அதிருப்தியில் ஓய்வை அறிவித்த கெவின் ஓ பிரையன்

106
Getty Image

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர் கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான கெவின் ஓ பிரையன் அயர்லாந்து அணிக்காக 2018 முதல் 2019 வரை 3 டெஸ்ட், 2006 முதல் 2021 வரை 153 ஒருநாள், 2008 முதல் 2021 வரை 110 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  இதில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் உட்பட 258 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 2 சதம் உட்பட 3,619 ஓட்டங்களையும், T20 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 1,973 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

அதேபோல, ஒருநாள் போட்டியில் 114 விக்கெட்டுகளையும், T20 போட்டியில் 58 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

இறுதியாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியிலும் அவர் விளையாடினார்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கெவின் ஓ பிரையன் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவில் அவர் கூறியதாவது:

”எனது நாட்டுக்காக 16 ஆண்டுகளாக 389 போட்டிகளில் விளையாடிய பிறகு என்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன். இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வு பெற எண்ணியிருந்தேன். ஆனால் கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு அயர்லாந்து அணிக்கு நான் தேர்வாகவில்லை. தேர்வுக்குழுவினரும் நிர்வாகமும் வேறு திசையில் செல்கிறார்கள் என எண்ணுகிறேன். அடுத்ததாக இளம் வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதில் ஆர்வமாக உள்ளேன். எனக்கு சொந்தமான பயிற்சி அகாடமியை தொடர்ந்து மேம்படுத்த ஆசைப்படுகிறேன்.

எனவே, நாட்டுக்காக நான் விளையாடிய ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து விளையாடினேன். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

அயர்லாந்து அணியின் அதிரடி சகலதுறை வீரர்களில் ஒருவராக வலம்வந்த இவர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். கடந்த 2011ஆம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் குழு நிலை சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்தார். அது இன்றுவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளில் பதிவு செய்யப்பட்ட அதிவேக சதமாக வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அத்தோடு அந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை வெற்றி பெறவும் செய்தார்.

அயர்லாந்து அணிக்காக விளையாடி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் கெவின் ஓ பிரையன் உள்ளார். 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளைக் வீழ்த்தியுள்ளார். அந்த அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த முதல் மற்றும் ஒரே துடுப்பாட்ட வீரரும் கெவின் ஓ பிரையன் தான். டெஸ்ட், T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் விளாசிய அயர்லாந்து வீரர் என்ற சாதனையையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருந்த அயர்லாந்து அணி கடந்த 2017ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணி என்ற அந்தஸ்தை பெற்றது. எனவே அயர்லாந்து அணி டெஸ்ட் அந்தஸ்தைப் பெறுவதில் கெவின் ஓ பிரையனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<