பிளே ஒப் வாய்ப்பினை அதிகரித்துக் கொண்ட லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ்

85

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 63ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் வீரர்கள் 5 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றனர்.

மேலும், இந்த வெற்றியுடன் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் இந்தப் பருவத்திற்கான IPL தொடரில் 7ஆவது வெற்றியினைப் பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தினைப் பிடித்திருப்பதுடன் பிளே ஒப் சுற்றுக்கான தமது வாய்ப்பினையும் அதிகரித்திருக்கின்றது.

நிதிஷ் ராணவுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்!

இவ்விரு அணிகளுக்கு இடையிலான IPL போட்டியானது செவ்வாய்க்கிழமை (16) லக்னோவின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்கு வழங்கியது.

அதன்படி லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியினர் போட்டியில் முதலில் துடுப்பாடி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தனர். அவ்வணி சிறந்த ஆரம்பம் ஒன்றினை பெறாத போதும் பின்னர் துடுப்பாட்டத்தில் அசத்திய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்கள் பெற்றார்.

மறுமுனையில் லக்னோவ் அணியின் தலைவரான குருனால் பாண்டியா உபாதை காரணமாக மைானத்தினை விட்டு வெளியேற முன்னர் 42 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜேசன் பெஹ்ன்ட்ரோப் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 178 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது இஷான் கிஷன் மற்றும் டிம் டேவிட் ஆகியோரது துடுப்பாட்டத்தோடு வெற்றிக்காக போராடிய போதும், அவர்களின் போராட்டம் வீணாகியது.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் வெறும் 5 ஓட்டங்களால் துரதிஷ்ட தோல்வியொன்றைத் தழுவியது.

டோனியின் அடுத்த கட்டம் என்ன? கிரிக்கெட் ஆடுவாரா? இல்லையா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக இஷான் கிஷன் 39 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 32 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் யாஷ் தாக்கூர் மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்ட நாயகனாக லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவாகியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் – 177/3 (20) மார்கஸ் ஸ்டொய்னிஸ் 89(47)*, குருனால் பாண்டியா 49(42), ஜேசன் பெஹ்ரென்ட்ரோப் 30/2(4)

மும்பை இந்தியன்ஸ் – 172/5 (20) இஷான் கிஷன் 59(39), டிம் டேவிட் 32(19)*, ரவி பிஸ்னோய் 26/2(4)

முடிவு – லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் 05 ஓட்டங்களால் வெற்றி 

இம்முறை இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<