2022 IPL தொடர் மார்ச் 26ஆம் திகதி ஆரம்பம்

Indian Premier League 2022

118

இந்த ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி முதல் மே மாதம் 29ஆம் திகதி வரை நடைபெறும் என பிசிசிஐ மற்றும் (IPL) நிர்வாகக் குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், மார்ச் 27ஆம் தேதி ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகும் என தகவல் வெளியாகின.

ஆனால், IPL தொடரை ஒளிபரப்பும் உரிமையை பெற்றுக்கொண்டுள்ள ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம், மார்ச் 27ஆம் திகதிக்குப் பதிலாக ஒருநாள் முன்னதாக, 26ஆம் திகதி சனிக்கிழமை IPL தொடரை ஆரம்பிக்கும்படி கோரிக்கை விடுத்தது. இதன்படி, நேற்று (24) நடைபெற்ற IPL நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் IPL தலைவர் பிரிஜேஷ் படேல் கருத்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை போன்ற வெளிநாட்டு மைதானங்களில் போட்டிகளை நடத்த முதலில் ஆராயப்பட்டது. ஆனால், தற்போது நமது நாட்டில் கொரோனா நிலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்து உள்நாட்டிலேயே போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே போட்டிகளை நடத்த பிசிசிஐ நிர்வாகம் உறுதியாக உள்ளது. அத்துடன், IPL தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, மார்ச் 26ஆம் திகதி ஆரம்பமாகும் IPL தொடரின் அனைத்துப் போட்டிகளும் மகாராஷ்ட்ரா மாநிலத்திலேயே நடத்தப்படவுள்ளன. மும்பை, நவி மும்பை, புனே 3 பகுதிகளில் உள்ள நான்கு மைதானங்கள் இதற்காக தயார்படுத்தப்பட்டுள்ளன.

இதில் மும்பையில் உள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம், நவி மும்பையில் உள்ள DY பட்டீல் மைதானம், மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான கஹுஞ்சே மைதானம் மற்றும் புனேவில் உள்ள மைதானங்களில் லீக் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் நடக்கும் மைதானங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனினும், பிளே-ஆப் சுற்றுப்போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியை அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

எனினும், போட்டிகளைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மகாராஷ்டிரா மாநில அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி அதற்கான அனுமதி முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முதலில் 40 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், முழு அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<