ஒருநாள், T20 தொடர் அட்டணையில் மாற்றம் செய்த PCB

120
PCB announces revised itinerary for Zimbabwe series
@Getty Image

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் மற்றும் T20 சர்வதேச தொடர்களில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் மண்ணுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது முன்னதாக வெளியிடப்பட்ட குறித்த தொடர் அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. 

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸின் சவாலுக்கு மத்தியில் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலகக் கிண்ண சுப்பர் லீக்தொடரின் ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடர் என்பவற்றில் பாகிஸ்தான் மண்ணில் விளையாடவுள்ளது. 

>> மகளிர் ஐ.பி.எல். தொடரில் ஒரே அணியில் இலங்கை மங்கைகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது கடந்த மாதம் 23ஆம் திகதி ஜிம்பாப்வே அணியின் தொடர் உறுதி செய்யப்பட்டு குறித்த தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டிருந்தது. அதன் படி எதிர்வரும் 30ஆம் திகதி முல்தானில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரும், நவம்பர் 7ஆம் திகதி ராவல்பிண்டியில் 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது தொடர் அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் போட்டிகளுக்கான திகதிகளில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. ஆனால் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் குறித்த இருதரப்பு தொடரின் முதலில் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச தொடரானது முல்தானில் இருந்து ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரானது தற்போது லாஹூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தொடருக்கான ஜிம்பாப்வே அணியின் 20 பேர் கொண்ட கலப்பு (ஒருநாள், T20) குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 34 வயதுடைய துடுப்பாட்ட சகலதுறை வீரரான சம்மு சிபாபா குறித்த தொடருக்கான அணித்தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணியின் தலைவராக ஷேன் வில்லியம்ஸ் செயற்பட்டுவந்த நிலையில் சம்மு சிபாபா தற்போது முதல் முறையாக முழுநேர அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> ‘CSK கப்பலில் ஏராளமான ஓட்டைகள்’: டோனி வேதனை

மேலும் 2 வீரர்கள் குறித்த குழாமில் அறிமுக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். 19 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரர் மில்டன் சும்பா மற்றும் 27 வயதுடைய பந்துவீச்சாளர் பராஷ் அக்ரம் ஆகியோர் இவ்வாறு அறிமுக வீரர்களாக குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியினூடாக சர்வதேச அறிமுகம் பெற்று கடந்த 2018ஆம் ஆண்டுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடிய நிலையில் பின்னர் அணியில் வாய்ப்பு கிடைக்காத 24 வயதுடைய இளம் வேகப் பந்துவீச்சாளரான பிலெஸிங் முஸரபானி மீண்டும் ஜிம்பாப்வே அணியில் இணைந்துள்ளார். 

பாகிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே குழாம்.

சம்மு சிபாபா (அணித்தலைவர்), பராஷ் அக்ரம், ரயன் பேர்ல், பிரையன் ச்சரி, டென்டி சதாரா, எல்டன் சிக்கம்புரா, டென்டாய் சிஸாரோ, கிரேக் ஏர்வின், தினாஸி கமுன்ஹூகாம்வே, வெஸ்லி மத்ஹேவெரே, வெல்லிங்டன் மஸகட்ஸா, கார்ல் மும்பா, ரிச்மென்ட் முத்தும்பாமி, பிலெஸிங் முஸரபானி, ரிச்சர்ட் நகரவா, சிக்கண்டர் ராஸா, மில்டன் சும்பா, பிரன்டன் டைலர், டொனால்ட் திரிபானோ, ஷேன் வில்லியம்ஸ்  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<