கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக்கில் இங்கிலாந்துக்கு முதல் தொடர் வெற்றி

321
 

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. 

>>139 நாட்களின் பின் ஒருநாள் கிரிக்கெட்; இங்கிலாந்து வெற்றி<<

இதன் மூலம், அடுத்த ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான அணிகளை தெரிவு செய்யும் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக் தொடரின் ஒரு பகுதியாக இங்கிலாந்து – அயர்லாந்து இடையிலான இந்த ஒருநாள் தொடர் அமையும் நிலையில், இத்தொடரினை கைப்பற்றியிருக்கும் இங்கிலாந்து, ஐ.சி.சி. ஒருநாள் சுபர் லீக்கில் தொடர் ஒன்றினை வென்ற முதல் அணியாகவும் மாறியிருக்கின்றது. 

>>ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக் தொடர் பற்றி அறிய<<

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி, முதல் ஒருநாள் போட்டி இடம்பெற்ற அதே சௌத்தம்ப்டன் மைதானத்தில் முதல் போட்டி போன்று கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இன்றிய நிலையில் வெள்ளிக்கிழமை (1) தொடங்கியது. 

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த அயர்லாந்து அணியின் தலைவர் அன்டி பல்பிரின் இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று தொடரினை சமப்படுத்தும் நோக்குடன் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டார். 

தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணியினர் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்கள் பெற்றனர். அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பில் தொடரின் முதல் போட்டியில் அரைச்சதம் பெற்ற இளம்வீரரான கேர்டிஸ் கேம்பர், இப்போட்டியிலும் அரைச்சதம் பெற்று 68 ஓட்டங்கள் எடுத்து சிறப்பாக செயற்பட்டார்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் மணிக்கட்டு சுழல்வீரரான ஆதில் ரஷீட் வெறும் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, வேகப் பந்துவீச்சாளர்களான சகீப் மஹ்மூட் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர். 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 213 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி தடுமாற்றத்தினைக் காட்டிய போதும் ஜொன்னி பெயர்ஸ்டோவ், சேம் பில்லிங்ஸ் மற்றும் டேவிட் வில்லி ஆகியோரின் துடுப்பாட்ட உதவியினால் போட்டியின் வெற்றி இலக்கினை 32.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது. 

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய ஜொன்னி பெயர்ஸ்டோவ், தன்னுடைய 12ஆவது அரைச்சதத்தோடு வெறும் 41 பந்துகளுக்கு 14 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 82 ஓட்டங்களைப் பெற்றார். அதோடு, பெயர்ஸ்டோவ் இப்போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் 3,000 ஓட்டங்கள் என்கிற மைல்கல்லினையும் எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேநரம், டேவிட் வில்லி 47 ஓட்டங்களுடனும், சேம் பில்லிங்ஸ் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

>>Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125<<

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் ஜோஸ் லிட்டில் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், கேர்டிஸ் கேம்பர் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்து போராட்டம் காண்பித்த போதும் அது வீணானது.  

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஜொன்னி பெயர்ஸ்டோவ் தெரிவானர்.

இனி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (4) இரண்டாம் போட்டி நடைபெற்ற இதே சௌத்தம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

அயர்லாந்து – 212/9 (50) கேர்டிஸ் கேம்பர் 68, ஆதில் ரஷீட் 34/3, சகீப் மஹ்மூட் 45/2, டேவிட் வில்லி 48/2

இங்கிலாந்து – 216/6 (32.3) ஜொன்னி பெயர்ஸ்டோவ் 82, டேவிட் வில்லி 47*, சேம் பில்லிங்ஸ் 46*, ஜோஸ் லிட்டில் 60/3, கேர்டிஸ் கேம்பர் 50/2

முடிவு – இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<