டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு தொடரும் சோகம்!

211

13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் நிலையில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஒருநாள், T20 தொடர் அட்டணையில் மாற்றம் செய்த PCB

32 வயதுடைய வேகப் பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் ஒரு சிறந்த அனுபவ வீரராக விளையாடி வருகிறார். அண்மைக்காலமாக டெல்லி கெபிடல்ஸ் அணியில் ஒரு முக்கிய வேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்துவரும் இஷாந்த் சர்மாவுக்கு இவ்வருட ஐ.பி.எல் தொடர் படு மோசமாக அமைந்தது. 

2020 ஐ.பி.எல் தொடர் ஆரம்பாமாகி டெல்லி கெபிடல்ஸ் அணி 7 போட்டிகளில், அதாவது சரியாக அரைவாசி லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள நிலையில் இஷாந்த சர்மா ஆரம்பத்திலிருந்து உபாதையால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி சன்ரைஸஸ் அணியுடன் நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் மாத்திரம் விளையாடிய நிலையில் காணப்பட்டார். 

முன்னதாகவே உபாதைக்குள்ளான நிலையில் உபாதையிலிருந்து மீண்டு போட்டிகளில் விளையாட தயாரான இஷாந்த சர்மாவுக்கு கடந்த 7ஆம் திகதி டுபாயில் டெல்லி கெபிடல்ஸ் அணி குழு பயிற்சிகளில் ஈடுபடும் போது இடது விலா எழும்பு பகுதியில் உபாதை ஏற்பட்டது. இதன் பின்னர் அவருக்கு உபாதை உக்கிரமடைந்ததை தொடர்ந்து இவ்வாறு ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். 

இதுவரையில் 90 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா ஒரு ஐந்து விக்கெட்டுடன் மொத்தமாக 71 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 

மொஹமட் இர்பானின் உயரத்தை மிஞ்சவுள்ள 21 வயதான முடாசிர்

முன்னதாக டெல்லி கெபிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அமிட் மிஸ்ரா கை விரல் தசைநார் கிழிந்த நிலையில் ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுமையாக விலகிய நிலையில், தற்போது இஷாந்த் சர்மாவும் முழுமையாக விலகியுள்ளமை டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

இதேவேளை, மறுமுனையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடனான போட்டியின் போது டெல்லி கெபிடல்ஸ் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் கால் தசைப்பிடிப்புக்கு உள்ளனார். இதனால் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.  

இந்நிலையில் மேலும் ஒரு வாரம் ரிஷப் பண்ட் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரிஷப் பண்டும் 2, 3 போட்டிகளில் விளையாட முடியாத அவலநிலையில் டெல்லி கெபிடல்ஸ் அணி காணப்படுகிறது.   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<