மொஹமட் இர்பானின் உயரத்தை மிஞ்சவுள்ள 21 வயதான முடாசிர்

410
Mudassir Gujjar
Image Courtesy - twitter

உலகின் மிகவும் உயரமான பந்துவீச்சாளர் என்ற பெருமையை பாகிஸ்தானின் 21 வயதுடைய முடாசிர் குஜ்ஜார் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் உலகில் உயரமான பந்துவீச்சாளராக பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் இர்பான் (2.16 மீற்றர்) உள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த இளம் வீரரான முடாசிர் குஜ்ஜார் அந்த சாதனையை முறியடிக்கவுள்ளார். இவர் 7 அடி, 6 அங்குலம் (2.29 மீற்றர்) உயரத்துடன் காணப்படுகிறார்.

>> T20 போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய சொஹைப் மலிக்!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்காக கடந்த வருடம் லாகூர் கிளெண்டர்ஸ் அணியினால் நடத்தப்பட்ட இளம் வீரர்களை இனங்காணும் பயிற்சி முகாமில் முடாசிர் குஜ்ஜார் தெரிவு செய்யப்பட்டார். 

எனவே, உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினால் அவருக்கு விரைவில் பாகிஸ்தான் அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், தனது உயரம் பற்றியும், பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவது குறித்தும் முடாசிர் குஜ்ஜார் டெய்லி மெய்ல் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில்

“உயரம் எனக்கு கிடைத்த வரம். இதனால் வேகமாக ஓடி வந்து மிக வேகமாக எனக்கு பந்துவீச முடியும். கடந்த 7 மாதங்களுக்கு முன் பந்துவீச்சாளராக பயிற்சிகளை ஆரம்பித்தேன்.

எனவே, மிக விரைவில் உலகின் மிக உயரமாக வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுக் கொள்வேன்” என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்

முடாசிருடன் பிறந்த சகோதரி, 3 சகோதரர்கள் அனைவரும் இயல்பான உயரத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால், முடாசிர் மட்டும்தான் இயல்புக்கும் மேலான உயரத்தைப் பெற்றுள்ளார்.

>> Video – சங்கக்கார சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக மாற காரணம் என்ன?

முடாசிரின் அதிவேகமான வளர்ச்சியைப் பார்த்த பெற்றோர் கராச்சி, லாகூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கடந்த 2017ஆம் ஆண்டு அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்

ஆனால், மருத்துவர்கள் முடாசிரைப் பரிசோதனை செய்து, இது பிறப்பியல் வளர்ச்சியால் உருவாகும் உயரம் எனக் கைவிரித்துவிட்டனர்.

முடாசிரின் அதிகமான உயரம் அனைவரையும் வியக்கவைக்கும் வகையில் இருந்தாலும், தனிப்பட்ட ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை அவருக்கு உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து முடாசிர் கருத்து தெரிவிக்கையில், நான் உயரமாக இருப்பதால், பாடசாலையில் பெரும் கேலிக்கு ஆளானேன். என்னால் சராசரி மனிதர்களைப் போல் பேருந்து, சைக்கிள் செல்ல முடியாது. காரில் கூட செல்ல முடியாது. கால்களை வைக்க முடியாததால், பெரும் சிரமப்படுகிறேன்.

என் கால்களுக்கு எங்கும் செருப்பு, சப்பாத்து கிடைக்காது என்பதால், தனியாக செய்து எடுப்பேன். எனது சப்பாத்தின் நீளம் 23 அங்குலம். காற்சட்டை உயரம் 54 அங்குலம். என்னால் கார் ஓட்ட முடியாது. இருந்தாலும் ஓரளவு சமாளித்து மோட்டர் சைக்கிள் ஓட்டுவேன்

>> ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸி. மகளிர் அணி உலக சாதனை

எப்படி இருந்தாலும் இந்த உயரம் எனக்கு இறைவன் அளித்தது. இந்த உயரத்தால் நான் ஓடுவதில் எந்தவிதமான சிரமமும் இல்லை. தற்போது லாகூர் கிளெண்டர்ஸ் அணியில் இணைந்து கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறேன்

கொவிட் – 19 வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக பயிற்சி எடுக்க முடியவில்லை. விரைவில் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு வருவேன்” எனத் தெரிவித்துள்ளார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<