2022 IPL இல் அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

241

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் மெகா வீரர்கள் ஏலம் நடைபெறவிருக்கும் நிலையில், தொடரில் பங்கெடுக்கும் அணிகள் தமது அணிகளுக்காக தக்க வைத்திருக்கும் வீரர்கள் குறித்த விபரம் வௌியிடப்பட்டிருக்கின்றது.

>>ராகம கழகத்தை வீழ்த்தி சம்பியனானது தமிழ் யூனியன்

அடுத்த ஆண்டுக்கான (2022) IPL தொடரில் 10 அணிகள் பங்கெடுக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த தொடரில் ஏற்கனவே பங்கெடுக்கின்ற எட்டு அணிகளும் மொத்தமாக 27 வீரர்களை தமது அணிகளில் தொடர்ந்து தக்க வைத்திருக்கின்றன.

இதில் IPL தொடரில் ஐந்து சம்பியன் பட்டங்களுடன் மிகவும் வெற்றிகரமாக காணப்படும் அணியான மும்பை இந்தியன்ஸ் தமது அணிக்குழாத்தில் அதன் அணித்தலைவர் ரோஹித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் கீரொன் பொலார்ட் ஆகிய வீரர்களை தக்க வைத்திருக்கின்றது.

இந்த வீரர்களில் ரோஹித் சர்மா இந்திய நாணயப்படி 16 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியினால் தக்க வைத்திருக்கப்பட்டிருப்பதோடு, ரோஹித் சர்மாவே மும்பை இந்தியன்ஸ் அணியினால் அதிக விலைக்கு தக்க வைக்கப்பட்ட வீரராகவும் காணப்படுகின்றார்.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் இஷன் கிஷான் போன்ற வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியினால் தொடர்ந்து தக்க வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>இலங்கை இளையோரினை வீழ்த்திய இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி

அதேநேரம், சென்னை சுபர் கிங்ஸ் அணி மஹேந்திர சிங் டோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருத்துராஜ் காய்க்வாட் ஆகிய வீரர்களை தமது அணிக்குழாத்தில் தொடர்ந்து தக்க வைத்திருக்கின்றது.

இதில் கடந்த ஆண்டு சென்னை சுபர் கிங்ஸ் அணியினை சம்பியன் பட்டம் வெல்வதற்கு வழிநடாத்திய மஹேந்திர சிங் டோனி இந்திய நாணயப்படி 12 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட, ரவிந்தீர ஜடேஜாவிற்கு 16 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஆண்டுக்கான IPL தொடரில் சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்திய பாப் டு பிளேசிஸ், டுவெய்ன் பிராவோ போன்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

டெல்லி கெபிடல்ஸ் அணியில் ரிஷாப் பாண்ட், அக்ஷர் படேல், பிரித்தி சாவ் மற்றும் என்ட்ரிஜ் நொர்கியே ஆகிய வீரர்கள் தக்க வைக்கப்பட அவ்வணியில் இருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ககிஸோ றபாடா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.

>>தொடை உபாதைக்கு முகம் கொடுத்துள்ள அஞ்செலோ மெதிவ்ஸ்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் அதன் தலைவராக செயற்பட்ட இயன் மோர்கனுக்கு விடுவிப்பு வழங்கப்பட்ட நிலையில், அன்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுனில் நரைன் ஆகிய வீரர்கள் தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியினை நோக்கும் போது, அவ்வணியின் தலைவரான சஞ்சு சம்சன், ஜோஸ் பட்லர் மற்றும் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்கள் மாத்திரமே தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் சஞ்சு சாம்சனுக்கு தக்க வைப்பு பணமாக இந்திய நாணயப்படி 14 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினர் தமது அணிக்குழாத்தில் தமது முன்னாள் அணித்தலைவர் விராட் கோலி, கிளன் மெக்ஸ்வெல் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகிய வீரர்களை தக்க வைத்திருக்கின்றனர். அதேநேரம், அடுத்த IPL தொடரின் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புதிய தலைவருடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினை நோக்கும் போது அங்கே, கேன் வில்லியம்சன், அப்துல் சமட் மற்றும் உம்ரான் மலிக் ஆகிய வீரர்கள் தக்க வைக்கப்பட, ரஷீட் கானுக்கு விடுவிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம், சன்ரைஸர்ஸ் அணியினால் இந்திய நாணயப்படி 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்டிருக்கும் கேன் வில்லியம்சன், 2022ஆம் ஆண்டு IPL தொடருக்கு முன்னர் அணியொன்றினால் அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட வெளிநாட்டு வீரராகவும் காணப்படுகின்றார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியினைப் பொறுத்தவரை அவ்வணி தமது அணித்தலைவரான KL ராகுலினை விடுவித்திருப்பதோடு, மயான்க் அகர்வால் மற்றும் அர்ஷதீப் சிங் ஆகிய இரண்டு வீரர்களை மாத்திரமே தக்க வைத்திருக்கின்றது. அதோடு 2022ஆம் ஆண்டுக்கான IPL தொடருக்கு முன்னர் குறைவான வீரர்களை தக்க வைத்த அணியாகவும் பஞ்சாப் கிங்ஸ் காணப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<