலங்கை மண்ணில் மிகச்சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்புகளை உஸ்மான் கவாஜா வெளிப்படுத்தாத போதும், அவருடைய துடுப்பாட்ட பிரகாசிப்பு கடந்த காலங்களாக சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகின்றது.

இறுதியாக உஸ்மான் கவாஜா விளையாடிய டெஸ்ட் போட்டிகள் மற்றும் துணைக்கண்டங்களில் அவருடைய துடுப்பாட்ட திறமை என்பன இலங்கைக்கு மிகப்பெரிய சவாலை முன்வைத்துள்ளது. இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு சதம் அடங்கலாக 227 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனைத்தாண்டி இவருடைய கடைசி 6 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 97, 160, 44*, 91 மற்றும் 104* என ஓட்டங்களை குவித்திருக்கின்றார். எனவே, இவருடைய துடுப்பாட்டம் அவுஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிக்குழாம்கள்

இலங்கை டெஸ்ட் குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய, ஜெப்ரி வெண்டர்சே

  • மேலதிக வீரர்கள் – துனித் வெல்லாலகே, லக்ஷித ரசன்ஜன

அவுஸ்திரேலியா டெஸ்ட் குழாம்

பெட் கம்மின்ஸ் (தலைவர்), அஸ்டன் ஏகார், ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கெமரோன் கிரீன், ஜோஷ் ஹெஷல்வூட், டிராவிஷ் ஹெட், ஜோஸ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேங், நெதன் லையோன், மிச்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மிச்சல் ஸ்வெப்ஸன், டேவிட் வோர்னர், கிளேன் மெக்ஸ்வேல்

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் இலங்கை அணி ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் பலமான அவுஸ்திரேலிய அணிக்கு அழுத்தத்தை கொடுத்து தொடர் வெற்றியொன்றினையும் பதிவுசெய்திருக்கின்றது.

மறுபக்கம் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட அணியைவிட, டெஸ்ட் அணி சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்திருந்தது. எனவே, டெஸ்ட் அணியின் மீதான நம்பிக்கை மேலும் உயர்ந்துள்ளது. குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்கள் அணிக்காக முன்நின்று பிரகாசிக்க ஆரம்பித்தால் இந்த டெஸ்ட் தொடரை வெற்றிக்கொள்வது உறுதி.

ஆனால், அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி எதிரணிகளின் சொந்த மண்ணில் இலகுவான வெற்றிகளை பதிவுசெய்திருக்கும் வரலாறுகள் உள்ளன. முரளி-வோர்னர் கிண்ணமாக நடைபெறும் இந்த தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை இலகுவாக கணிக்கக்கூடிய சூழ்நிலை இப்போது இல்லை. எனவே, மிகச்சிறந்த ஒரு டெஸ்ட் தொடரை ரசிக்கக்கூடிய வாய்ப்பு எமக்கு கிட்டியுள்ளது என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<