முதலாவது குவாலிபையரில் சென்னை

174
Image Courtesy - IPLT20.COM

ஐ.பி.எல். தொடரில் இன்று (05) நடைபெற்ற முதலாவது போட்டியில் தங்களுடைய இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்ற போதும் முதலாவது குவாலிபையர் (Qualifier) போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கே.எல். ராஹுலின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியால் ப்ளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறமுடியாவிட்டாலும், புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துடன் தொடரை நிறைவுசெய்துள்ளது.

ப்ளே-ஓஃப் சுற்றை நோக்கி முன்னேறும் கொல்கத்தா அணி

ஐ.பி.எல். தொடரில் நேற்று (09) நடைபெற்ற…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சென்னை அணிக்கு வழங்கியது. சென்னை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷேன் வொட்சன் ஆட்டமிழந்த போதும், பாப் டு ப்ளெசிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்தின் மூலம், சென்னை 170 ஓட்டங்களை குவித்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெப் டு ப்ளெசிஸ் 55  பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 96 ஓட்டங்களை விளாசியதுடன், சுரேஷ் ரெய்னா 38 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றறார். பந்து வீச்சில் சாம் கரன் 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 171 என்ற வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கே.எல். ராஹுல் அதிரடியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.  தங்களுடைய ப்ளே-ஓஃப் சுற்றுக்கு வேகமாக ஓட்டங்களை பெறவேண்டிய கட்டாயத்தில் கே.எல். ராஹுல் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்.

அதிரடியாக ஆடிய இவர், வெறும் 19 பந்துகளில் அரைச்சதத்தை கடந்தார். இந்த பருவகாலத்தில் பெறப்பட்ட மூன்றாவது வேகமான அரைச்சதமாக இது பதிவாகியிருந்தது.  இதற்கு முன்னர் ஹர்திக் பாண்டியா கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்திருந்ததுடன், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 18 பந்துகளில் அரைச்சதம் கடந்திருந்தார்.

இவ்வாறு பஞ்சாப் அணி வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்ட நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய பந்து வீச்சில் மாற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக 14.2 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை அடைந்தால், சென்னை அணி தரவரிசையில் பின்தள்ளப்படும் நிலை நேரிட்டிருந்தது. இதன் காரணமாக பந்து வீச்சில் சென்னை அணி மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.

இதன் அடிப்படையில் இலக்கினை நெருங்கிய பஞ்சாப் அணி 18 ஆவது ஓவரில் தங்களுடைய வெற்றி இலக்கை அடைந்தது. அதிரடியாக துடுப்பெடுத்தாடிய கே.எல்.ராஹுல் 36 பந்துகளில் 71 ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் நிக்கோலஸ் பூரன் 22 பந்துகளில் 36 ஓட்டங்களை விளாசினார். இவர்களுக்கு அடுத்தப்படியாக கிரிஸ் கெயில் 28 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி 12 புள்ளிகளை பெற்றுக்கொண்ட போதும், 7 ஆவது இடத்தையே பெறக்கூடியதாக இருந்தது. எனினும், சென்னை அணி முதலிரண்டு இடங்களுக்குள் தங்களை தக்கவைத்து முதலாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சென்னை சுப்பர் கிங்ஸ் – 170/5 (20) – பாப் டு ப்ளெசிஸ் 96(55), சுரேஷ் ரெய்னா 53(38), சாம் கரன் 35/3

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 173/4 (18) – கே.எல். ராஹுல் 71(36), நிக்கோலஸ் பூரன் 36(22), ஹர்பஜன் சிங் 57/3

முடிவு – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<