பந்து தாக்கி பிரபல அவுஸ்திரேலிய வீரர் உபாதை

308
Warner retires hurt after bouncer blow

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், உப தலைவருமான டேவிட் வோர்னர் இன்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் போது பவுண்சர் பந்து தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்மாத இறுதியில் அவுஸ்திரேலிய அணி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த போட்டித் தொடரிற்கான அவுஸ்திரேலிய குழாமில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கிடையிலான 3 நாள் பயிற்சிப் போட்டியொன்று டார்வினில் நடைபெற்று வருகின்றது.

இதில் ஸ்டிவ் ஸ்மித் தலைமையிலான பதினொருவர் அணிக்கும், டேவிட் வோர்னர் தலைமையிலான பதினொருவர் அணிக்கும் இடையில் நடைபெற்றுவருகின்ற இப்போட்டியின் 2ஆவது நாளான இன்று தமது 2ஆவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய போது ஹேசில்வுட் வீசிய பவுண்சர் பந்து வோர்னரின் தலையை தாக்கியுள்ளளது. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த வோர்னர் தலைக்கவசத்தை கழற்றியவாறு உடனே மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக சிகிச்சையளிப்பதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி பந்து தாக்கிய கழுத்துப் பகுதியில் ஐஸ்கட்டிகள் கொண்டு ஒத்தடம் வழங்கப்பட்டுள்ளது.Warner retires hurt after bouncer blow

இதனையடுத்து அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஸ்கேன் பரிசோதனையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், வோர்னர் தற்போது நல்ல நிலையில் உள்ளார் எனவும், நாளை நடைபெறவுள்ள இறுதி நாள் ஆட்டத்தில் அவர் கலந்துகொள்ளமாட்டார் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ஓட்டங்களைக் குவித்த வோர்னர், இன்று நடைபெற்ற 2ஆவது இன்னிங்ஸில் வெறும் 14 பந்துகளுக்கு முகங்கொடுத்து 2 ஓட்டங்களைக் குவித்த நிலையில் இவ்வாறு பந்து கழுத்தில் தாக்கி உபாதைக்குள்ளாகினார்.

இந்நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள 14 வீரர்களைக் கொண்ட அவுஸ்திரேலிய அணி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.