இன்று (29) நடைபெற்று முடிந்திருக்கும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T-20 போட்டியில் 36 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியிருக்கும பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட  தொடரையும் 3-0 என வைட் வொஷ் வெற்றியுடன் கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானின் லாஹூர் நகரின் கடாபி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு லாஹூரில் வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி அந்நாட்டிற்கு சென்று விளையாடும் முதலாவது கிரிக்கெட் போட்டி இதுவாக அமைந்திருந்தது.

இன்றைய போட்டிக்காக இலங்கை அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அஷான் பிரியஞ்சனுக்குப் பதிலாக சகலதுறை வீரரான சத்துரங்க டி சில்வா இலங்கை அணிக்காக T-20 போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார்.

மறுமுனையில் பாகிஸ்தான் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. காயமுற்ற உஸ்மான் கான் மற்றும் அஹ்மட் ஷேசாத் ஆகிய வீரர்களுக்கு பதிலாக உமர் அமீன் மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து தமது சொந்த மண்ணில் துடுப்பாட்டத்தை பாகிஸ்தான் அணி உமர் அமீன் மற்றும் பக்கார் ஸமான் ஆகியோருடன் ஆரம்பித்திருந்தது. இரண்டு வீரர்களும் சிறப்பான ஆரம்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தனர்.

மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை A அணி

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில்…

பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை தில்ஷான் முனவீர கைப்பற்றியிருந்தார். 27 பந்துகளில் 31 ஓட்டங்களைக் குவித்திருந்த பக்கார் ஸமான் பாகிஸ்தானின் முதல் விக்கெட்டாக மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

தொடர்ந்து பாகிஸ்தானின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உமர் அமீன் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதில் உதவியிருந்தார். எனினும், இசுரு உதானவின் பந்துவீச்சினால் அவரது சிறப்பான இன்னிங்ஸ் நிறைவடைந்தது. ஆட்டமிழக்கும் போது அமீன் 37 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இதனையடுத்து சொஹைப் மலிக் காட்டிய அதிரடியோடு பாகிஸ்தான் 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் அதிரடியாக ஆடிய சொஹைப் மலிக் 24 பந்துகளில் தனது ஆறாவது T-20 அரைச்சதத்தோடு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 51 ஓட்டங்களைப் பெற்றார். அத்தோடு பாபர் அசாமும் 34 ஓட்டங்களைக் குவித்து பாகிஸ்தானுக்கு வலுச்சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் விக்கும் சஞ்சய, இசுரு உதான மற்றும் தில்ஷான் முனவீர ஆகிய வீரர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து சவலான வெற்றி இலக்கான 181 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியிருந்தது.

எனினும், இந்த நிலையில் மத்தியவரிசை வீரராக களம் நுழைந்திருந்த தசுன் சானக்க சிறிது நேரம் போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் ஏனைய வீரர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவற 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணியானது 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 144 ஓட்டங்களை மாத்திரம் குவித்து போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதத்தினை பூர்த்தி செய்த தசுன் சானக்க 36 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

சிங்கர் ப்ரீமியர் லீக் கிண்ணத்தை சுவீகரித்த டீஜேய் லங்கா

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 25ஆவது சிங்கர் ப்ரீமியர் லீக் நொக் அவுட் இறுதிப் போட்டியில் எல்…

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் அமீர் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி T-20 போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சை பதிவு செய்திருந்தார். அத்தோடு பாஹிம் அஷ்ரப் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை சுருட்டி தனது அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் தொடர் போன்று T-20 தொடரிலும் பாகிஸ்தானினால் வைட் வொஷ் செய்யப்பட்டிருக்கும் இலங்கை அணிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இது 16 ஆவது தொடர் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 180/3 (20)சொஹைப் மலிக் 51(24), பாபர் அசாம் 34(31), தில்ஷான் முனவீர 26/1(4)

இலங்கை – 144/9 (20)தசுன் சானக்க 54(36), சத்துரங்க டி சில்வா 21(20), மொஹமட் அமீர் 13/4(4), பாஹிம் அஷ்ரப் 19/2(4)

போட்டி முடிவு பாகிஸ்தான் 36 ஓட்டங்களால் வெற்றி