வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்தது சன்ரைசர்ஸ் அணி

153

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக நேற்று (04) நடைபெற்ற விறுவிறுப்பாபான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

IPL தொடரில் நேற்று நடைபெற்ற 47ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் டக் அவுட்டாக, தொடர்ந்து வந்த வெங்கடேஷ் அய்யர் 7 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.

ஜேசன் ரோய் 20 ஓட்டங்களுடன் வெளியேற, கொல்கத்தா அணி 4.4 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அணித் தலைவர் நிதிஷ் ராணா – ரிங்கு சிங் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இதில் நிதிஷ் ராணா 31 பந்துகளில் 42 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 35 பந்துகளில் 46 ஓட்டங்களையும் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் அண்ட்ரு ரஸல் 2 சிக்ஸர்களை விளாசி 24 ஓட்டங்களை எடுக்க, கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்களைக் குவித்தது.

சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ ஜென்சன் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகளையும் அடித்து 20 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹெரி புரூக் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஜோடி அதிரடியாக விளையாடி சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியிலக்கை இலகுவாக்கினர். ஆனால் கிளாசென் 20 பந்துகளில் 36 ஓட்டங்களுடனும், பொறுமையாக ஆடிய ஏய்டன் மார்க்கம் 40 பந்துகளில் 41 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வீசினார். மூன்றாவது பந்தில் அப்துல் சமத்தை 21 ஓட்டங்களில் வருண் வெளியேற்றினார். கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதனை புவனேஷ்வர்குமார் எதிர்கொண்டார். அந்தப் பந்தை வருண் துல்லியமாக வீசி ஓட்டங்களை எதையும் கொடுக்கவில்லை இதனால் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் இம்முறை IPL தொடரில் கொல்கத்தா அணி 4ஆவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடிக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6ஆவது தோல்வியுடன் தொடர்ந்து 9ஆவது இடத்தில் உள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<