IPL ஏலத்துக்கு 36 இலங்கை வீரர்கள் பதிவு

Indian Premier League 2022

2773
36 Sri Lankan Players to Register for IPL 2022 Player Auctio

இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்கு, இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த 36 வீரர்கள் பதிவுசெய்துள்ளதாக IPL நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

15ஆவது IPL தொடர் எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் புதிதாக லக்னோ, அஹமதாபாத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பருவத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

இம்முறை IPL தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. அதன்படி 8 அணிகளும் 27 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன.

புதிய அணிகளான லக்னோ, அஹமதாபாத் ஆகியவை தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் நேற்று (21) வெளியானது. லக்னோ அணியில் கே.எல் ராகுல் (ரூ.17 கோடி), மார்கஸ் ஸ்டொய்னிஸ் (ரூ.9.2 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகியோரும், அஹமதாபாத் அணியில் ஹர்திக் பாண்ட்யா, ரஷித் கான் தலா (ரூ.15 கோடி), சுப்மன் கில் (ரூ.8 கோடி) ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ராகுல் லக்னோ அணிக்கும், ஹர்திக் பாண்ட்யா அஹமதாபாத் அணிக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த ஆண்டு IPL தொடருக்கான வீரர்கள் ஏலம் பெப்ரவரி 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறுகிறதுடன், IPL ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம் இன்று (22) வெளியானது.

இதில், தேசிய அணிகளுக்காக விளையாடிய 270 வீரர்கள் பதிவுசெய்துள்ளதுடன், தேசிய அணியில் அறிமுகமாகாத 903 வீரர்கள் மற்றும் அங்கத்துவ நாடுகளில் இருந்து 41 வீரர்களும் பதிவுசெய்துள்ளனர். இதில் இருந்து இறுதிப் பட்டியல் முடிவு செய்யப்படும்.

இதனிடையே, IPL ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். இதற்கான பட்டியலில் 49 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலக்க கிண்ணத்தில் தொடர் நாயகன் விருதை வென்ற டேவிட் வோர்னர், மிட்சேல் மார்ஷ் (அவுஸ்திரேலியா), ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், இஷான் கிஷன், சுரேஷ் ரெய்னா, தேவ்தத் படிக்கல், அம்பதி ராயுடு, மொஹமட் ஷமி, ஷர்துல் தாகூர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித், பட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா (அவுஸ்திரேலியா), பாப் டு பிளெசிஸ், குயிண்டன் டி கொக், கங்கிஸோ ரபாடா (தென்னாபிரிக்கா), டுவைன் பிராவோ (மேற்கிந்திய தீவுகள்), ட்ரென்ட் போல்ட் (நியூசிலாந்து), மார்க்வுட் (இங்கிலாந்து), சகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்) ஆகிய வீரர்களுக்கும் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, 17 இந்திய வீரர்களுக்கும், 32 வெளிநாட்டு வீரர்களுக்கும் அடிப்படை விலை ரூ.2 கோடி ஆகும்.

இதேவேளை, இந்த ஆண்டு IPL ஏலத்துக்கு இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 36 வீரர்கள் பதிவுசெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்ததெந்த வீர்ர்கள் குறித்த விபரம் வெளியாகவில்லை.

இறுதியாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற IPL தொடரின் 2ஆவது கட்டத்தில் வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர ஆகிய இருவரும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவுசெய்துள்ள வீரர்கள்

  • இந்திய வீரர்கள் (அறிமுகமானவர்கள்) – 61
  • வெளிநாட்டு வீரர்கள் (அறிமுகமானவர்கள்) – 209
  • அங்கத்துவ நாட்டு வீரர்கள் – 41
  • அறிமுகமாகாத, குறைந்தது ஒரு IPL போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள் – 143
  • அறிமுகமாகாத, குறைந்தது ஒரு IPL போட்டியில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் – 6
  • இந்திய வீரர்கள் (அறிமுகமாகாதவர்கள்) – 692
  • வெளிநாட்டு வீரர்கள் (அறிமுகமாகாதவர்கள் – 62

அணிகள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கை

  • ஆப்கானிஸ்தான் – 20
  • அவுஸ்திரேலியா – 59
  • பங்களாதேஷ் – 9
  • இங்கிலாந்து – 30
  • அயர்லாந்து – 3
  • நியூசிலாந்து – 29
  • தென்னாபிரிக்கா – 48
  • இலங்கை – 36
  • மேற்கிந்திய தீவுகள் – 41
  • ஜிம்பாப்வே 2

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<