சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று முடிந்திருக்கும் உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை A அணி அயர்லாந்து A அணியினை 101 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
மேலும் இந்த அதிரடி வெற்றியுடன், இலங்கை A அணி ஐந்து போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரிலும் அயர்லாந்து A அணியினரை 5-0 என வைட்வொஷ் செய்திருக்கின்றது.
>>மற்றுமொரு இலகு வெற்றியுடன் ஒரு நாள் தொடரில் முன்னேறும் இலங்கை A அணி
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து A அணி இலங்கை மண்ணில் இறுதியாக விளையாடுகின்ற உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் இந்த ஐந்தாவது போட்டி இன்று (29) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A அணித்தலைவர் உபுல் தரங்க துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார். இதன்படி முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை A தரப்புக்கு ஆரம்ப வீரர்களாக களம் வந்திருந்த அணித்தலைவர் உபுல் தரங்க மற்றும் அவிஷ்க பெர்னாந்து ஆகியோர் அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்கள் சேர்த்தனர்.
அதன்படி அபாரமாக ஆடிய இரண்டு வீரர்களும் இலங்கை A அணியின் முதல் விக்கெட்டுக்காக இரட்டைச்சத (206) இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்ததுடன் தனி நபர்களாக அதிரடி சதங்களையும் பூர்த்தி செய்தனர். இதில், உபுல் தரங்க 108 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 15 பெளண்டரிகள் அடங்கலாக 120 ஓட்டங்களைப் பெற, மறுமுனையில் அவிஷ்க பெர்னாந்து 94 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 13 பெளண்டரிகள் என்பவற்றை உள்ளடக்கி 112 ஓட்டங்களினை குவித்திருந்தார். அத்தோடு, இந்த 112 ஓட்டங்கள் அவிஷ்க பெர்னாந்து அயர்லாந்து A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் பெற்ற 3ஆவது சதமாகவும் அமைந்திருந்தது.
Photos: Ireland A Team Tour to Sri Lanka 2018/19 – 5th ODI
தொடர்ந்து அவிஷ்க பெர்னாந்து – உபுல் தரங்க ஜோடியுடன் இலங்கை A அணிக்கு இன்னும் வலுச்சேர்க்கும் விதமாக மத்திய வரிசையில் வந்த தேசிய அணி வீரர்களான தசுன் சானக்க மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோரும் அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினர். அதில், தசுன் சானக்க 26 பந்துகளை மட்டும் முகம்கொடுத்து 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை குவிக்க, சத்துரங்க டி சில்வா 23 பந்துகளில் 5 இமாலய சிக்ஸர்கள் 2 பெளண்டரிகள் என்பன அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இப்படியாக தமது வீரர்களின் அதிரடியான துடுப்பாட்ட உதவியோடு இலங்கை A அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 403 என்ற இமாலய ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
அயர்லாந்து A அணியின் பந்துவீச்சில் பலர் இலங்கை A அணிக்கு ஓட்டங்களை வாரி வழங்கிய போதிலும் கரேத் டெலானி 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், வலதுகை பந்துவீச்சாளர் பீட்டர் சேஸ் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்து ஆறுதல் தந்திருந்தனர்.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட மிகவும் கடின இலக்கான 404 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து A அணி, 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.
அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டத்தில் நீல் ரொக் அரைச்சதம் ஒன்றுடன் 56 பந்துகளுக்கு 78 ஓட்டங்களை குவித்து அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, லோர்கன் டக்கர் அரைச்சதம் ஒன்றுடன் 53 ஓட்டங்களை குவித்திருந்தார்.
>>அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 2020 மகளிர் T20 உலகக் கிண்ணம்
இலங்கை A அணியின் பந்துவீச்சில் அசேல குணரத்ன 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்ய, கமிந்து மெண்டிஸ் மற்றும் தசுன் சானக்க ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
இலங்கை A அணியிடம் இப்போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் வைட்வொஷ் செய்யப்பட்டிருக்கும் அயர்லாந்து A அணி, முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரினையும் 1-0 என இலங்கை A அணியிடம் பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















