2025 ஐபிஎல் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

Indian Premier League 2025

75
Indian Premier League 2025

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று (12) நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதனை அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 அத்தியாயங்களைக் கடந்து, 18ஆவது அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 557 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது. இதில் மொத்ததம் 62 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 182 வீரர்கள் 639 கோடியே 15 இலட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இதனிடையே, ஐபிஎல் தொடரின் 18ஆவது அத்தியாயமானது எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்றும் இறுதிப்போட்டி மே 25ஆம் திகதி நடைபெறும் என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று (12) நடைபெற்ற பிசிசிஐ இன் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் சுக்லா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதலாவது மற்றும் இறுதிப்போட்டிகள் இரண்டும் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறலாம் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், விரைவில் பிசிசிஐ அதுதொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் தெரிவித்த அவர், அடுத்த மாதம் ஆரம்கமாகவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இந்திய அணி ஜனவரி 18 அல்லது 19ஆம் திகதி அறிவிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<