சூர்யகுமாரின் அதிரடியோடு மும்பை இந்தியன்ஸ் வெற்றி

109

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 57ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது, குஜராத் டைடன்ஸை 27 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>> உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான மே.இ.தீவுகள் குழாம் அறிவிப்பு

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டியானது நேற்று (12) மும்பை வங்கடே அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைடன்ஸ் அணியின் தலைவர் ஹார்திக் பாண்டியா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழங்கினார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியினர் சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியோடு 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்கள் எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய கன்னி IPL சதத்தோடு 49 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் இது சூர்யகுமார் யாதவ்வின் நான்காவது T20 சதமாகவும் பதிவு செய்யப்பட்டது.

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் ரஷீட் கான் 30 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 219 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய குஜராத் டைடன்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறியிருந்தது. ஒரு கட்டத்தில் அவ்வணி 55 ஓட்டங்களுக்கு இழந்து காணப்பட்ட போதும் பின்வரிசையில் களம் வந்த ரஷீட் கான் வெற்றிக்காக போராடியிருந்தார். எனினும் ரஷீட் கானின் போராட்டம் வீணாக குஜராத் டைடன்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

>> பாகிஸ்தானை எச்சரித்த ICC

குஜராத் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை போராடிய ரஷீட் கான் வெறும் 32 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காது நின்றார். அதேவேளை குஜராத் அணிக்காக டேவிட் மில்லரும் 26 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் 31 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், பியூஸ் சாவ்லா மற்றும் குமார் கார்திகேயா ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் – 218/5 (20) சூர்யகுமார் யாதவ் 103(49)*, ரஷீட் கான் 30/4(4)

குஜராத் டைடன்ஸ் – 191/8 (20) ரஷீட் கான் 79(32)*, டேவிட் மில்லர் 41(26), ஆகாஷ் மாத்வால் 31/3(4)          

முடிவு – மும்பை இந்தியன்ஸ் 27 ஓட்டங்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<