“ஜொப்ரா ஆர்ச்சருடன் நட்பு இல்லை” – கெமார் ரோச்

312

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது, ஜொப்ரா ஆர்ச்சருடன் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு எந்தவொரு நட்பும் கிடையாது என மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் கெமார் ரோச் தெரிவித்துள்ளார். 

பார்படோஸை பிறப்பிடமாக கொண்ட ஜொப்ரா ஆர்ச்சர் மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடியிருந்த நிலையில், பின்னர் இங்கிலாந்து அணியில் விளையாட ஆரம்பித்தார்.

இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆமிர், ஹரிஸ் சொஹைல்

ஆர்ச்சர் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியுடன் விளையாடியிருந்த போதும், முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ளார். 

இந்தநிலையில், இங்கிலாந்து தொடர் குறித்து கருத்துகளை பகிர்ந்துக்கொண்ட கெமார் ரோச் போட்டியிடும் போது, எந்தவொரு மேற்கிந்திய தீவுகள் வீரர்களும், ஜொப்ரா ஆர்ச்சருடன் நட்புக்கொள்ள மாட்டார்கள் என குறிப்பிட்டார். இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

“நாம் போட்டியில் வெற்றிபெறுவதற்கும், கடினமான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் இங்கிலாந்து செல்கிறோம். ஜொப்ரா ஆர்ச்சர் அவருடைய தனிப்பட்ட முடிவை எடுத்துக்கொண்டு, மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றார். ஆனால், இந்த தொடரின் போது, அவருடன் எந்த நட்பும் கிடையாது”  என ரோச் சுட்டிக்காட்டினார். 

இங்கிலாந்து தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் 30 பேர்கொண்ட குழாத்தில், ஜொப்ரா ஆர்ச்சரின் நண்பர்கள் சிலர் உள்ளடங்குகின்றனர். ஷேய் ஹோப், கெமார் ஹோல்டர், அல்ஷாரி ஜோசப் மற்றும் ப்ரெஸ்டன் மெக்ஸ்வீன் ஆகியோர் ஆர்ச்சருடன் விளையாடியுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் உயிரியல் பாதுகாப்பு முறையில் நடத்தப்படவுள்ளது. மென்செஸ்டர் மற்றும் சௌதெம்டன் ஆகிய இடங்களில் இரசிகர்கள் இல்லாத மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. எனவே, இங்கிலாந்து ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுவது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சாதகமாக அமையும் என கெமார் ரோச் கூறியுள்ளார். 

அதேநேரம் கடந்த முறை இங்கிலாந்து அணியை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 2-1 என தொடரை கைப்பற்றியிருந்தது. குறித்த தன்னம்பிக்கையையும் தங்களுக்கு உதவும் என கூறினார்.

“எங்களது திட்டமும், தாக்குதலும் இதுவரையிலும் மாறவில்லை என நினைக்கிறேன். நாம் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை எங்களது மண்ணில் வைத்து சந்தித்திருந்தோம். அந்த ஞாபகங்கள் இன்னும் புதுமையாகவே உள்ளது. குறித்த நிலைக்கு மீண்டும் நாங்கள் வருவோம் என்றால், இங்கிலாந்து அணியை வெற்றிக்கொள்ள சிறந்த சந்தர்ப்பமாக இந்த தொடர் அமையும்” என்றார். 

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் மாதம் 8ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<