இலங்கையின் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் AFC சம்பியன்ஷிப் தகுதிகாண் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டியின் முதல் கட்ட மோதலில் (First Leg) நாளை (22) பூட்டானின் பாரோ கால்பந்து கழகத்தை கொழும்பில் எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டிக்கு முன்னரான உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பு இன்று (21) கொழும்பு கால்பந்து இல்லத்தில் இடம்பெற்றது. இதில், AFC சம்பியன்ஷிப் தகுதிகாண் தொடரில் முதல் முறை மோதவுள்ள இவ்விரண்டு அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அணித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
அங்கு தமது அணியின் தயார்படுத்தல்கள் குறித்து கருத்து தெரிவித்த பாரோ அணியின் பயிற்றுவிப்பாளரும், பூட்டான் தேசிய அணியின் முன்னாள் கோல் காப்பாளருமான புஷ்பலால் சர்மா,
”எமது குழாத்தில் பூட்டான் தேசிய அணியில் இடம்பெற்றுள்ள 3, 4 வீரர்களும், வெளிநாட்டு வீரர்கள் 4 பேரும் உள்ளனர். இந்தப் போட்டிக்காக நாம் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சிறந்த முறையில் தயாராகியுள்ளோம்” என்றார்.
பாரோ அணியில் கமரூன் நாட்டு வீரர்கள் 3 பேர் உள்ள அதேவேளை, மேலதிகமாக ஆசிய வீரர் ஒருவரை உள்வாங்க முடியும் என்ற விதிமுறைக்கு அமைய இந்தியாவின் குனால் தமாங் குரழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல் 22ஆம் திகதி(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. குளிரான காலிநிலைக்கு அதிகம் பழக்கப்பட்ட பாரோ அணியினருக்கு இலங்கையின் சூடான காலநிலை அதிகம் சவால்கொடுக்கலாம். இது குறித்து கருத்து தெரிவித்த புஷ்பலால் சர்மா,
”இலங்கையில் உஷ்னமான காலநிலை இருப்பது தெரியும். எனவே, நாம் எமதுநாட்டின் தென் பகுதிக்கு சென்று, அங்கு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். எனவே, இங்கே உள்ள காலநிலைக்கு ஏற்ப நாம் எம்மை பழக்கப்படுதிக்கொண்டுள்ளோம். எனவே, பலமான டிபெண்டர்ஸ் அணிக்கு எதிராக நாம் இறுதிவரை சிறந்த போட்டியைக் கொடுப்போம்” என்றார்.
அதேபோன்று, பாரோ அணியின் தலைவர் ஜிங்மே ஷேரிங் டோர்ஜி மற்றும் முன்னணி வீரர் ஷென்ஷோ ஆகிய இருவரும் பூட்டான் தேசிய அணியில் இடம்பெற்று 2016ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக கொழும்பில் விளையாடிய அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர்.
Photos: Defenders FC (SRI) v Paro FC (BHU) | Pre-Match Press Conference | 1st Leg | AFC Cup 2020
ThePapare.com | Viraj Kothalawala | 21/01/2020 Editing and re-using images without……
இந்நிலையில், ஜிங்மே ஷேரிங் டோர்ஜி இன்றைய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், ”எமது அணியில் உள்ள அதிகமான வீரர்கள் இலங்கையில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். எனினும், டிபெண்டர்ஸ் அணிக்கு எதிராக நாம் சிறப்பாக ஆடுவதற்கு முழுயைமாக தயாராகவுள்ளோம்” என்றார்.
இதேவேளை, டிபெண்டர்ஸ் அணி இலங்கையில் ஏனைய அணிகளுக்காக ஆடும் வெளிநாட்டு வீரர்கள் மூவரை இந்த தொடருக்காக தமது குழாத்தில் இணைத்துள்ளது. அதன்படி, செரண்டிப் அணியின் முன்கள வீரர் இவான்ஸ் அசன்டே, ரெட் ஸ்டார்ஸ் அணியின் இஸ்மாயில் அபுமெரெ மற்றும் ரினௌன் அணியின் பின்கள வீரர் பிரன்சிஸ் அக்பெடி ஆகிய வீரர்கள் டிபெண்டர்ஸ் அணிக்காக ஆடவுள்ளனர்.
இன்றைய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்தின் பயிற்றுவிப்பாளர் டட்லி ஸ்டேன்வோல், ”நாம் தொடர்ச்சியாக 3 வாரங்கள் அணியைத் தயார்படுத்தி வருகின்றோம். 3 பயிற்சிப் போட்டிகளிலும் ஆடியுள்ளோம். இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ள இந்த மோதலின் முதல் கட்டம் எமது சொந்த மைதானத்தில் இடம்பெறுகின்றது. எனவே, இந்தப் போட்டியில் எமக்கு வெற்றி முக்கியம்” என்றார்.
போட்டியைப் பார்வையிட: Live – Defenders FC v Paro FC | 1st Leg | AFC Cup 2020
டிபெண்டர்ஸ் அணியில் நீண்ட காலம் ஆடிய முன்னணி வீரர் மொஹமட் இஸ்ஸடீன் இந்த குழாமில் இடம்பெறாமை குறித்து குறிப்பிட்ட டட்லி, இஸ்ஸடீன் அண்மைக்காலங்களில் வெளிப்படுத்திய திறமை சிறந்த முறையில் இல்லாமையினால், இளம் வீரர்கள் அவரது இடத்தை நிரப்புகின்றனர் என்றார்.
இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக வழங்கப்படும்
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<