அபார பந்துவீச்சோடு குவாலிபையர் போட்டிக்கு தெரிவான மும்பை

52
Lucknow Super Giants vs Mumbai Indians

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் வீரர்களை 81 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>> இலங்கை வீரர்களின் அபாரத்தோடு இறுதிப் போட்டியில் சென்னை

அதேவேளை இந்த வெற்றியுடன் மும்பை இந்தியன்ஸ் 2023ஆம் ஆண்டு IPL தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியுடன் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெறுவதோடு, எலிமினேட்டர் போட்டியில் தோல்வியினைத் தழுவிய லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் IPL தொடரிலிருந்து வெளியேறுகின்றது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணிகள் இடையிலான முதல் குவாலிபையர் போட்டி நேற்று (24) சென்னை நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை லக்னோவ் வீரர்களுக்கு வழங்கியது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் கெமரூன் கீரின் 23 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் பெற, சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

லக்னோவ் அணியின் பந்துவீச்சில் நவீன்-உல்-ஹக் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, யாஷ் தாக்கூர் 03 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 183 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய லக்னோவ் சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்ற போதும் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்ததோடு, மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலை சமாளிப்பதிலும் தடுமாற்றம் காண்பித்தது.

தொடர்ந்த ஆட்டத்தில் 16.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணி 101 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.

>> RCB அணியின் வெளியேற்றத்தின் பின் மனம் திறந்த கோலி

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 27 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் வெறும் 05 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, IPL போட்டிகளில் தான் வெளிப்படுத்திய சிறந்த பந்துவீச்சோடு மும்பை அணியின் வெற்றியினையும் உறுதி செய்தார். போட்டியின் ஆட்டநாயகன் விருதும் ஆகாஷ் மத்வாலிற்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் – 182/8 (20) கெமரூன் கீரின் 41(23), நவீன்-உல்-ஹக் 38/4(4), யாஷ் தாக்கூர் 34/3(4)

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் – 101 (16.3) மார்கஸ் ஸ்டொய்னிஸ் 40(27), ஆகாஷ் மத்வால் 5/5(3.3)

முடிவு – மும்பை இந்தியன்ஸ் 81 ஓட்டங்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<